இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்க முயன்றதாக குற்றஞ்சாட்டி, உத்தரகண்ட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கோரியுள்ளது.
ஜாஞ்ச்வார் என்ற செய்தி இணையதளத்தில் பணிபுரியும் கிஷோர் ராமை, இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்க முயன்றதாக கூறி, பிப்ரவரி 24 அன்று இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 153-ஏ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம், “ உத்தரகண்ட் காவல்துறையினரால் பத்திரிக்கையாளர் கிஷோர் ராம் கைது செய்யப்பட்டதற்கு இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் வருத்தம் அடைந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 153-A பிரிவின் கீழ், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்க முயன்றதாக குற்றச்சாட்டின் கீழ் ராம் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளது.
“ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து எழுதி வரும் பத்திரிகையாளர் கிஷோர் ராமின் கைது மிகவும் கவலை அளிக்கிறது. இரண்டு தனித்தனி சம்பவங்கள் குறித்து எழுதியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று பிப்ரவரி 13 அன்று ஒரு தலித் இளைஞர் இறந்தது குறித்தது. மற்றொன்று, பிப்ரவரி 18 அன்று இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்தது” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த இரண்டு சம்பவங்களிலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவர்களை அறிந்தவர்களை நேரில் கண்டு நேர்காணல் செய்து, காணொளிகளாக இணையதளத்தில் கிஷோர் ராம் பதிவேற்றியுள்ளார். ராம் குடும்ப உறுப்பினர்களிடம் சாதியைக் குறித்து கேட்டதாகவும், ஆதிக்கச் சாதியினரால் பட்டியல் சமூக மக்கள் கொல்லப்படுவது குறித்து பேசியதாகவும் காவல்துறை தனது புகாரில் கிஷோர் ராம்மீது குற்றம் சாட்டியுள்ளது” என்று இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
“ஜாதி அடிப்படையிலான குற்றங்கள் குறித்து ஒரு பத்திரிகையாளர் ஆய்வு செய்ததே கைதுக்கான காரணங்களாகக் காவல்துறை குறிப்பிடப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. பத்திரிகையாளர் கிஷோர் ராமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று சங்கம் கோரியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.