Aran Sei

” உச்சநீதிமன்றத்துக்கு நன்றி, ஆனால் கமிட்டி வேண்டாம், சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” – விவசாய சங்கங்கள்

Image Credit : thehindu.com

மூன்று விவசாயச் சட்டங்கள் தொடர்பாக தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு கமிட்டி அமைப்பது என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை, விவசாய சங்கங்கள் நிராகரித்து விட்டன.

“எங்களது வழக்கறிஞர்களும் பிற வழக்கறிஞர்களும், விவசாய சங்கங்களுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை தொடர்பாக அவர்களது ஒப்புதலைப் பெறும் வகையில், இன்று விசாரணையை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், இரவு 9 மணி வரையில் வெளியிடப்பட்ட, நீதிமன்றத்தின் நாளைய நிகழ்ச்சி நிரலில் இதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.” என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சம்யுக்த கிசான் சபா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

“நீதிமன்றம் உத்தரவை பிறப்பிப்பது மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது விவசாயச் சங்கங்களையும், எங்கள் வழக்கறிஞர்களையும், பரந்துபட்ட விவசாயிகளையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

“கமிட்டி அமைப்பது மூலம், பிரச்சினையை தீர்த்து வைப்பதை தள்ளிப் போடுவதை அரசு விரும்பியது” என்று கிராந்திகாரி கிசான் யூனியன் தலைவர் தர்ஷன் பால் குற்றம் சாட்டியுள்ளார்.

“வளர்ந்து வரும் விவசாயிகளின் இயக்கத்தை, ஒரு கமிட்டி மூலம் ஏன் திசைதிருப்பி நீர்த்துப் போகச் செய்ய வேண்டும்? போராட்டம் அரசுக்கு எதிரானது, எனவே அரசு மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும். சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

“விவசாயச் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை அனைத்து விவசாய சங்கங்களும் வரவேற்கின்றன. ஆனால், மாண்புமிகு உச்சநீதிமன்றம் நியமிக்கும் எந்த ஒரு கமிட்டியின் முன்பும் கூட்டாகவோ, தனித்தனியாகவோ பங்கேற்க விவசாயச் சங்கங்கள் விரும்பவில்லை” என்று போராடும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா திங்கள் இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

“விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, கமிட்டியில் விவாதிக்க அரசு முன்வரப் போவதில்லை என்பது, அவர்கள் திங்கள் கிழமை உச்சநீதிமன்றத்தில் காட்டிய அணுகுமுறையிலிருந்தும் நடத்தையிலிருந்தும் தெரிகிறது.” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம், விவசாயச் சட்டங்களை அரசு நிறுத்தி வைக்கவில்லை என்றால் அவ்வாறு தாங்களே உத்தரவு பிறப்பிக்கப் போவதாக கூறியிருந்தனர்.

‘விவசாயச் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கறீர்களா? அல்லது நாங்கள் செய்யவா?’ – உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி

விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், இது தொடர்பாக விவசாய சங்கங்களுடன் ஆலோசித்து விட்டு தெரிவிப்பதாக கூறியிருந்தனர். அதன்படி, டெல்லியின் எல்லையில் உள்ள சிங்குவில் போராட்டம் நடக்கும் இடத்தில், வழக்கறிஞர்கள், பல்பீர் சிங் ராஜேவால், தர்ஷன் பால், பிரேம் சிங் பங்கு, ரஜீந்தர் சிங் தீப் சிங் வாலா, ஜக்மோகன் சிங் ஆகியோரின் தலைமையிலான விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இது குறித்து விவாதித்தனர்.

இந்த விவாதத்துக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் அமைக்கவிருப்பதாகக் கூறிய கமிட்டியை விவசாயிகள் நிராகரித்தனர் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

நேற்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பிரச்சினையை புரிந்து கொண்டதற்கும், கூறிய ஆறுதல் வார்த்தைகளுக்கும் மதிப்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம், அதன் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாததற்கு விவசாய சங்கங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் இந்தச் சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதை கோருகின்றனர் என்று அவர்களது அறிக்கை கூறுகிறது.

விவசாய சங்கங்களுடன் மேலும் கலந்து ஆலோசிக்காமலே, இன்று உத்தரவு பிறப்பிக்கப் போவதாக நீதிமன்றம் தெரிவிப்பது குறித்து அவர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

“விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்க” – முன்னணி பொருளாதார நிபுணர்கள்

பஞ்சாபின் மிகப்பெரிய விவசாய சங்கமான பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா-உக்ரஹான்), போராடும் விவசாயிகள் சட்டங்களை ரத்து செய்வதை கோருகிறார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

நீதிமன்றம் நியமித்த கமிட்டியின் முன்பு, கட்டுப்படுத்தும் வகையிலான சமரசப் பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கங்களை ஈர்த்து, அதன் மூலம் போராடும் விவசாயிகளை கலைந்து போகச் செய்யும் சதித்திட்டம் இது என்று பெயர் சொல்ல விரும்பாத விவசாய சங்கத் தலைவர் ஒருவர் கூறியதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளியாகவிருக்கும் நிலையில் தனது பெயரை இப்போது வெளியிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

“மத்திய அரசுதான் பிரச்சினையை ஒரு கமிட்டியில் விவாதிக்க முன்வருமாறு விவசாயிகளை வலியுறுத்தி வந்தது. இதிலிருந்தே தனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்யும்படி நீதிமன்றத்தை அரசு செய்ய முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் குடியரசுதின பேரணியை ரத்து செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன.

ஜனவரி 26 பேரணி – லட்சம் டிராக்டர்களை அணிதிரட்டும் விவசாயிகள் சங்கங்கள்

மத்திய அரசு நடத்தும் குடியரசு தின பேரணியை விவசாயிகள் 2,000 டிராக்டர்களைக் கொண்டு சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே மறுத்துள்ளார்.

“ராஜ்பத்தில் நடைபெறவுள்ள பேரணியை சீர்குலைக்கும் எண்ணம் எங்களுக்கு சுத்தமாக இல்லை. அதற்கு இணையாக டிராக்டர் பேரணி நடத்தப் போகிறோம் என்று மட்டும்தான் கூறியுள்ளோம்” என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்