Aran Sei

இன்று ’ஒரே நாடு, ஒரே விவசாயிகள் எதிர்ப்பு’-நாளை ‘தில்லி சலோ’

மீபத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டங்களுக்கு 18 மாநிலங்களில் உள்ள விவசாயிகள், நேற்று (நவம்பர் 5) சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

’சக்க ஜாம்’ என்ற இந்த ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் 2,500 க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்துள்ளது என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் (AIKSCC) தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  நாடு முழுவதும் 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்றதாகவும், இந்த மாத இறுதியில் தில்லியில், விவசாயிகளை அணிதிரட்டுவதற்கான முன்னேற்பாடு இது என்றும் கூறியுள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், மதியம் முதல் மாலை 4 மணி வரை, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் குவிந்து,மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்கள் அமைதியாகவும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் நடந்ததாக ’தி இந்து’ தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக  விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

”விவசாய சட்டங்கள் மற்றும் மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய 200 இடங்களில் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம்.” என்று பஞ்சாபில் உள்ள பாரதிய கிசான் யூனியனின் (டகவுண்டா) பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங், ‘தி இந்து’விடம் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கான சட்டமல்ல, முதலாளிகளுக்கான சட்டம் : ஜெயரஞ்சன் – வீடியோ

மேலும், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் அதிக அளவில் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், புதுச்சேரியில், சில இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாகவும்  ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்துள்ளன.

மத்திய அரசின் ‘ஒரு நாடு’ என்ற கொள்கையை கேலி செய்யும் விதமாக, “இந்த ஆர்ப்பாட்டங்கள்  ’ஒரே நாடு, ஒரே விவசாயிகள் எதிர்ப்பு ’ என்ற நிலையை தெளிவாகக் காட்டியுள்ளன.” என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது.

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

“விவசாய போராட்டங்கள் ஆங்காங்கே உள்ளூர்களில் மட்டுமே நடக்கின்றன என்ற மத்திய அரசின் கட்டுக்கதை உடைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு தொடங்கி பஞ்சாப் வரை, குஜராத் தொடங்கி  அசாம் வரை, விவசாயிகள் கூடியுள்ளனர். இதன் மூலம் விவசாயிகளின் எதிர்காலத்தை அழிப்பதற்கான சட்டங்களை உருவாக்கும் மத்திய அரசின் திட்டம் தவிடுப்பொடியாகும். ” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்த போராட்டங்களின் மூலம் அழுத்தம் அதிகரித்து வருவதாக நாங்கள் நம்புகிறோம். இது நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், நாங்கள் நடத்தவுள்ள ‘தில்லி சலோ’ போராட்டத்தின் டிரெய்லர் மட்டுமே. பஞ்சாபிலிருந்து 1 லட்சம் விவசாயிகளுடனும், ஹரியானாவிலிருந்து 50 ஆயிரம் விவசாயிகளுடனும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் தலைநகர் தில்லியை நோக்கி நாங்கள் செல்லவுள்ளோம்.” என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அவிக் சஹா கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு

மேலும், “தில்லிக்கு செல்லும் 10 நுழைவு சாலைகளும் பெரும்பாலும் எங்களால் தடுக்கப்படும். காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தினால், நாங்கள் அங்கேயே அமர்ந்திடுவோம். இந்த முறை, பஞ்சாப் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, தில்லியை விட்டு திரும்பிச் செல்லக்கூடாது என்ற திட்டத்துடன் வருகிறார்கள்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்