Aran Sei

மத்திய பிரதேசம் – புதிய விவசாய சட்டங்களின் கீழ் விவசாயிகளை ஏமாற்றிய வர்த்தகர்கள்

Image Credit : Indian Express

புதிதாக நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்களைச் சொல்லி, மத்திய பிரதேசம் தேவாஸ் நகரைச் சேர்ந்த கோஜா டிரேடர்ஸ் 22 விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர். பவன் கோஜா, சுரேஷ் கோஜா ஆகிய இருவருக்கும் சொந்தமான இந்நிறுவனம், ரூ 2 கோடி மதிப்புள்ள 2,581 குவின்டால் பருப்பு மற்றும் பயறு வகைகளை வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

“பவன் கோஜாவும் சுரேஷ் கோஜாவும் வெவ்வேறு நாட்களில் வந்து தங்கள் பதிவு உரிமத்தைக் காட்டி எங்கள் விளைபொருட்களை வாங்கினார்கள். பணம் எங்கள் கணக்கில் போடப்பட்டு விடும் என்று உறுதி அளித்தார்கள்.” என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஹர்தா மாவட்டத்தின் அலன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் ஜாட் என்ற விவசாயி, பவன் கோஜா அவரது விளைபொருளை வாங்குவதற்கு அணுகியதாகவும், புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, வணிகர்கள் நேரடியாக விவசாயிகளிடம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

நடப்பில் இருந்த மண்டி விலையை விட ரூ 700 அதிக விலை கொடுக்க முன் வந்த பவன் கோஜாவிடம் ஆனந்த் ஜாட் 80 குவின்டால் பருப்புகளை ரூ 5.5 லட்சத்துக்கு விற்றுள்ளார். இதற்கு பவன் கோஜா ஒரு செக்-ஐ கொடுத்துள்ளார்.

ராகுல் படேல் என்ற விவசாயி 276 குவின்டால் பருப்புகளை ரூ 20 லட்சத்துக்கு விற்றிருக்கிறார். ஆனால், அதற்காக சுரேஷ் கோஜா கொடுத்த செக் வங்கியிலிருந்து திரும்பி வந்து விட்டிருக்கிறது.

“ரூ 100 கூடுதல் லாபம் மட்டுமில்லை. சரக்கை மண்டிக்கு எடுத்துச் செல்வதற்கான வண்டி செலவை மிச்சப்படுத்துவதுதான் என்னை சுரேஷ் கோஜாவிடம் விற்கத் தூண்டியது” என்கிறார் ராகுல் படேல்.

ஏமாற்றப்பட்ட விவசாயிகளில் ஒருவரான கன்னையா படேல், ஹோஷங்காபாத், சேஹோர், ஹர்தா, தேவாஸ் மாவட்டங்களில் உள்ள குறைந்தது 100 முதல் 150 விவசாயிகள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் மொத்த தொகை ரூ 5 கோடி வரை இருக்கும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறியுள்ளார்.

கன்னையா படேல் ரூ 22.5 லட்சம் ஏமாற்றப்பட்டிருக்கிறார்.

கோஜா நிறுவனத்தை தேடுவதற்கு முதலில் தேவாஸ் மண்டியை அணுகினர் விவசாயிகள். ஆனால், இந்த வர்த்தகர்கள் சென்ற ஆண்டு மண்டியிலிருந்து பெற்ற உரிமத்தை மூன்று மாதங்களுக்குள் ரத்து செய்து விட்டிருக்கின்றனர். கட்டாகான் தாசிலில் உள்ள அவர்களது வீட்டுக்குச் சென்று பார்த்தால் அங்கு அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

விவசாயிகள் கட்டேகான் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். கட்டேகானின் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டிடமும் ஒரு எழுத்து பூர்வமான புகாரை அளித்துள்ளனர்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் வர்த்தகம் மற்றும் வணிகம் (பாதுகாப்பு மற்றும் வசதி செய்தல்) சட்டம் 2020-ன் பிரிவு 6-ன் படி, ஒரு விவசாயிக்கும் வணிகருக்கும் இடையேயான எந்த ஒரு தகராறையும் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் தீர்த்து வைப்பார். விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.

வேளாண் சட்டங்களை ஏன் ரத்து செய்ய வேண்டும்? – மத்திய அமைச்சருக்கு பொருளாதார வல்லுநர்கள் விளக்கம்

இந்த மூன்று விவசாய சட்டங்களையும் எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராடி வருகின்றனர், நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்