Aran Sei

18 ஆண்டுகள் காத்திருப்பு: இறுதியில் கிடைத்த இழப்பீடு

Image Credits: She The People

த்திய ரிசர்வ் காவலர் படை (சி.ஆர்.பி.எப்) வீரர் ரமேஷ் குமார், 2002-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிர் இழந்தார். அவரது மனைவி பரிமளா தேவி, பணியின்போது உயிரிழந்தோருக்கு வழங்க வேண்டிய ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையைக் கேட்டு மனு அளித்திருந்தார். 18 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின், பரிமள தேவிக்கு இப்போது இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜம்முவின், தோடா மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, ரமேஷ் பணிபுரிந்த வாக்கு சேகரிப்பு மையத்தில் குண்டு வீசப்பட்டு அவர் உயிர் இழந்தார்.

18 ஆண்டுகளாக இழப்பீட்டை வழங்கக்கோரி ஜம்மு-காஷ்மீரின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு பரிமளா தேவி நினைவூட்டி வந்தார். இதுகுறித்து எவ்வித பதிலும் இல்லாத காரணத்தால், ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி, இந்திய தேர்தல் ஆணையர் அரோராவுக்கு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தனக்கு வழங்கப்படாத இழப்பீட்டை வழங்கக் கோரி  பரிமளா தேவி ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

இதனைப் பரிசீலித்த தேர்தல் ஆணையர் அரோரா ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி இந்த மின்னஞ்சலுக்கு அளித்த பதிலில், இழப்பீட்டை வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு மன்னிப்பு கேட்டதோடு, ரமேஷ் குமார் நாட்டுக்குச் செய்த தியாகத்திற்கு நன்றியைத் தெரிவித்தார்.

தற்போது பணியின்போது உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. இருப்பினும், ஏற்பட்ட தாமதத்தை ஈடுகட்டும் வகையில் பரிமள தேவியின் வங்கிக் கணக்குக்கு ரூ. 20 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.

இது போன்று வேறு யாருக்கேனும் இழப்பீடு வழங்கப்படாத நிலை உள்ளதா என ஆராயக்கோரி, அரோரா மற்ற மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக இந்துஸ்தான் டைம்சில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

ஜம்மு-காஷ்மீரில் இது போன்று இரண்டு குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்றும் உடனடியாக இது வழங்கப்படும் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் இத்தகைய பிரச்சினைகள் நடக்காமல் தவிர்ப்பதற்காக டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்கத் தலைமை தேர்தல் அதிகாரிகளை ஆணையம் கேட்டுள்ளது.

இதுகுறித்து அரண் செய்யுடன் பேசிய ராணுவ அதிகாரி ஹரிஹரன் “பொதுவாக பென்ஷன் வாங்குவதற்கே வரிசையில் காத்திருக்கிறார்கள். உயிரிழந்த ஒரு வீரரின் குடும்பத்துக்கு இழப்பீடு கிடைப்பதற்கு தலைமை தேர்தல் அதிகாரி தலையிட்டதை நான் பாசிட்டாவாகத்தான் பார்க்கிறேன்” என்றும் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்