Aran Sei

வேளாண் சட்டங்களை எதிர்த்து ரயில் மறியல்: பஞ்சாபில் வலுக்கும் போராட்டம்

credits:newindianexpress.com

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமிர்தசரஸ் விவசாயிகள் ஏழாவது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடெங்கும் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மத்திய அரசு இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

அமிர்தசரஸ் தேவிதாஸ்புரா என்ற கிராமத்தில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் (விவசாய தொழிலாளர்கள் சங்கம்) என்ற விவசாய குழு உறுப்பினர்கள் கருப்பு மேலாடை அணிந்து தண்டவாளத்தின் மீது அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த போராட்டம் 26-ம் தேதிவரையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஏழாம் நாளாக தொடர்ந்து வருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், குழுவின் பொதுச் செயலாளர், அக்டோபர் 1-ம் தேதி தேசிய அளவிலான மாபெரும் போராட்டத்தை அறிவிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

credits:indianexpress.com

அக்டோபர் 1-ம் தேதி முதல் காலவரையற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பஞ்சாப் மாநிலத்தின் 31 விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளார்கள்.

போராட்டத்தின் காரணமாக இத்தடத்தில் செல்லும் ரயில்களை ஃபெரோஸ்பூர் ரயில்வே பிரிவு ரத்து செய்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இது குறித்து பல்வேறு விவசாய அமைப்புகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

 

டிவிட்டரில் அவர், “விவசாயிகள் மற்றும் அவர்களின் நலனைக் காக்க எனது அரசாங்கம் இறுதி வரையில் போராடும். விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். எந்த வகையிலும் விவசாயிகள் பாதிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்கள் மீது எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பல்வேறு மாநில விவசாயிகள், விவசாய அமைப்புகள் ட்ராக்டர் நிரப்பும் போராட்டம், சாலை மறியல் மற்றும் வைக்கோல் எரிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

 

மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் செயல்பட்டு வந்த அகாலி தளம் கட்சி, கூட்டணியிலிருந்து விலகுவதாக கட்சியின் தலைவர் சுர்ஜித் சிங் பாதல் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்