Aran Sei

`சட்ட நீக்கம் வேண்டும் : சட்ட திருத்தம் அல்ல’ – பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகள்

நாங்கள் கேட்பது விவசாயச் சட்டங்களுக்குக்கான நீக்கம்தான், நிறுத்தம் அல்ல என்று மத்திய அரசுடனான ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் விவசாயச் சங்கங்கள் கூறியுள்ளன.

நேற்று (டிசம்பர் 5) விக்யன் பவனில் நடந்த பேச்சுவார்த்தையில், விவசாயச் சங்க தலைவர்களும் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்துகொண்டனர். அப்போது, உறுதியான முடிவை அறிவிக்க அரசிடம் மேலும் ஆலோசனைகள் செய்ய வேண்டும் என்றும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட டிசம்பர் 9 ஆம் தேதிக்கு அடுத்த நாள், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதாக விவசாயச் சங்க தலைவர்கள் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் : 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

மேலும், நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தையில் பொறுமையிழந்த விவசாயச் சங்க தலைவர்கள்,  25 நிமிடங்கள் அமைதியாக இருந்துள்ளனர் என்றும் ஆம் மற்றும் இல்லை என்ற எழுதப்பட்ட பலகைகளை கையில் எடுத்துக்கொண்ட அவர்கள், மூன்று விவசாயச் சீர்திருத்த சட்டங்களை ரத்து செய்யத் தயாரா இல்லையா என்பதை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

பேச்சு வார்த்தையில், இருதரப்பில் இருந்தும் எந்தப் புதிய திட்டங்களையும் முன்வைக்கப்படவில்லை, தங்கள் நிலைப்பாடுகளையே மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

மேலும், விக்யன் பவனில் அரசால் வழங்கப்பட்ட உணவை மீண்டும் சாப்பிட மறுத்து, உள்ளூர்ப் பொது சமையலறையிலிருந்து உணவைக் கொண்டுவர வைத்து சாப்பிட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 5 ஆம் தேதி போராட்டம் – திமுக அறிவிப்பு

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுடன், பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கிய விவசாயத் துறை அமைச்சர் அதோமரையும் உணவு மற்றும் ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விவசாய அமைச்சர் டோமர், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையிலேயே கொள்முதல் தொடரும் என்றும் அவர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக அரசு நடத்தும் மண்டிகள் பலப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

“தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள்” – பாஜக அமைச்சர்

மேலும், “இந்தச் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் அனைத்துப் பிரச்சனைகளையும் கேட்கவும்,  சட்டத்தில் அவர்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்யவும் அரசு தயாராக உள்ளது. விவசாயச் சங்க தலைவர்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து சில உறுதியான ஆலோசனைகளைத் தர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  ஆனால் எங்களால், அவர்களிடம் இருந்து அதைப் பெற முடியவில்லை.” என்று கூறியுள்ளார்.

“நாங்கள் எந்த உட்பிரிவுகளைச் சேர்க்க விரும்புகிறோம், எதை அகற்ற விரும்புகிறோம் என்று அரசு எங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. எந்தத் திருத்தங்களையும் விவாதிக்க நாங்கள் இங்கு வரவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். எங்கள் கோரிக்கை ஆரம்பத்திலிருந்தே ஒன்றுதான். சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் .” என்று மஹிலா விவசாயச் சங்கத்தின் தலைவர் கவிதா குருகந்தி கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

“உங்க சாப்பாடும் வேண்டாம், திருத்தங்களும் வேண்டாம், கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – போராடும் விவசாயிகள்

விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாபில் போராட்டம் தொடங்கியதிலிருந்து கணக்கிட்டால், இந்தப் பேச்சுவார்த்தை ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தையாகும்.

இதற்கிடையில், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளும், பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகளும், தில்லி விவசாயப் போராட்டங்களில் இணைந்துகொண்டனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்