Aran Sei

கொரோனா தொற்றுக் காலத்தில் தேர்வு – மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

செப் 21ம் தேதி நடைபெறவுள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தனித் தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது போன்ற நோய்த்தொற்றுப் பரவல் காலத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களைத் தேர்வு மையங்களுக்கு அழைத்து வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. இது டிசம்பர் 3 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் அரண் செய்யிடம் பேசிய போது…

“கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களை தேர்வு நிலையங்களுக்குச் சென்று தேர்வெழுதச் சொல்வது அறிவார்த்தமான செயல் அல்ல. ஏனென்றால், உடலளவிலும், மனதளவிலும் சவால்கள் நிறைந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். எளிதில் அவர்களுக்கு கிருமித் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்நிலையில் எப்படி அவர்களை தேர்வு நிலையங்களுக்கு அழைத்து வர முடியும். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஏற்கனவே அதிக கவனத்துடன் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்போது கொரோனா போன்ற நோய்த்தொற்றுக்கு அவர்கள் ஆளாக நேரிட்டால் என்ன செய்ய முடியும்” என்கிறார்.

தேர்வே இன்றி அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என்றதற்கு…

“பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவித்திருப்பதைப் போல மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் ஆல் பாஸ் அறிவிக்கலாம். ஆனால், தேர்வே வேண்டாம் என்பது எங்களது கோரிக்கை அல்ல. மாற்றுத் திறனாளிகளுக்கென மாற்றுத் தொலைத்தொடர்பு இருக்கும்போது மாற்று வழியில் தேர்வை நடத்தலாமே. சில கல்லூரிகளில் வீட்டிலிருந்தபடியே தேர்வெழுதி விடைத்தாளை மெயில் அனுப்பும் முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது. முடக்குவாதத்துக்கு ஆளான மாணவர்களின் பார்வை மூலமே தெர்வு நடத்தும் முறை மேலை நாடுகளில் இருக்கிறது. இதற்கென எத்தனையோ செயலிகள் இருக்கின்றன. எனவே, மாற்றுத் திறனாளி மாணவர்களின் வசதிக்கேற்ப தேர்வு நடத்த வேண்டுமே தவிர, அரசின் வரையறைகளுக்கு உட்பட்டு அவர்கள் தேர்வெழுத வர வேண்டும் என சொல்வது இந்த நெருக்கடிக் காலத்தில் ஏற்புடையதல்ல” என்கிறார் தீபக்.

பள்ளிகளில் பயின்ற பொது மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வெழுத வேண்டும் என்கிற முடிவினை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ட்விட்டரில் வலியுறுத்தியிருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்