Aran Sei

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது: மோடி

credits:ANI

உத்தரகாண்டில் பிரதமர் நரேந்திர மோடி கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் 6 திட்டங்களை இன்று காணொலி மூலமாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.

கங்கை நதியை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ள கலாச்சார முன்னேற்றம், பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ’கங்கை அவலோகன்’ என்ற அருங்காட்சியகத்தை மோடி தொடங்கி வைத்துள்ளார்.

கங்கை நதியை துப்புரவாக வைக்க வேண்டி கழிவு நீர் சுத்திகரிக்கும் கூடங்கள் அமைப்பதும் இத்திட்டங்களில் அடங்கும்.

கடந்த காலத்தில் கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காக பெரிய திட்டங்கள் வகுக்கப்பட்டும் கூட, தொலைநோக்கு சிந்தனையோடு அணுகத் தவறியதாலும் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாததாலும் கங்கை இன்னும் அசுத்தமாகவே இருப்பதாக மோடி கூறினார்.

காணொலி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய மோடி, “நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரம் தொடர்பான திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.”

“இந்தச் சட்டங்கள் நாட்டின் பெண்கள், தொழிலாளார்கள் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் உதவும். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே சிலர் திருத்தச் சட்டங்களை எதிர்ப்பதை காண முடிகிறது.” என்றார்.

“இனி விவசாயிகள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். விவசாயிகளின் உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்துவதை இவர்கள் எதிர்க்கிறார்கள்.” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து, “வேளாண் கருவிகளை எரித்து விவசாயிகளை அவமதிக்கிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையினை கொண்டு வருவோமென ஆண்டுகளாக சொல்லி வந்தார்களே அன்றி அவர்கள் அதை சாத்தியப்படுத்தவே இல்லை. நமது அரசு அதை செயல்படுத்தியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “விவசாயிகள் அவர்களுடைய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து சந்தைப்படுத்துவதை அந்தச்சிலர் விரும்பவில்லை. இடைத்தரகர்கள் மூலம் லாபம் ஈட்டுவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. விவசாயிகளின் சுதந்திரத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள்” எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து எழுத்தாளரும் புகைப்பட கலைஞருமான சஞ்சுக்தா பாசு ட்விட்டரில், “ஹரியானா முதல்வர் பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளார். உத்தர பிரதேச விவசாயிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மோடி தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.” என குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார்.

வேளாண் மசோதாக்களை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் நாடு தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநில அமிர்தசரசைச் சேர்ந்த விவசயிகள் தமது வயல்களில் வைக்கோலை எரித்து விவசாய சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விவசாயி ஒருவர், “வைக்கோலை எரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை கேட்கிறோம். அவர்கள் எங்களுக்கு வேறு எந்த மாற்றுத் தீர்வையும் வழங்கவில்லையே” எனக் கூறியதாக ஏஎன்ஐ நிறுவனம் ட்விட்டரில் செய்தி பதிவிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்