Aran Sei

போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு – விவசாயிகளுக்காக வேலையை ராஜினாமா செய்த அரசு அதிகாரி

விளையாட்டு வீரர்களும் கவிஞர்களும், அரசு தங்களுக்களித்த விருதுகளை விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பி அளிக்க அறிவித்திருக்கும் நிலையில், பஞ்சாப் சிறைத்துறையின் துணை கண்காணிப்பாளர் ஜெனரல் லக்மிந்தர் சிங் ஜக்கர்  தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயத்தைத் தனியார்மயமாக்கி, விவசாயிகளின் வருவாயை வெகுவாகப் பாதிக்கும் வகையில், மத்திய அரசின் விவசாய திருத்தச் சட்டங்கள் மூன்றும் இருப்பதாக பல மாநில விவசாயிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், போராட்டத்திற்கு ஆதரவாக அரசு அதிகாரி ஒருவர் தன் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்

இந்நிகழ்வு குறித்து  பஞ்சாப் சிறைத்துறையின் துணை இயக்குநர் ஜெனரலான பி கே சின்ஹா குறிப்பிடுகையில், “ஜக்கர், ராஜினாமாவை சமர்பித்தார் ஆனால் அது இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர் பஞ்சாபின் ஃபஸில்கா மாவட்டத்தில் இருக்கும் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்” என்று என்.டி.டி.வி –யிடம் தெரிவித்திருக்கிறார்.

விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து : ராணுவ வீரர்களும் பதக்கங்களைத் திருப்பி தர முடிவு

“நான் முறையாக எல்லாவற்றையும் செய்திருப்பதால், என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் வராது. நான் முதலில் விவசாயி, அதற்கு பிறகுதான் காவல் அதிகாரி. இன்று எனக்கு என்ன பதவிகள் கிடைத்திருந்தாலும், அதற்குக் காரணம் என்னுடைய அப்பா வயலில் வேலை செய்து என்னைப் படிக்க வைத்ததுதான். எனவே, நான் விவசாயிகளுக்கு கடமைபட்டிருக்கிறேன்” என வேலையை ராஜினாமா செய்த ஜக்கர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம்  கூறியிருக்கிறார்.

1989 முதல் 1994 வரை இந்திய இராணுவத்தில் வேலை செய்த லக்மிந்தர் ஜக்கர், அதன் பிறகு பஞ்சாப் காவல்துறையில் இணைந்திருக்கிரார்.

விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

அவருடைய 81 வயதான தாய் இன்னமும் விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயிகளுடன் உட்கார்ந்து போராட்டம் செய்ய ஊக்குவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ள ஜக்கர், விரைவில் டெல்லிக்கு பயணிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கு முன், பஞ்சாப்பை சேர்ந்த விளையாட்டு வீரர்களும், கவிஞர்களும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக அரசு விருதுகளை திருப்பியளிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்