Aran Sei

நாளை விவசாயிகளின் “பாரத் பந்த்” – பெருகும் ஆதரவும் அரசின் பிடிவாதமும்

சிங்கு எல்லையில் விவசாயிகள் - Image Credit : Indian Express

மோடி அரசின் மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் நாளை, செவ்வாய்க் கிழமை, நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விவசாயத் தலைவர் பல்தேவ் சிங் நிகல்கார், “பாரத் பந்த்-ன் போது அவசர ஊர்திகளும் திருமண ஊர்வலங்களும் அனுமதிக்கப்படும்” என்றும், “சாலை மறியல் புதன் கிழமை மதியம் 3 மணி வரை நடைபெறும்” என்றும் அறிவித்துள்ளார்.

காசிப்பூர் எல்லையில் உரையாற்றும் ராகேஷ் திகாயத் - Image Credit : The Hindu
காசிப்பூர் எல்லையில் உரையாற்றும் ராகேஷ் திகாயத் – Image Credit : The Hindu

விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும், ஒன்றிய அமைச்சர்களுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில், அரசு மீண்டும் திருத்தங்கள், விளக்கங்கள் என்று பேசியதைத் தொடர்ந்து, விவசாயிகள் பேச்சு வார்த்தையைத் தொடர மறுத்து, சட்டங்களை ரத்து செய்யப் போகிறீர்களா இல்லையா என்பதற்கு பதில் சொல்லும்படி கோரும்படியாக “ஆம்”, “இல்லை” என்ற அட்டைகளைக் கையில் பிடித்து மௌனப் போராட்டத்தை நடத்தினர்.

`சட்ட நீக்கம் வேண்டும் : சட்ட திருத்தம் அல்ல’ – பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகள்

ஒன்றிய அரசு, 9-ம் தேதி, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு – வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும்

ஞாயிற்றுக் கிழமை, சான் பிரான்சிஸ்கோ, லண்டன், டொரானடோ, மெல்போர்ன் மற்றும் பிற வெளிநாட்டு நகரங்களில் “விவசாயிகளுக்கு ஆதரவாக “விவசாய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக முழக்கங்களை கொண்ட தட்டிகளை பிடிக்கும் போராட்டக் காரர்களின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், கலைத்துறையைச் சேர்ந்தவர்களும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜவை எதிர்க்கும் 15 கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பான “பாரத் பந்த்”-க்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்ஸ், சிஐடியு, ஏஐயூடியூசி, டியுசிசி போன்ற தொழிற்சங்கள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்று இந்தியா டுடே செய்தி கூறுகிறது.

டிசம்பர் 8 முழு அடைப்புக்கு 11 கட்சிகளின் ஆதரவு அறிக்கை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா, சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ (எம்எல்-லிபரேஷன்) பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகாரைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஷ்வி யாதவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு க ஸ்டாலின், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீரின் எதிர்க் கட்சிகளின் கூட்டணித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த 11 கட்சிகளின் கூட்டு அறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய விவசாயிகளால் நடத்தப்படும் மகத்தான போராட்ட்டத்துக்கு எங்கள் ஆதரவை அளிக்கிறோம். பிற்போக்கான விவசாய சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் திரும்பப் பெறும்படி கோரி, டிசம்பர் 8-ம் தேதி பாரத் பந்த் நடத்துமாறு அவர்கள் விடுத்துள்ள அழைப்புக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“நாடாளுமன்றத்தில் அப்பட்டமான, ஜனநாயக மறுப்பு முறையில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் மூலம் முறையான விவாதமும், வாக்கெடுப்பும் மறுக்கப்பட்டது. இந்தச் சட்டங்கள் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன, இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கின்றன, குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழித்துக் கட்டுவதற்கான அடிப்படையை உருவாக்குகின்றன, இந்திய விவசாயத்தையும் நமது சந்தைகளையும் சர்வதேச விவசாய வணிக கார்ப்பரேட்டுகள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அடகு வைக்கின்றன” என்று அறிக்கை தெரிவிக்கிறது.

“ஒன்றிய அரசு ஜனநாயக நடைமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி, நமது விவசாய-அன்னதாதாக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் : பொது வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் ஆதரவு

தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகளின் ஆதரவு

தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் கே.எம் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச் ஜவகிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர் ஆகியோர் விவசாயிகள் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் பிறரை இந்த நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு கட்சிகள் - படம் நன்றி : தினகரன்
தமிழ்நாடு கட்சிகள் – படம் நன்றி : தினகரன்

 

அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கும், வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, மாநில அரசின் மானியம் ஆகியவற்றைப் பறிக்கும், நெல்கொள்முதல் நிலையங்களை மூட வைக்கும், இந்திய உணவுப் பாதுகாப்பின் உயிர் மூச்சைப் பறித்து வேளாண்மையை அடியோடு அழிக்கும் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவோம் என்றோ அதன் பிறகு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தே நடத்துவோம் என்று மத்திய பாஜக அரசு கொள்கையளவில் ஒப்புக் கொள்ள முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளனர்.

“3 வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுங்கள் என்று முன் வைக்கும் கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது என்று, தொடர்ந்து இந்தச் சட்டங்களை எதிர்த்து வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களாகிய நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்” என்றும் கூறியுள்ளனர்.

விவசாயிகள் அழைப்புவிடுத்த முழு அடைப்பு – ஒன்றிணையும் தமிழகக் கட்சிகள்

தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையும் நாளை நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலுங்கானா, டெல்லி கட்சிகள் ஆதரவு

மக்களவை உறுப்பினர் ஹனுமான் பேனிவாலின், பாஜகவின் கூட்டணியில் உள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி, அரசு எம் எஸ் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய கட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளோம். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை, கருப்பு மசோதாக்கள், பிரதமர் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்” என்றும் கூறியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையில் இணையாத மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், டெல்லி-ஹரியானாவின் சிங்கு எல்லைக்கு சனிக்கிழமை சென்று முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆதரவை விவசாயிகளிடம் தெரிவித்தார்.

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் பாரத் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. “நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு அமைதியான முறையில் ஆதரவு தெரிவிப்பார்கள். நாட்டின் அனைத்து மக்களும் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தெலுங்கானா முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் தனது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தொண்டர்களை இந்த பந்தை ஆதரிக்கும்படி கேட்டுள்ளார். விவசாயிகள் ஒரு நியாயமான போராட்டத்தை நடத்தி வருவதாகவும், விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை அவர்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய குத்துச் சண்டை வீரரும், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான விஜேந்தர் சிங், ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற வழங்கிய ராஜீf hq;lகேல் ரத்னா விருதை திருப்பியளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : அரசு விருதை திருப்பித்தரும் ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட விவசாய சீர்திருத்தச் சட்டங்கள்

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்புக்கு மத்தியில், ஒன்றிய அரசு, ஜூன் மாதம் இந்த விவசாய சீர்திருத்தங்கள் அவசரச் சட்டங்களாக பிறப்பித்தது. இவை தொடர்பான மசோதாக்கம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டங்கள் ஆயின.

ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமலும், தேர்வுக் குழுவுக்கு அனுப்பி மசோதாவை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டவிரோதமாக நிராகரித்தும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜனநாயகமற்ற முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன: திமுக எம்.பி சண்முகம்

பஞ்சாபிலும், நாடு முழுவதிலும் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு

இதைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்தச் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை தொடங்கினர். பஞ்சாபில் ரயில் மறியல் செய்தும், ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்களை மறித்தும், ரிலையன்ஸ் ஜியோ சேவையை புறக்கணிக்க அறைகூவல் விடுத்தும் 2 மாதங்களாக போராட்டம் நடந்து வந்தது.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்த விவசாய சீர்திருத்த சட்டங்கள்

  1. விவசாய விளைபொருட்களை விற்பதற்கான மண்டி முறையை ஒழித்துக் கட்டவும், தொடர்ந்து குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசு கொள்முதலை கைவிடவும் வழி வகுக்கும். சிறிய, நடுத்தர வியாபாரிகளை ஒழித்துக் கட்டி கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை உருவாக்கும்.
  2. ஒப்பந்த விவசாயம் மூலம் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சிக்க வைக்கும்.
  3. அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதில் இருக்கும் தடைகளை நீக்கியதன் மூலம் விலைவாசி உயர்வுக்கும், பதுக்கலுக்கும் இட்டுச் செல்லும்

என்று நாடு முழுவதும் உள்ள விவசாயத் துறை அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிய அரசாங்கத்தில் பங்கேற்றிருந்த, பஞ்சாபில் எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தள் கட்சி, அக்கூட்டணியை விட்டு வெளியேறியது. அக்கட்சியைச் சேர்ந்த ஒன்றிய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார்.

வேளாண் சட்டங்களுக்கு ஒப்புதல் – நாடு முழுவதும் தொடரும் போராட்டம்

காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு விரோதமான, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இந்தச் சட்டங்களை முறியடிக்கும் வகையில் மாநில சட்டங்களை இயற்றும்படி அக்கட்சி ஆளும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதன் படி பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஒன்றிய அரசின் விவசாய சீர்திருத்த சட்டங்களை எதிர்த்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

பஞ்சாப் சட்டப் பேரவை – வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றம்

“டெல்லி சலோ”

போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஒன்றிய அரசு அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்காத நிலையில், அக்டோபர் கடைசி வாரத்தில் “டெல்லி சலோ” என்ற முழக்கத்துடன் விவசாய சங்கங்கள் டெல்லியின் மையப்பகுதியான ஜந்தர் மந்தரில் கூடி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன.

ஆனால், பஞ்சாபில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, தண்ணீர் பீரங்கி மூலம் தாக்குதல், சாலைகளில் பள்ளம் தோண்டுதல், கற்களையும், தடுப்பரண்களையும் அமைத்தல் என்று பாஜக ஆளும் ஹரியானாவின் போலீஸ் தாக்குதல் நடத்தியது. இந்த தடைகளையும் அரண்களையும் தாண்டி விவசாயிகள் டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள சிங்கு கிராமத்தை அடைந்தனர்.

பாஜகவுக்கும் ஒன்றிய அரசுக்கும் பின்னடைவு – போராட்டம் தொடர்கிறது

போராடும் விவசாயிகள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியதற்கு அகாலி தள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை புராரி மைதானத்துக்கு மாற்றிக் கொண்டால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்ற நிபந்தனை விதித்த உள்துறை அமைச்சசர் அமித் ஷாவின் அறிவிப்பை நிராகரித்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஒன்றிய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் தடுப்பரண்கள், தடுப்புக் கம்பிகள் அமைத்து நூற்றுக் கணக்கான படையினரை விவசாயிகளுக்கு எதிராக நிறுத்தி வைத்தது.

இதைத் தொடர்ந்து மேலும் லட்சக்கணக்கான பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் சிங்கு, டிக்ரி எல்லைகளை முற்றுகையிட்டனர். மேலும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் காசிபூர் எல்லையில் குவிந்தனர். டெல்லியிலிருந்து ஹரியானா செல்லும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. டெல்லிக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக என்டிடிவி தெரிவிக்கிறது.

PTI Photo
PTI Photo

ஒன்றிய அரசு விவசாய சட்டங்களை திரும்பப் பெற மறுத்தால் போராட்டத்தை ஆறு மாதம் வரை தொடர்ந்து நடத்த தயாராக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இறங்கி வந்த ஒன்றிய அரசு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் டிசம்பர் 1-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த சிரமமாக உள்ளதாகவும் சிறிய குழுவாக வரும்படியும் அரசு கூறியதை நிராகரித்த விவசாயிகளின் 35 சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

விவசாய சீர்திருத்த சட்டங்களில் உள்ள பிரச்சனைகள் என்று 39 ஷரத்துகளை விவசாயிகள் தரப்பு அரசிடம் கொடுத்தது. அரசு ஒரு சில திருத்தங்களை செய்ய முன் வந்தது. ஆனால் இந்தச் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

டிசம்பர் 3-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து 5-ம் தேதி பேச்சு வார்த்தையில் பேச மறுத்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 8-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்