Aran Sei

” கார்ப்பரேட் ஜீவி மோடி விவசாயிகளை போராட்ட ஜீவி என்பதா ” – விவசாய சங்கங்கள் கண்டனம்

Image Credit : indianexpress.com

த்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியதற்கு போராடும் விவசாய சங்கங்கள் பதில் அளித்துள்ளன. சீக்கியர்களின் பங்களிப்பு பற்றிய அவரது பாராட்டுக்கள் பற்றியும், போராடும் விவசாயிகளை ‘போராட்ட ஜீவிகள்’ என்று முத்திரை குத்தியதற்கும் அவை எதிர்வினை ஆற்றியுள்ளன.

“குற்றம் சுமத்துவதற்காவது நான் பயன்படுகிறேன் என்பதில் மகிழ்ச்சியே” – பிரதமர் நரேந்திர மோடி

“பிரிவினையின் போதும், 1984-லும் நாங்கள் எதிர் கொண்ட கொடுமைகளையும் எங்களது பங்களிப்பையும் பிரதமர் உணர்ந்திருந்தாலும், நாங்கள் அமைதியான முறையில் போராடி வரும் போராட்டக் களங்களுக்கு அருகில் இது போன்ற தடுப்பரண்கள் ஏன் போடப்பட்டன என்பதை அவர் விளக்கவில்லை.”என்று கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச்செயலாளர் சர்வான் சிங் பாந்தேர் கூறியுள்ளார்.

” இந்தப் பகுதிகளுக்கு இணைய இணைப்பை துண்டித்தது குறித்து அவர் பேசவில்லை. எங்களது அடிப்படை தேவைகளான கழிப்பறைகள், குடிநீர் ஆகியவற்றை முடக்கியதைப் பற்றி பேசவில்லை.”  என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிரதமர் சீக்கியர்களை ஏன் பாராட்டினார் என்று இன்னும் மர்மமாகவே உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

பாரதிய கிசான் யூனியன் தாகுண்டாவின் தலைவர் பூட்டா சிங் புர்ஜ்கில், “பஞ்சாபிகள் பற்றி இவ்வாறு பேச வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடக்கத்தில் இருந்தே எங்களை காலிஸ்தானிகள் என்று அழைத்து வருகின்றனர். சீக்கியர்கள் பற்றிய பிரதமரின் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவரை இதை முன்பே பேசியிருக்க வேண்டும், போராட்டக் களத்துக்கு வந்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“அவரது உலகளாவிய மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 26-க்குப் பிறகு முதலில் அரசாங்கம் எங்களை மோசமாக சித்தரிக்க முயன்றது. அது வெற்றியடையவில்லை என்பதால் இப்போது எங்களை பாராட்டுகின்றனர். அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக பிரதமர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்), பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கொக்ரிகாலன் கூறியுள்ளார்.

“பஞ்சாபின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் போராட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் போராட்டம்” என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் சார்பில் கிராந்திகாரி கிசான் யூனியனின் தலைவரான தர்ஷன் பால் கூறியுள்ளார்.

மோடி, “போராடும் விவசாயிகளை போராட்ட ஜீவிகள் என்று கூறி அவமானப்படுத்தியது” பற்றி குறிப்பிட்ட அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா, பிரதமர் இந்த கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

“இந்தக் கருத்து கார்ப்பரேட் ஜீவியான பிரதமரிடமிருந்து வந்திருக்கிறது. அவரது ஆர்எஸ்எஸ் பிரிட்டிஷ் ஆட்சியின் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு போதும் பங்கேற்றதில்லை. அவர் ‘அன்னிய அழிவு சித்தாந்தம்’ என்று கூறுவது பாசிசத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

“பிரதமர் விவசாயிகளை போராட்டஜீவிகள் என்று அழைத்து அவமானப்படுத்தியதை சம்யுக்த கிசான் மோர்ச்சா கண்டனம் செய்கிறது. இந்தியாவை காலனிய ஆட்சியிலிருந்து விடுவித்தது போராட்டங்கள்தான் என்பதை பிரதமருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். போராட்டஜீவிகளாக இருப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.” என்று தர்ஷன் பால்  கூறியுள்ளார்.

“பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பதாக பிரதமர் பேசினார். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். ஆனால், யாருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று அவர் விளக்கவில்லை” என்று கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்