Aran Sei

‘விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு அரசு செவி மடுக்கவில்லை’: பாஜக பொதுச்செயலாளர் பதவி விலகல்

Credits Malvinder Kang Twitter

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் பஞ்சாப் மாநில பொதுச் செயலாளர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும், செப்டம்பர் 27 அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மசோதாகக்ளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து, வேளாண் விளைபொருள் மற்றும் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்றும் சட்டமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் பாஜக பொதுச்செயலாளர் மல்விந்தர் காங் விவசாய போராட்டங்களை ஆதரித்து பதவி விலகுவதாக கட்சியின் மாநில தலைவர் அஷ்வனி ஷர்மா-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

“மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக, ஆதரவளித்து குரல் கொடுத்தேன்.” என கூறியுள்ளார்.

“போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவும் குறைகளை தீர்க்கவும் கட்சியின் மாநில மற்றும் மத்திய தலைமையை நான் பலமுறை கேட்டுக்கொண்டேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என்று மல்விந்தர் பதவி விலகல் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

”விவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மாநில தலைவர் அஷ்வனி ஷர்மா தி இந்து-க்கு அளித்துள்ள பேட்டியில், செய்தித்தாள்களைப் பார்த்துதான் அவருடைய பதவி விலகல் குறித்து அறிந்துகொண்டேன். பதவி விலகல் கடிதம் கிடைக்கும் வரையில் என்னால் இதுகுறித்து எதுவும் கூற முடியாது.” என்று கூறியுள்ளார்.

இந்தாண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல் பதவி விலகியிருந்தார்.

தொடர்ந்து, வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலி தளம் கட்சி வெளியேறியது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்