Aran Sei

`குறுஞ்செய்தியிலும் இந்தித் திணிப்பா’ – எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் சாடல்

Image Credits: National Herald

மிழ்நாட்டில் ரயில் பயனாளிகளுக்கு, ரயில் பயணச்சீட்டு உறுதிப்படுத்தல் குறும்செய்தி இந்தியில் வருவதை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக உடன் கூட்டணியில் உள்ள பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த விவகாரம் தங்கள் எல்லைக்குள் வராது என்றும், இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட மின்-பயணச்சீட்டு நிறுவனமான ஐஆர்சிடிசியிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள் என்றும் அவுட்லுக்கில் செய்தி வெளியாகியுள்ளது.

திமுகவின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன், இந்தியில் பெறப்பட்டதாகக் கூறப்படும் குறுஞ்செய்தியின் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் “ஐஆர்சிடிசி-ல் தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன், உறுதிப்படுத்துதல் குறுஞ்செய்தி, இந்தியில் வருகிறது; இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவரது ட்வீட்டில் ரயில்வே அமைச்சகத்தை டேக் செய்து “ரயில்வே அமைச்சகம் இதில் கவனம் செலுத்தி, அந்தந்த மாநில மொழிகளில் உறுதிப்படுத்துதல் செய்தியை அனுப்ப வேண்டுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தித் திணிப்பை நிறுத்து (#StopHindiImposition) எனும் ஹாஷ்டகைப் பயன்படுத்தி, இது போல், அனைத்துத் தளங்களிலும், இந்தியைத் திணித்து, மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் இந்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

திமுக எம்பி கனிமொழியும் இந்த இந்தித் திணிப்பை விமர்சித்துள்ளார். “அவர்கள் மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து இந்தியைத் திணித்துவருகிறார்கள்,” என்று கூறி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

“குறுந்செய்திகள் இந்தியில் இருப்பதால் மக்களால் (தமிழ் நாடு) அதனைப் படிக்க முடியாது” என்று விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறியுள்ளார். “இத்தகைய சம்பவங்கள் காரணமாக ‘கடுமையான விளைவுகள்’ ஏற்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழியை, “நீங்கள் இந்தியனா?” என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு, சர்ச்சையானது.

மத்தியில் ஆளும் பாஜக உடன் கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவுக்கான குறுஞ்செய்திகள் கடந்த இரு நாட்களாக இந்தியில் அனுப்பப்படுகின்றன. இந்தி பேசாத மக்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும். இதைத் தொடர்வண்டித்துறை கைவிட வேண்டும்!” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திலும், ஆளும் அதிமுக மற்றும் திமுக மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை (என்இபி) 2020-ஐ எதிர்த்தன. அதிமுக குறிப்பாகப் புதிய கல்விக் கொள்கை முன்மொழிந்த மும்மொழிக் கொள்கையை எதிர்த்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்