Aran Sei

தில்லி வன்முறை: ஊபா சட்டத்தின் கீழ் உமர் காலித் கைது

டந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உமர் காலித் ( நன்றி : தி ப்ரிண்ட் )

வன்முறை தொடர்பாக தில்லி காவல்துறை 700-க்கும் மேற்பட்ட  வழக்குகளை பதிவு செய்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது. தில்லி காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் பொதுச்செயலாளரான சீத்தாராம் யெச்சூரி, பொருளாதார அறிஞர் ஜெயதி கோஷ், தில்லி பல்கலை கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் போன்றோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

தில்லி வன்முறை (நன்றி : புதிய தலைமுறை)

இந்நிலையில் தில்லி வன்முறை தொடர்பாக, ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் நேற்று (ஞாயிறுக்கிழமை செப்டம்பர் 13, 2020) தேசவிரோத தடுப்பு  சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைதிற்கு முன் தில்லி காவல் துறை அவரை 11 மணி நேரம் விசாரித்ததாக ஸ்க்ரால் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட உமர் காலித், இன்று (திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஷீலா ரஷீத் (நன்றி : Scroll.in)

இது குறித்து ஜே.என்.யு பல்கலை கழக ஆராய்ச்சி மாணவியும், மாணவர் தலைவருமான ஷீலா ரஷீத் அரண் செய்-யிடம் பேசிய போது, ”உமர் காலித்தின் மீது போடப்பட்ட வழக்கு முழுக்க முழுக்க அரசால் பொய்யாக ஜோடிக்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் நோக்கத்துடனேயே அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.

தில்லி வன்முறை (நன்றி : மாலைமலர்)

ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தின் கைது குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் #StandwithUmarkhalid என்ற ஹேஷ்டாக்குடன் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

குஜராத் வாட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், “உமர் ஒரு போராளி. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். உங்களால் அவரை தோற்கடிக்க முடியாது, திரு.அமித் ஷா“ என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல மேடை நகைச்சுவைக் கலைஞர் குணால் காம்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்ட ஒழுங்கின் பகடி கூடாரமாக டெல்லி காவல்துறை உள்ளது.“ என்று பதிவிட்டுள்ளார்.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டட்ர் பக்கத்தில், “யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜயதி கோஷ், அபூர்வானந்த் போன்றவர்களின் பெயர்களை சேர்த்த பிறகு, தில்லி காவல்துறை உமர் காலித்தை கைது செய்திருப்பதின் மூலம், தில்லி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை எவ்வளவு மோசமான முறையில் நடந்துக்கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விசாரணை என்கிற பெயரில் வேண்டுமென்றே அமைதியாக செயல்படும் செயற்பாட்டாளர்களை குறிவைத்து காவல்துறை செயல்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

உமர் காலித்தின் தந்தையான சையத் காஸிம் ரசூல் இலியாஸ், “அரசுக்கு எதிரான குரல்களை டெல்லி காவல்துறை நசுக்கப்பார்க்கிறது” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்