Aran Sei

” எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக்கலாம் ” – அரசு, ” மூன்று சட்டங்களையும் ரத்து செய்க” – விவசாயிகள்

Image Credit : indianexpress.com

ரசு மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களை ரத்து செய்யா விட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும், ரயில்வே தடங்களை மறிக்கப் போவதாகவும் இந்தச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

“பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே புதிய போராட்டங்களை அறிவிப்பது சரியில்லை” என்று விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

விவசாய சீர்திருத்தச் சட்டங்களை திருத்துவதாக அரசு முன் வந்த அடுத்த நாள், பாரதீய கிசான் யூனியன் (தகவுண்டா) தலைவர் பூட்டா சிங் “நாங்கள் இந்த மூன்று சட்டங்களையும் எதிர்க்கிறோம். பிரதமர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் நாங்கள் ரயில் தண்டவாளங்களை மறிப்போம்” என்று கூறியுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையையும், டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையையும் டிசம்பர் 12-ம் தேதி மறிக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். வட இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு “டெல்லி சலோ” என்ற டெல்லியை நோக்கிச் செல்லும்படி அறைகூவலை விடுத்துள்ளனர், விவசாய சங்கங்கள். நாட்டின் பிற பகுதிகளில் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்துமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Image Credit : indianexpress.com
பாதுகாப்புப் படையினருக்கு டீ வழங்கும் போராடும் விவசாயி – Image Credit : indianexpress.com

விவசாயிகள் அரசு மூன்று சட்டங்களை திரும்பப் பெறும்படி கோரும் நேரத்தில், அரசு விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டத்தைத் திரும்பப் பெறும்படி கேட்டு வருகிறது. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “அடுத்தகட்ட போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக ஒரு தீர்வை காணும்படி விவசாய சங்கங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பற்றி சொல்லும் போது, “எந்த ஒரு சட்டமும் முழுக்க முழுக்க மோசமாக இருக்க முடியாது. விவசாயிகளை மோசமாக பாதிக்கும் பகுதிகளை விவாதிப்பதற்கு அரசு தயாராக உள்ளது” என்று தோமர் கூறினார்.

Image Credit : indianexpress.com
சிங்கு எல்லையில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றும் விவசாய சங்கத் தலைவர் Image Credit : indianexpress.com

விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் ஒன்றிய அமைச்சர்களுக்கும் இடையே நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. டிசம்பர் 9-ம் தேதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, அதற்கு முதல் நாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாய சங்கங்களுடன் பேசிய பிறகு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசு புதிய திட்டத்தை விவசாயிகளுக்கு அனுப்பியது.

3 சட்டங்களையும் ரத்து செய்வது வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

நேற்று, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயற்குழு, விவசாயிகள் மீது வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் இயற்றியுள்ளதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது.

ஹரியானாவில், ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஜன்நாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அரசுக்கு தமது ஆதரவை விலக்கிக் கொள்ள திட்டமிட்டு வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

Image Credit : indianexpress.com
சிங்கு எல்லையில் ஹரியானா BKU தலைவர் குர்னாம் சிங் சதூனி. Image Credit : indianexpress.com

நேற்று, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக்கின் பெயரால் பேச்சு வார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. உரையாடல் முடிவின்றி தொடர வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த மூன்று விவசாயச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்பு ஒன்றிய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடனோ, எதிர்க்கட்சிகளுடனோ உரையாடல் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்