Aran Sei

மேலும் தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் – தலைவர்கள் 9 மணி நேரம் உண்ணாவிரதம்

சிங்கு எல்லையில் விவசாயத் தலைவர்கள் - Image Credit : indianexpress.com

மூன்று விவசாயச் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள் என்று விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

பல்வேறு போராட்டக் களங்களில் உள்ள விவசாயத் தலைவர்கள், இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிங்கு எல்லையில் நடந்த ஓர் ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாயத் தலைவர் குர்னாம் சிங் சாதுனி கூறியுள்ளார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலமாக விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்துகின்றனர். இன்று நாடு முழுவதிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் குர்னாம் சிங் சாதுனி கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தானும் ஒரு நாள் உண்ணாவிரதம் அனுசரிக்கப் போவதாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசு “ஈகோவை கைவிட்டு, சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் விரதம் இருக்கும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

இணைய வழி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசிய அரவிந்த கேஜ்ரிவால், ஒன்றிய அரசு விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான மசோதாவைக் கொண்டு வரும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேஜ்ரிவால் நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், டெல்லி அரசு நவம்பர் 23-ம் தேதி மூன்று சட்டங்களில் ஒன்றை அரசிதழில் வெளியிட்டதன் மூலம் விவசாயிகளின் முதுகில் குத்திவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்