Aran Sei

இந்திய அரசு ஊபா சட்டத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது – அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை

image credit : thewire.in

மெரிக்க வெளியுற கொள்கைகளின் மையமாக மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற புதுப்பிக்கப்பட்ட சவடாலுடன், அமெரிக்க வெளியுறவுத்துறை மனித உரிமை அறிக்கை 2020 ஐ சென்ற வாரம் வெளியிட்டது.

அந்த அறிக்கையின் இந்தியா பற்றிய அத்தியாயத்தில், “கைது நடைமுறைகளும் கைதிகளை நடத்துதலும்” என்ற பிரிவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) பயன்பாடு குறித்த பகுதிகளை கீழே தருகிறோம்.

“குற்றம் சாட்டப்படாமலேயே ஒரு கைதியை (போலீஸ் காவலில் 30 நாட்கள் உட்பட) 180 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. கிளர்ச்சி அல்லது பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் 180 நாட்கள் வரை குற்றம் சாட்டப்படாமல் நபர்களை சிறையில் வைக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (ஊபா), வெளிநாட்டு குடிமக்களுக்கு பிணை வழங்குவதற்கு எந்த வழியையும் கொண்டிருக்கவில்லை, மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை மறுக்கும் அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.

“குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றவியல் நோக்கத்தை அரசுத் தரப்பு நிரூபிக்க முடிகிறதா என்பதைப் பார்க்காமல், துப்பாக்கி அல்லது வெடிபொருட்களை வைத்திருந்தது அல்லது ஒரு குற்ற சம்பவ இடத்தில் கைரேகைகள் இருப்பது போன்றவற்றுக்கான ஆதாரங்களை அரசுத் தரப்பில் வழங்கினால் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று ஊபா கருதுகிறது. பல மாநில அரசுகளும் ஊபாவின் கீழ் முறையான குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கு முன்னர் நீண்ட காலத்திற்கு பிணை இல்லாமல் நபர்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட 2018 பிஎஸ்ஐ அறிக்கையில் 5,102 யுஏபிஏ வழக்குகள் புலனாய்விலும் விசாரணையிலும் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

“ஆகஸ்ட் 2019-ல், தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலும், பயங்கரவாத வருமானத்திலிருந்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய தேசிய புலனாய்வு அமைப்புக்கு (NIA) புதிய அதிகாரிகளை வழங்கவும் வகை செய்யும் திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. சட்டம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின்படி, சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2014-ல் 976 ஆக இருந்தது 2018-ல் 1,182 ஆக உயர்ந்தது. மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட கிளர்ச்சி நடவடிக்கைகள் நடந்து வரும் மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் ஊபாவின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

“டெல்லி கலவரத்தைத் தூண்டுவதற்கு சதி செய்ததாக ஏப்ரல் 10-ம் தேதி, கர்ப்பமாக இருந்த மாணவர் தலைவர் சபூரா சர்கரை யுஏபிஏவின் கீழ் அதிகாரிகள் கைது செய்தனர். அவரை விடுவிப்பதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காததால் டெல்லி உயர் நீதிமன்றம் ஜூன் 23 அன்று அவரை விடுவித்தது.

“செப்டம்பர் 13-ம் தேதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களின் போது உரை நிகழ்த்தியதற்காக யுஏபிஏவின் கீழ் கைது செய்யப்பட்டார்.

“ஐந்து மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான மகாராஷ்டிரா போலீஸ் விசாரணையின் பொறுப்பை தேசிய புலனாய்வு முகமை ஜனவரி மாதம் ஏற்றுக்கொண்டது.

“அக்டோபர் 8-ம் தேதி, 83 வயதான ஏசு சபை பாதிரியாரும் மனித உரிமை ஆர்வலருமான ஸ்டான் சுவாமியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது; அவர் ஜாமீன் கோரியதற்கு அக்டோபர் 23-ம் தேதி அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

“ஆகஸ்ட் 17 அன்று, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த மற்றொரு செயல்பாட்டாளர் சுதா பரத்வாஜின் பிணை மனுவை தேசிய புலனாய்வு முகமை எதிர்த்தது, கொரோனா நோய்த்தொற்றின் போது உடல்நலன் குறித்த பிரச்சினைகளை முன் வைத்து தனது சிறை வைப்பை எதிர்த்து அவர் முறையீடு செய்திருந்தார்.

“கைது செய்யப்பட்ட 80 வயதான மனித உரிமை ஆர்வலர் வரவர ராவ்-க்கு, ஜூன் மாதம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை விடுவிக்குமாறு அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் தொடர்ந்து மனு அளித்தனர். [ராவிற்கு மருத்துவ அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது].

“எல்கர் பரிஷத் – பீமா கோரேகான் பீமா நிகழ்வுகளுக்காக, அரசை தூக்கி எறியவும், பிரதமரை படுகொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் மகாராஷ்டிரா போலீஸ் 2018-ல் கைது செய்த ஐந்து மனித உரிமை செயல்பாட்டாளர்களில் ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வரவர ராவ் ஆகியோரும் அடங்குவர்.

“ஐந்து பேரும் தவறான கைதையும் சிறை வாசத்தையும் எதிர்த்தனர், மேலும் இந்தக் கைதுகள் மாற்றுக் கருத்துகளை முடக்கும் நோக்கம் கொண்டவை என்று கூறினர். சென்ற ஆண்டு இறுதி நிலவரப்படி இந்த 5 செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து சிறையில் உள்ளனர்.

விசாரணை நடைமுறைகள்

அரசு இரகசியங்கள் அல்லது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை தவிர்த்து, நியாயமான மற்றும் பொது விசாரணைக்கான உரிமையை சட்டம் வழங்குகிறது. UAPA-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டதைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் கீழ் குற்றமற்றவர்கள் என்றே அனுமானிக்கப்படுகின்றனர்.

மேலும் அவர்களுக்கு தமது வழக்கறிஞரை தேர்வு செய்யும் உரிமை உள்ளது. எந்தவொரு குடிமகனுக்கும் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு சட்ட ரீதியான உதவியை பெற முடியாத குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசு இலவச வழக்கறிஞரை வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பு குறிப்பிடுகிறது, ஆனால் திறமையான வழக்கறிஞர்கள் கிடைப்பதை சூழ்நிலைகள் பெரும்பாலும் மட்டுப்படுத்துகின்றன.

அதிக சுமை கொண்ட நீதித்துறையில் வழக்குகள் நீண்ட கால தாமதத்தை எதிர்கொள்கின்றன. சில வழக்குகளில் வழக்கு விசாரணைக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் கூட ஆகிறது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழக்கறிஞரை சந்திப்பதற்கான உரிமையை போலீசார் மறுத்த நிகழ்வுகளும் கைது செய்யப்பட்டவருக்கும் வழக்கறிஞருக்கும் இடையேயான உரையாடலை கண்காணித்து அவர்களது இரகசிய உரிமைகளை போலீசார் மீறிய நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டுபவர்களை கேள்வி கேட்பதற்கும் தங்கள் சொந்த சாட்சிகளையும் சாட்சியங்களையும் முன்வைக்கவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை இருந்தாலும், சரியான வழக்கறிஞர் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சில நேரங்களில் இந்த உரிமையைப் பயன்படுத்த முடிவதில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாட்சி அளிக்க மறுக்கவும் குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கவும் உரிமை உண்டு. நீதிமன்றங்கள் தீர்ப்புகளை பொதுவில் வெளியிட வேண்டும், நீதித்துறையின் பெரும்பாலான மட்டங்களில் மேற் முறையீடு செய்வதற்கான செயல் திறனுள்ள வழிகள் உள்ளன.

thewire.in இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்