Aran Sei

விவசாயிகளுக்காக இலவசமாக ஆஜராக தயார் – துஷ்யந்த் தவே அறிவிப்பு

Image Credits: The Hindu

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு ஆதரவாக இலவசமாக வாதாடத் தயார் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமிட்டி போட்டு சாகடிக்க முயற்சி, “கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

நவம்பர் 26 அன்று, பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் ‘டெல்லி சலோ’ (டெல்லி செல்வோம்) என்ற முழக்கத்தை முன்வைத்து, டெல்லியை நோக்கி பேரணியாக சென்றனர்.

விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 – ஆகிய மூன்று சட்டங்கள் திரும்ப பெறப்பட வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு உறுதியளிக்க வேண்டும் என்பன விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளது.

டெல்லியின் எல்லையில் காவல்துறையினரால் தடுக்கப்பட்ட விவசாயிகள் அங்கேயே அமர்ந்து 11 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் : 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவே, “விவசாயிகள் மற்றும் ஒட்டு மொத்த நாட்டின் நலனை கருதி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் வரையிலோ அல்லது உச்சநீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து தடை உத்தரவு கொடுக்கும் வரையிலோ, இந்த சட்டங்களை நிறுத்தி வைக்கும் வகையில் அரசு, அறிவிப்பானை வெளியிட வேண்டும். இதன் மூலம் விசாயிகள் படும் துன்பதையும் அவர்களின் உயிரையும் காப்பாற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.

விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்

மூன்று விவசாய சட்டங்களையும் எதிர்த்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, சத்தீஸ்கர் கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதை துஷ்யந்த் தவே சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாளை நாடு தழுவிய முழு அடைப்பிற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட பல்வேறு மாநில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்