Aran Sei

விவசாயிகளின் உரிமையை பெருமுதலாளிகள் பறிப்பதா? – நடிகர் கார்த்தி கண்டனம்

போராடும் விவசாயிகளுக்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடந்த எட்டு நாட்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

விவசாயிகளுடன் துணை நிற்கவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களை கெளரவப்படுத்தவும் நடிகர் கார்த்த உழவன் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ”விவசாயிகளை நாம் மறந்து விட வேண்டாம்” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கார்த்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவர் நடத்தும் உழவன் அமைப்பின் மூலம் ஒரு அறிக்கையையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.

அதில் “நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் ‘உழவர்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில் பெருந்திரளாகப் பங்கெடுத்துப் போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாகப் பிரமிப்பூட்டுகிறது!” என கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

”நாளும், பொழுதும் பாடுபட்டால் தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு, கழனி மற்றும் பயிர்களை அப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப் பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலைதூரம் பயணித்து வந்து, தீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது” என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

”தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளைப் பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உழவர் சமூகம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாகப் பாதிப்படைவோம் எனக் கருதுகிறார்கள்” என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் – கொச்சைப் படுத்திய அமித் மால்வியா – எச்சரித்த டிவிட்டர்

”தங்கள் மண்ணில் தங்களுக்கு இருக்கும் உரிமையும், தங்கள் விளைப் பொருட்கள் மீது தங்களுக்கு இருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றும் செய்யப்பட்டுவிடும் என்றும், ஆகவே இந்தச் சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.” என தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி “ஆகவே, போராடும் விவசாயிகளின் குரலுக்குச் செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்