மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களிலிருந்தும் 500 வாகனங்களில் 6000 விவசாயிகள் மும்பையின் ஆசாத் மைதானத்தை அடைந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. டெல்லியில் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மூன்று நாட்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை அவர்கள் நடத்தவுள்ளனர்.
அகில இந்திய கிசான் மகாசபாவின் மகாராஷ்டிரா கிளையின் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி அணி வகுத்து வந்ததாக மகாராஷ்டிராவின் இந்திய ஜனநாயக இளைஞர் முன்னணியின் பொய்சார் கிளை செய்தியையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
https://www.facebook.com/DYFIPALGHAR/posts/2468218766820092
விவசாயிகள் நாசிக்கிலிருந்து சனிக்கிழமை புறப்பட்டுள்ளனர். சுமார் 5,000 விவசாயிகள் இகாத்புரியிலிருந்து புறப்பட்டு மும்பை – ஆக்ரா நெடுஞ்சாலையில் 10 கிமீ தூரத்தை நடந்து கடந்துள்ளனர். இரண்டு மணி நேர நடை பயணத்துக்குப் பிறகு வாகனங்களில் ஏறி ஞாயிறு மாலை மும்பையை அடைந்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணி கட்சிகளும், பிற விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், சம்யுக்த ஷேத்காரி காம்கார் மோர்ச்சா என்ற பெயரில் இணைந்துள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
50,000-க்கும் அதிகமான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்று அகில இந்திய கிசான் மகாசபா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசாத் மைதானத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். அதைத் தொடர்ந்து மதியத்துக்கு மேல் விவசாயிகள் ஆளுனர் மாளிகைக்கு பேரணியாகச் சென்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக மனு ஒன்றை அளிக்க உள்ளனர்.
விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை ஜனவரி 23 முதல் ஜனவரி 26 வரை தீவிரப்படுத்தும்படி, போராடும் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்ததைத் தொடர்ந்து இந்த உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

இந்த உள்ளிருப்புப் போராட்டம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கொடியேற்றி, விவசாயிகள் தொழிலாளர்கள் போராட்டத்தை எப்பாடு பட்டாவது வெற்றியடையைச் செய்வதற்கு உறுதி எடுப்பதுடன் நிறைவடைய உள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.