Aran Sei

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ”டெல்லி செல்வோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து விவசாயிகள் தொடங்கியுள்ள போராட்டம், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பலப்பிரயோகத்தால் ஒடுக்கப்பட்டு வருவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் பேரணியாகச் சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயச் சங்கத் தலைவர்கள் முன் கூட்டியே கைது செய்யப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“டெல்லி செல்வோம்” போராட்டம் இன்றும் (26.11.2020) நாளையும் நடைபெறும் என்று விவசாயச் சங்கங்கள் அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து ஹரியானா அரசு, பஞ்சாப் உடனான மாநில எல்லையை முன் கூட்டியே அடைத்துள்ளதுடன், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கும் தடை விதித்துள்ளது.

குருஷேத்ராவில், தடையை மீறிப் பேரணி சென்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கலைத்துள்ளனர். அம்பாலா பகுதியில் பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது ஹரியானா காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரியானா எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் ஜனநாயக விரோதச் செயல் என்றும் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபோல், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் விவசாயிகளின் பேரணி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில், விவசாயிகளுடன் பேரணி செல்ல முயன்ற, ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தேசிய தலைவர் யோகேந்திர யாதவ் குருகிராமில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரோடு பேரணி செல்ல முயன்ற விவசாயிகளும் கைது செய்யப்பட்டிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை என்று கூறியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுவது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் “மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை. அவற்றைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் மீது தண்ணீர்ப் பீய்ச்சி அடிக்கப்படுகிறது” என்று எழுதியுள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாகப் பேரணியாகச் சென்று, வியாழக்கிழமையன்று டெல்லியை அடைய வேண்டும் என்று விவசாயச் சங்கங்கள் திட்டமிட்டிருந்தன.

முன்னதாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயச் சங்களுக்குக் காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்