Aran Sei

‘மத்திய அமைச்சரை வரச் சொல்லுங்கள்’ – விவசாயச் சங்கங்கள்

ஞ்சாபைச் சேர்ந்த 31 விவசாயச் சங்கங்களில் 30 சங்கங்கள், விவசாய மசோதா குறித்தான மத்திய வேளாண் செயலாளரின் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாகவும், “நாங்கள் அதிகாரிகளிடம் பேசமாட்டோம். மத்திய வேளாண் துறை அமைச்சரிடமிருந்து அழைப்பு வந்தால், அவரோட பேசத் தயாராக உள்ளோம்” என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளதாகவும் ‘தி ஹிந்து’  தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த செவ்வாய்க் கிழமை வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால், விவசாய மசோதாவிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயச் சங்கங்களுக்கு, விவசாய மசோதா குறித்தான விளக்கக் கூட்டத்திற்கு அழைப்புக் கடிதம் அனுப்பினார். அதில், அக்டோபர் 8-ம் தேதி தில்லியில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், விவசாய மசோதா பற்றியும் அதையொட்டி பரப்பப்படும் வதந்திகளைப் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, பாரத் கிஸான் யூனியன் (லக்கோவால்) என்ற விவசாயச் சங்கத்தைத் தவிர்த்து மீதம் உள்ள 30 விவசாயச் சங்கங்களும் கலந்தாலோசித்து, வேளாண் செயலாளரின் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ‘தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி : PTI

”இது சரியான முறை இல்லை. எங்களுக்கு மத்திய வேளாண் செயலாளரிடமிருந்து வந்த கடிதத்தில், எங்களுக்கு விவசாய மசோதா குறித்துப் புரிய வைக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். இந்த மசோதாவைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் நாங்கள் இல்லை. இதைப் படித்துப் புரிந்து கொள்ளாமலா நாங்கள் தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறோம்.” என்று பாரத் கிஸான் யூனியன் (ராஜேவால்) தலைவர் பல்மீர் சீங் ‘தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்’ தளத்திற்கு கூறியுள்ளார்.

‘தி ஹிந்து’ தளத்திற்கு பாரத் கிஸான் யூனியனின் (டகுண்டா) தலைவர் புடா சிங் புர்ஜ்கில் அளித்த பேட்டியில், ”மத்திய அரசு எங்களுடன் நேரடியாகப் பேச வேண்டும். நாங்கள் பேசுவதற்குத் தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால் நாங்கள் அதிகாரிகளைப் போய்ப் பார்த்து, அவர்களுடன் பேசமாட்டோம். மத்திய வேளாண் துறை அமைச்சரிடமிருந்து முறையான அழைப்பு வரட்டும். அப்போது அவருடன் பேசுகிறோம்.

பஞ்சாப் அரசு விவசாய மசோதா தொடர்பாகச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டவில்லை என்றால், நாங்கள் எப்படி பாஜக-வைப் புறக்கணிக்கிறோமோ, அதே போல் காங்கிரஸையும் புறக்கணிப்போம்” என்றார்.

ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள பஞ்பாப் விவசாயிகள்
நன்றி : India Today

“நாங்கள் விவசாயிகள். விவசாயம் எப்படிச் செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். எப்போது யூரியா போட வேண்டும் என்று தெரியும்” என்றும், “பஞ்சாப் மாநிலத்தில் விவசாயச் சங்கங்கள் நடத்திவரும் ரயில் மறியல் போராட்டம் தொடரும்” என்றும் விவசாயச் சங்கங்கள் ‘தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸிடம்’ கூறியுள்ளன.

துணை முதலமைச்சர் துஷ்யந்த் சிங் வீட்டை விவசாயிகள் முற்றுகையிடச் சென்றபோது, அவர்கள்மீது பஞ்சாப் காவல்துறை தடியடி நடத்தியது. இதைக் கண்டித்து, அக்டோபர் 9-ம் தேதி, விவசாயச் சங்கங்கள் சாலை மறியலில் ஈடுபட இருப்பதாக ‘தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்