Aran Sei

டெல்லி கலவர வழக்கின் சாட்சிகளுக்கு ஆபத்து – காவல்துறையின் அலட்சியம்?

இது மிகப்பெரிய அபத்தம். இதன் மூலம் வாழ்க்கையே வீணாகலாம், உயிரேகூட போகலாம்.

டெல்லி கலவரத்திற்கு பின்னால் உள்ள சதித்திட்டத்தை விசாரிக்கும் டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையுடன், 15 சாட்சிகளின் பெயர்களையும் அவர்களின் முகவரிகளையும் (தவறுதலாக?) இணைத்துள்ளது.

காவல்துறையை பொருத்தவரை சாட்சிகளின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், குற்றப்பத்திரிகையில் சாட்சிகளின் பெயர்கள் வரும் இடத்தில் உண்மையான பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

4 இந்துக்கள் மற்றும் 11 இஸ்லாமியர்கள் அடங்கிய 15 சாட்சிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையின் ‘இறுதி அறிக்கை’ என்ற தலைப்பில் பீட்டா, காமா, டெல்டா, எக்கோ, கோல்ஃப், ஹக்டர், ஜூபிடர், லீமா, மைக், ஆஸ்கர், ஆல்ஃபா, பிராவோ, ஒமேகா, விக்டர், சார்லி ஆகிய புனைப் பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாட்சிகள் குறித்த ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று காவல்துறையினரே வலியுறுத்திவிட்டு, சாட்சிகள் குறித்த முழு விபரத்தையும் குற்றப்பத்திகையுடன் சேர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளனர். ஆகவே, சாட்சிகள் பயப்படுவதற்கு முகாந்திரம் உள்ளது.

காவல்துறையின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்துவதுடன், டெல்லி காவல்துறையின் விசாரணை மற்றும் மக்களுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்த நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

விசாரணை நீதிமன்றம் இந்த தவறை கவனித்ததா என்று தெரியவில்லை.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நான்கு நாட்கள் நீடித்த கலவரத்தில் ஒரு காவலர் உட்பட 53 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பொதுமக்களில் 40 பேர் இஸ்லாமியர்கள் 12 பேர் இந்துக்கள். சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பெரும்பாலானவை இஸ்லாமியர்களுடையது.

கலவரத்திற்கு முன்னர் இந்துத்துவ அரசியல்வாதிகள் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியிருந்தபோதும், சரியாக (மொ.ர்; இஸ்லாமியர்களை) குறிவைத்து வன்முறை நடைபெற்றிருந்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய (பெரும்பாலும் இஸ்லாமியர்கள்) செயல்பாட்டாளர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் காவல்துறையினர் வெளியிட்ட 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருந்த சமயம், தேசத்தின் பெயரை கெடுப்பதற்காக, அவர்கள் சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜூன் மாதம், பாட்டியாலா நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறையின் சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், இந்த சாட்சிகள் “குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எவ்வாறு சதித்திட்டத்தை தீட்டினார்கள் என்பதற்கான ஆதாரங்களை குறிப்பிட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களை தாண்டி மேலும் பலருக்கு இதில் உள்ள தொடர்பை குறித்தும் தெரிவித்துள்ளனர்” என்ற குறிப்பிட்டுள்ளார்.

“இந்த சாட்சிகள், குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு வசிக்கிறார்கள், அவர்களோடு பணியாற்றுகிறார்கள் அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே சிலர் அவர்களுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஆகவே, அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுடைய அடையாளத்தை மறைப்பதற்காக புனைப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளதாக” நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சாட்சிகள் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 161ன் கீழ் வாக்குமூலம் அளித்துள்ளனர். மற்றவர்கள் பிரிவு 164ன் கீழ் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டுள்ள, காவல்துறையின் மனுவில் பாதுகாப்பு தேவைப்படும் சாட்சிகளின் முழு பெயர் மற்றும் முகவரி, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புனைப்பெயர்களுடன் குறிப்பிட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.

“ஆகவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாட்சிகளின் புனைப் பெயர்களுக்கு இணையான அவர்களின் உண்மையான பெயர், குற்ற நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (UAPA) பிரிவு 44ன் கீழ், இந்த வழக்கு விசாரணை முழுவதும் ரகசியம் காக்கப்பட வேண்டும்” என்று காவல்துறையின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக முக்கியமான இந்த வழக்கில், டெல்லி காவல்துறை, மிக சாதாரணமாக சாட்சிகள் குறித்த விபரத்தை கசியவிட்டிருப்பது, அதன் விசாரணை நடத்தும் திறனை மட்டுமல்லாமல், விசாரணை செல்லக் கூடிய திசைகுறித்தும் கேள்வியை எழுப்புகிறது.

சாட்சிகள் மிக முக்கியம் என்றால், பொதுவில் இருக்கும் குற்றப்பத்திரிகையில் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட காவல்துறை அனுமதித்தது ஏன்? அல்லது இந்த ‘சாட்சிகளின்’ பாதுகாப்பிற்கான அலுவல்பூர்வ அலட்சியம், அந்த சாட்சியங்கள் நம்பமுடியாதது மற்றும் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது என்ற காவல்துறையினரின் வரம்பிற்குற்பட்ட அதிகாரத்தின் மீதான நம்பிக்கையின் விளைவாக இருக்க முடியுமா?

இரண்டில் எதுவாக இருந்தாலும், டெல்லி காவல்துறை பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இந்த கட்டுரை வெளியான புதன்கிழமைக்கு முன்னர் டெல்லி காவல்துறை தலைவர் எஸ்.என்.ஸ்ரீவத்சவா அவர்களுக்கு, அவருடைய துறையை சேர்ந்தவர்கள் செய்ததை தெரியப்படுத்தியதுடன், அவரிடம் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன.

  • சாட்சிகள் குறித்த விபரங்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா?
  • அந்த 15 சாட்சிகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பது டெல்லி காவல்துறையின் முடிவா? அதன் அடிப்படையில்தான் அவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டதா?
  • ஒருவேளை சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதே உங்கள் நிலைபாடு என்றால், தற்போது அவர்களை பாதுகாக்க என்ன செய்யப் போகிறீர்கள்?
  • ஒருவேளை சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீங்கள் கருதினால், அவர்களின் அடையாளங்களை வெளிப்படுவதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

எஸ்.என்.ஸ்ரீவத்சவா இவற்றிற்கு பதில் அளிக்கும் பட்சத்தில் அவை இந்த செய்தியில் இணைக்கப்படும்.

(www.thwire.in இணையதளத்தில் சித்தார்த் வரதராஜன் எழுதியுள்ள செய்தியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்