Aran Sei

டெல்லி கலவரம் “தன்னெழுச்சியானது” – உள்துறை அமைச்சகத்தின் மீளாய்வு!

Image Credit : thewire.in

பிப்ரவரி மாதத்தில், வடகிழக்கு டெல்லியில் 53 பேரைக் கொன்ற வன்முறை தன்னெழுச்சியாக நடந்த ஒன்று. வன்முறை தூண்டுதலில் வலதுசாரி தலைவர்கள் எந்தப் பங்கும் வகிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்தின் “2020 ஆண்டு-இறுதி மீளாய்வு” தெரிவிக்கிறது.

இந்தியத் தலைநகரான டெல்லியின் ஜாஃப்ராபாத், மௌஜ்பூர் பகுதிகளை மையமாகக் கொண்டு நடந்த வன்முறை அந்தப் பகுதி முஸ்லீம் மக்களை ஓராண்டிற்குப் பிறகும் மீள முடியாத அளவிற்குப் பாதித்துள்ளது என்பது தெரிந்த ஒன்று.

கலவரத்துக்கு காவல்துறை உடந்தையாக இருந்தது, காவல் துறையே முஸ்லீம்களைத் தாக்கியது என்பதைக் காட்டும் காணொளி சான்றுகளுடன், காவல்துறை விசாரணை வெளிப்படையாகவே ஒரு பக்கச் சார்பாக இருந்தது தொடர்பாக பல மக்கள் இயக்கங்களும், நீதித்துறையும் பல கேள்விகளை எழுப்பி உள்ளன. டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.

பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஸ் வர்மா முதலியவர்களின் அனல் வீசும் பேச்சுக்களே வன்முறையை துவக்கின என்பதைசிறுபான்மையோர் ஆணையம், நேரில் கண்ட சாட்சிகள், உண்மை கண்டறியும் குழுக்கள், குடிமக்கள் புலனாய்வாளர்கள் ஆகியோருடைய தொடர் அறிக்கைகள் குறிப்பாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஜாஃப்ராபாத் சிஏஏ எதிர்ப்பு காத்திருப்புப் போராட்டத்தை நிறுத்தவில்லை எனில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்வதாக பொதுவெளியில் பேசியிருந்த போதும் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை.

தி டெலிகிராப் இதழின் ஒரு அறிக்கை, வன்முறை நடந்த ஒரு மாதத்திற்கு முன்பே, உள்துறை அமைச்சர் அடுத்தடுத்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியான பாபர்பூரில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷாஹீன் பாக்கில் பெண்கள் தலைமையில் நடக்கும் விழிப்புணர்வு போராட்டம் “மின் அதிர்ச்சியை” உணரும் அளவு “கோபத்துடன்” வாக்கு எந்திரப் பொத்தானை அழுத்த வேண்டும்,” என்று பேசினார்.

இத்தகைய பின்னணியில், உள்துறை அமைச்சகத்தின் பகுப்பாய்வும், கால வரிசையும் சாரமற்றதாகவும், பல இடங்களில் முற்றிலும் உண்மைக்கு எதிராகவும் உள்ளது.

“பிப்ரவரி 25 ம் நாள் அமித்ஷா, மதவாத வன்முறைகளைத் தூண்டும் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைத் தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தினார். வன்முறை தன்னிச்சையாக நடந்தது என்பது அவருடைய திறமையான மதிப்பீடு. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கூடுதல் படைகளை அனுப்ப உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.” என்று இந்த மீளாய்வு கூறுகிறது.

“சொந்த நலன்களுக்காக, சிஏஏ இந்திய முஸ்லீம்களின் குடியுரிமையை பறித்து விடும் என சிலர் தவறாக வழிகாட்டி, அச்சத்தை விதைக்கிறார்கள். கடந்த இரு மாதங்களாக அவர்கள் பேசிய வெறுப்பு பேச்சுக்களே சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் டெல்லி கலவரத்தின் உச்சகட்டமாக மாறியதற்கான காரணம் என்று அமித் ஷா கூறினார்.” என மீளாய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆகவே, இப்போது உள்துறை அமைச்சகம் தன்னெழுச்சியான கலவரங்கள் என்று கூறுவதை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சிஏஏ வுக்கு எதிராக முஸ்லீம்கள் பேசிய வெறுப்பு பேச்சால் விளைந்தது என்று உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். இந்தச் சட்டம், மூன்று அண்டை நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வருபவர்களில் முஸ்லீம்களை குடியுரிமை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கிறது.

கால வரிசை

பிப்ரவரி 25-ம் தேதி, டெல்லி கலவரம் குறித்து அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்திலிருந்துதான் இந்த மறு ஆய்வு துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பலருடைய கணக்கின்படி பிப்ரவரி 23 ம் தேதியே தலைநகரில் கலவரம் துவங்கி விட்டது.

தி வயர் இதழுக்காக எழுதிய மூன்று பகுதிகளைக் கொண்ட பகுப்பாய்வின் இரண்டாவது பகுதியில், என்.டி‌ ஜெயப்பிரகாஷ், “பிப்ரவரி 24-ம் தேதி மதியத்திலிருந்தே வடகிழக்கு டெல்லியில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வது டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது,” என்று எழுதுகிறார்.”

இந்தத் தகவலை அவர்கள் தங்கள் உள்துறை அமைச்சக மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருந்திருப்பார்கள் என்பதை நம்புவது கடினம்.

அமித் ஷா நடத்திய கூட்டம் கலவரம் தன்னெழுச்சியாக தொடங்கியது என்ற தவறான முடிவை வந்தடைந்தது மட்டுமின்றி, அந்தக் கூட்டமே காலம் தாழ்த்திதான் கூட்டப்பட்டுள்ளது என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

காவல் துறை நடவடிக்கைகளும் அதிரடிப்படையினரும் துணை ராணுவப் படைகளும் அனுப்ப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்க அளவு தாமதமாகவே செய்யப்பட்டது என்பதை பிற ஊடகங்களின் செய்தி அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளதை ஜெயப்பிரகாஷின் பகுப்பாய்வு சுட்டிக் காட்டுகிறது.

“பிப்ரவரி 27-ம் தேதி வெளிவந்த டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியின்படி, பிப்ரவரி மாதம் 25-ம் தேதி தான், அதிரடிப்படை அணிகள் கார்டம்புரி, பஜன்புரா, கார்வால் நகர், சந்த்பாக் (வடகிழக்கு டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகள்) பகுதிகளுக்கு வந்திறங்கின,”

அந்த நாளில் கூட அவை பணியில் ஈடுபடுத்தப்பட்டனவா என்பதும் தெளிவாக இல்லை. ஏனெனில், வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்த குறைந்தது இரண்டு காவல் நிலையங்களில் பிப்ரவரி 26 அன்று மாலை வரை கூட உயிர்காக்கும் அழைப்புகள் (SOS calls) மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.

மேலும், மார்ச் 12-ம் தேதி அமித் ஷா மாநிலங்களவையில் கலவரங்களைப் பற்றி உரையாற்றியதாக உள்துறை அமைச்சகத்தின் மீளாய்வு தெரிவிக்கிறது. “….குற்றவாளிகளின் சாதி, மத, இன பின்னணியை பொருட்படுத்தாமல் கலவரத்தில் ஈடுபட்டவர்களை, மோடி அரசு நீதியின் முன் நிறுத்தும்” என்று அது சுட்டிக் காட்டுகிறது..

எனினும், கலவரம் குறித்து புலனாய்வு, உண்மையில், முஸ்லீம் அறிஞர்களும், செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் காவல்துறையின் சித்திரவதை, உபா வழக்குகள், நீடித்த தண்டிக்கும் விதமாக சிறைத்தண்டனை ஆகியவற்றை எதிர்கொள்பவர்களாக நடத்தப்பட்டது.

தி வயர் தளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்