Aran Sei

“விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்க” – முன்னணி பொருளாதார நிபுணர்கள்

போராடம் விவசாயிகள் - Image Credit : https://www.tribuneindia.com/

விவசாய சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசிற்கும் இடையிலான இழுபறி மூன்றாவது வாரமாக தொடரும் நிலையில், நாட்டின் மிகவும் புகழ்பெற்ற சில ஆராய்ச்சி நிறுவனங்களின் முன்னணி பொருளாதார வல்லுநர்கள், விவசாய சட்டங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளனர் என்று tribuneindia.com செய்தி தெரிவிக்கிறது.

போராடும் விவசாயிகளுக்கு தங்களது உறுதியான ஆதரவை தெரிவிக்கும் பொருளாதார வல்லுனர்களான டி.நர்சிம்ம ரெட்டி, கமல் நயன் கப்ரா, கே.என்.ஹரிலால், ரஞ்சித் சிங் குமான், சுரிந்தர் குமார், அருண்குமார், ராஜீந்தர் சவுத்ரி, ஆர் ராமகுமார், விகாஸ் ராவல் மற்றும் ஹிமான்ஷு ஆகியோர் இந்தச் சட்டங்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என்றும் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

ஒன்றிய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு இந்த 10 பொருளாதார வல்லுநர்கள் எழுதிய கடிதத்தில், கோடிக் கணக்கான சிறு விவசாயிகளின் நலனுக்காக விவசாய சந்தைப்படுத்தல் முறையில் மேம்பாடுகளும் மாற்றங்களும் தேவை என்பதை அங்கீகரிக்கிறார்கள். ஆனால் இந்த சட்டங்கள் கொண்டு வரும் மாற்றங்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்றுபவையாக இல்லை.

“விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காததற்கு காரணமாக தவறான அனுமானங்களை இந்த சட்டங்கள் கொண்டுள்ளன. ‘முந்தைய சட்டங்களின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்கு சுதந்திரம் இல்லை’, ‘ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை’ ஆகியவை அந்த தவறான அனுமானங்கள்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

20 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஏற்கனவே ஏபிஎம்சி சட்டங்களை திருத்தி தனியார் சந்தைகளையும், மின்னணு வர்த்தகத்தையும், அனுமதித்துள்ளன என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களும் இந்தியாவின் சிறு விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு அவர்கள் 5 காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்.

“விவசாய சந்தைகளை ஒழுங்குபடுத்துவதில் மாநில அரசின் பங்கை இவை ஒழித்துக் கட்டுகின்றன. இரண்டாவதாக, ஏற்கனவே இருக்கும் சந்தைகளுக்கும் புதிய தனியார் சந்தைகளுக்கும் இடையே இரண்டு வேறுபட்ட முறைகளை இந்தச் சட்டங்கள் உருவாக்குகின்றன.”

“வியாபாரிகள் கூட்டு சேர்ந்து கொண்டு விலையை குறைப்பது ஏபிஎம்சி மண்டிகளில் இருப்பதை விட தனியார் சந்தைகளில் மோசமாக இருக்கும். தனியார் சந்தைகளில் அவற்றை கண்காணிக்கவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த நடைமுறையையும் இந்தச் சட்டங்கள் குறிப்பிடவில்லை” என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே, பெரும்பான்மை விவசாயப் பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளுக்கு வெளியில்தான் விற்கப்படுகின்றன என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும், ஒழுங்குபடுத்தப்பட்ட ஏபிஎம்சி சந்தைகள் ஏலங்கள் மூலம் விலையை நிர்ணயிப்பதன் மூலம், தனியார் சந்தைகளில் விவசாயிகள் வியாபாரிகளுடன் பேரம் பேசும் வாய்ப்பை வழங்கின.

(படத்தைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்) Images Credit : India Today

ஏபிஎம்சி சந்தைகளை ஒழித்துக் கட்டி விட்டால், தனியார் சந்தைகளில் ஏகபோகங்கள் உருவாகி, விளைபொருட்களுக்கான விலை வீழ்ச்சியடையும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

2006-ம் ஆண்டில் பீகாரில் ஏபிஎம்சி சட்டம் நீக்கப்பட்ட பிறக கிடைத்த அனுபவத்திலிருந்து தனியார் சந்தையில் விவசாயிகளுக்கு பேரம் பேசுவதற்கு குறைந்த வாய்ப்பையே அளிப்பது தெரிய வந்துள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது பீகார் விவசாயிகளுக்குக் குறைந்த விலையே கிடைக்கிறது.

விவசாயிகளின் நலன்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்காத ஒப்பந்த விவசாய சட்டம் விவசாயிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையே சந்தை வலிமையில் உள்ள ஏற்றத் தாழ்வை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதிய சட்டங்களின் கீழ் வளரும் தனியார் சந்தைகளில் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் அச்சுறுத்தலும் உள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்