Aran Sei

டெல்லி கலவரம் – சிறையில் தாக்கப்படும் முஸ்லீம் அரசியல் கைதிகள்

செவ்வாய் அன்று, வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் விசாரணை நடத்திய போது, சிறையில் கைதிகள் தாக்கப்படுவது, காயமடைவது மற்றும் அதிகாரிகள் அலட்சியப்போக்கு குறித்த பிரச்சினைகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹுசைனின் வழக்கறிஞர் ரிஸ்வான், வட-கிழக்கு டெல்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் ஒடுக்குமுறைக்கு ஆளாவதாக தெரிவித்தார். மேலும், பெரும்பாலும் இஸ்லாமியர்களாக இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே “பயங்கரவாதிகள்” என முத்திரை குத்தப்படுவதாகவும் கூறினார்.

டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் – சிறையில் தாக்கப்பட்டதாக புகார்

முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஸ்ரத் ஜஹான் உட்பட, பலர் சிறையில் தாக்கப்படுவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளனர். டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறை அதிகாரிகள் குறித்து பதிவு செய்யும் புகார்களில் சில கீழ் வருமாறு :

தன்வீர் மாலிக்

மாலிக், இந்தவருடம் பிப்ரவரி மாதம் தயால்பூர் பகுதியில் நடந்த மதக்கலவரத்துடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். டிசம்பர் 8-ம் தேதி , மண்டோலி சிறை அதிகாரிகள் மிக மோசமாக தன்னை அடித்ததாகவும், அதற்கு பிறகு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு கூட தன்னை கொண்டு செல்லவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு உணவு அளிக்காத சிறை அதிகாரிகள், சமரசத்திற்கு வர கட்டாயப்படுத்துவதாகவும், இல்லையென்றால் சிறை வாழ்க்கையை நரகமாக்கிவிடுவோம் என அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

சிறை அதிகாரிகள், டிசம்பர் 18 முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் தினேஷ் குமாரிடம் சமர்பித்த குறிப்பில், சிறையில் செல்போன்கள் இருக்கிறதா என சோதனை நடத்தும் போது “தன்வீர் மாலிக் திடீரென வன்முறையில் இறங்கினார். அவரை கட்டுப்படுத்த முயற்சித்த போது தான் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது” எனவும் அனுதாபத்தை பெறுவதற்காக மாலிக் பொய் சொல்வதாகவும் கூறினர்.

மேலும் சிறை அதிகாரிகள், “மாலிக்கிற்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் அவர் பதற்றமடைய ஒரு காரணமும் இல்லை. அதனால் தான் சிறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், அவரை கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர் கீழே விழுந்து அவருடைய கால் விரல்களில் அடிபட்டுக் கொண்டார்” என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆசிஃப் இக்பால் தன்ஹா

டெல்லி கலவர வழக்கில் கைதான ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர் ஆசிஃப் இக்பால் தன்ஹா. வீடியோ கான்ஃபரென்சிங் வழியே தன்னுடைய குடும்பத்தினர் தன்னை சந்திக்க முயற்சி செய்து கொண்டே இருந்தாலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், சிறையில் தான் மீண்டும் மீண்டும் “பயங்கரவாதி” என அழைக்கப்படுவதாகவும் கூறினார்.

சிறையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் தரப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்களும், வழக்கறிஞர்களும் முன்பு தெரிவித்த போது, இது குறித்து ஒரு அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. ஆனால், இப்போது வரை அப்படி ஒரு அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என தன்ஹாவின் வழக்கறிஞர் சௌஜன்யா சங்கரன் நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

நவம்பர் 3 -ம் தேதி, சிறையின் நிலவரம் மேம்படவில்லை என்றால், தானே நேரில் சென்று பார்ப்பதாக நீதிபதி பதிலளித்தார். ஆனால், குறைகளை எல்லாம் சிறை அதிகாரிகளே நிவர்த்தி செய்ததாக ஏற்றுக் கொண்ட நீதிபதி சிறைக்கு போகவில்லை.

உமர் காலித்

டெல்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட உமர் காலித், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன பிறகும், குற்றப்பத்திரிக்கையின் நகல் தனக்கு அளிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். இதற்கு பதிலாக, உமர் காலித்தின் வழக்கறிஞரிடம், திகார் சிறை அதிகாரிகளிடம் குற்றப் பத்திரிகையின் நகலை பெறுவது குறித்து விண்ணப்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

( தி வயர் தளத்தில் வெளியான சிறப்புச் செய்தியின் சுருக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்