Aran Sei

விவசாயச் சட்டங்கள் பற்றிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் – உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியா கண்டனம்

Image Credit : thehindu.com

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்தியது, இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதனை வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரிடம் தெரிவித்திருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் (ஐக்கிய முடியரசு) அலெக்ஸ் எல்லிஸ்-ஐ அழைத்து, அயலுறவு எதிர்ப்பு குறிப்பு ஒன்று அவரிடம் கொடுக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் இந்தியா வரவிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருகை தொடர்பான ஏற்பாடுகளை செய்யும் விதமாக, அலெக்ஸ் எல்லிஸ் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதராக சென்ற மாதம்தான் பொறுப்பேற்றுக் கொண்டதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

“நடந்த நிகழ்வுகளை தவறாக சித்தரித்து வாக்கு வங்கி அரசியல் செய்வதை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும், குறிப்பாக ஒரு சக ஜனநாயக நாடான இந்தியா தொடர்பாக அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்” என்று வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்ற விதிகளின்படி, 1 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துக்களை பெற்ற மனுக்கள் மீதான விவாதம் நடத்தப்படும். அதன்படி, தாராளவாத கட்சி உறுப்பினர் குர்ச் சிங் உருவாக்கிய, “எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பையும் பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும்படி இந்திய அரசை வலியுறுத்தவும்” என்ற மனு 1.15 லட்சம் கையெழுத்துகளை பெற்றதைத் தொடர்ந்து திங்கள் இந்த விவாதம் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம் பற்றிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் – ஒரு சார்பானது என்று இந்தியா கண்டனம்

இந்த விவாதத்தைத் தொடர்ந்து உடனடியாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம், “இந்த விவாதம் ஒரு சார்பாக நடந்ததாகவும், உண்மைகளை அடிப்படையாக கொண்டிராத பொய் கூற்றுகள் சொல்லப்பட்டதாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மீதும் அதன் நிறுவனங்களின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும்” விவாதத்திற்குக் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த விவாதத்தைத் தொடர்ந்து பல பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

லைசெஸ்டர் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கிளாடியா வெப், “வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் குரலும் இந்திய விவசாயிகளின் குரலும் இன்று நாடாளுமன்றத்தில் ஒலித்தன – ஐக்கிய முடியரசின் அரசாங்கம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“இந்திய விவசாயிகளின் போராட்டம் வரலாற்றின் சரியான பக்கத்தில் உள்ளது. ஆதரவு” என்றும் அவர் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்