Aran Sei

விவசாயப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – மத்திய அரசு

விவசாய திருத்த மசோதாவுக்கெதிராக டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில், போராட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பஞ்சாப், அரியானா உட்பட பல்வேறு இடங்களில் இருந்து டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் டெல்லி நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இதனால், அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதான சாலைகளில் நீண்ட தூரம் கண்டெய்னர் வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் என்று தி இந்து குறிப்பிடுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, டிசம்பர் 3 ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைக் கைவிடுமாறு, விவசாயிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு, வேளாண்துறை அமைச்சர் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதையும் அமித் ஷா சுட்டிக்காட்டி உள்ளார்.

மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதிப்பது நேர்மறையான நடவடிக்கை அல்ல  என விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.சில விவசாயச் சங்கங்கள் விவசாயத் திருத்தச் சட்டங்களை நீக்காமல் பேச்சுக்கு வர தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

விவசாயத் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, 6 மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் டெல்லி நோக்கி விவசாயிகள் அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை முதலில் தடுத்து நிறுத்திய மத்திய மற்றும் அரியானா மாநில அரசுகள் பின்னர், உள்துறை அமைச்சகத்தின் பேரில் டெல்லியில் நுழைய அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்த மத்திய அரசு ஒரு இடத்தையும் அறிவித்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயச் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், அரசு அறிவுறுத்தி உள்ள இடத்தில் போராட்டம் நடத்தினால் விவசாயிகளின் கோரிக்கை குறித்துப் பேச தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதற்கு விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதிக்கக் கூடாது என்றும், அரசு திறந்த மனதுடன் விவசாயிகளின் பிரச்சனைகளை நிபந்தனை விதிக்காமல் அழைத்துப் பேசித் தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் எனவும் பாரதிய விவசாயிகள் சங்க பஞ்சாப் மாநிலத் தலைவர் ஜகஜித்சிங் தெரிவித்துள்ளார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்