Aran Sei

டெல்லிக் கலவரத்தின் பின்னணி : டெல்லி கமிஷனர் பேட்டி

credits : the hindu

டெல்லிக் கலவரத்தை அறிவியல் ஆதாரங்களைக்கொண்டு விசாரித்ததில் ஒரு குறிப்பிட்ட குழுவினரே இதன் பின்னணியில் இருப்பது தெரிய வருகிறது. இதில் காவல்துறை தன் கடமையைச் செய்யும் என்று கூறியிருக்கிறார் டெல்லிக் காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவத்சவா.

பிப்ரவரி மாதம் வட கிழக்கு டெல்லியில் நடந்த மதக்கலவரம் தொடர்பான பத்திரிகையாளர் கேள்விகளுக்குப் பதிலளித்தார் டெல்லிக் காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவட்சவா.

டெல்லிக் கலவரம் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நீங்கள் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றீர்கள். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக கலவர இடத்திற்கே சென்று பேசினார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அஜித் தோவல். டெல்லிக் காவல்துறை தனது கடமையைச் செய்யத் தவறியதா?

டெல்லிக் காவல்துறை சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதிலும் குற்றத்தைத் தடுப்பதிலும் நல்ல மதிப்பையே பெற்றிருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. டெல்லியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன். எதன் அடிப்படையில் இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய தகவல் எனக்குத் தெரியாததால் இதில் கருத்து கூற இயலாது என்று கூறினார்.

கலவரத்திற்கு உடந்தையாகப் பல காவலர்கள் செயல்பட்ட காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. குறிப்பாக ஒரு காவலர் ஒரு இஸ்லாமியரை தேசிய கீதம் பாடச் சொல்லித் தாக்கினார். தாக்கப்பட்ட நபர் இறந்து போனார். இந்தச் சம்பவம் நடந்து 7 மாதங்கள் நிறைவிடைந்து விட்டது. இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இந்த விவகாரத்தில் ஏற்கனவே முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்து விட்டோம். அந்தக் காணொலியில் சில காவலர்கள் ஃபைசன் மற்றும் நான்கு பேரை வற்புறுத்தபடுவதையும் தாக்கப்பட்டதையும் பார்த்தோம். இதன் அடிப்படையில் அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் மூலம் மேலும் சில காணொலிகளைக் கண்டோம். அதன் மூலம் இந்த வழக்கில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். அந்தப் பகுதியில் பணியில் இருந்த காவலர்களும் விசாரிக்கப்படுகின்றனர். தங்கள் வரம்பு மீறிச் செயல்படும் எந்தக் காவலரையும் டெல்லிக் காவல்துறை சகித்துக்கொள்ளாது.

டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் கலவரம் குறித்த தனது அறிக்கையில் பிப்ரவரி 23 அன்று பேசிய பாஜக தலைவர் கபில் மிஷ்ராவின் உரையே வன்முறை வெடித்ததற்குக் காரணம் என்று கூறியிருக்கிறது. வன்முறையைத் தூண்டியதற்காக பாஜக தலைவர் மீது ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை?

டெல்லிச் சிறுபான்மையினர் ஆணையம் இவ்வளவு குறுகிய தகவலை வைத்து எப்படி இந்த முடிவுக்கு வந்தது என்பது தெரியவில்லை. போராட்டம் மதக்கலவரமா மாறியது எப்படி இது யாருடைய சதி என்பதைப் பற்றிய குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் உள்ள புகார்களை அடிப்படையாய் வைத்தே காவல்துறை விசாரனையை மேற்கொள்ளும். விசாரணை முடிந்த பின்னரே விசாரணையின் முழுப் பின்னணியும் குற்றப்பத்திரிகையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. காவல்துறை கொடுக்கும் தகவல்களும் ஆதாரங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படுகிறது. மற்றவர்கள் இந்தக் கலவரத்தைக் காவல்துறை கையாண்ட விதத்தைப் பற்றி ஒரு தவறான கதையை உருவாக்கக் கூடாது. இதை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கே உள்ளது. ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்படுவது  ஆதாரங்களை வைத்து, அனுமானங்களால் அல்ல.

பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் சந்த் பாக் எனும் பகுதியில் கலவரம் தொடங்கி கல்வீச்சு நடத்தப்பட்டது என்றும் முதலில் காயம்பட்டவர் மதியம் 12.15 மணிக்கு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்தாகவும் விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஷ்ரா ஊடகங்களிடம் பேசியது மதியம் 3.30 க்கு மேல் என்பதும் காணொலிகளின் மூலம் உறுதியாகிறது. இதிலிருந்தே கபில் மிஷ்ரா பேசுவதற்கு முன்பே கலவரம் தொடங்கப்பட்டுவிட்டது என்பது தெளிவாகிறது.

ஜாஃப்ராபாத் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற வேண்டும் என்று கபில் மிஷ்ரா பேசிக்கொண்டிருக்கும் காணொலியில் வட கிழக்கு டெல்லியின் துணைக் காவல் ஆணையர் வேத் பிரகாஷ் சுர்யா தென்பட்டது குறித்தான விளக்கம் கேட்கப்பட்டதா?

பிப்ரவரி 23 காலை 11 மணியளவில் மதக் கலவரத்தால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்சனையைக் கையாண்டுக் கொண்டிருந்தார் வட கிழக்கு டெல்லியின் துணைக் காவல் ஆணையர் வேத் பிரகாஷ் சுர்யா, கபில் மிஷ்ரா மாஜ்பூர் பகுதிக்கு வந்தபொழுது, தன் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் உடையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்ததார். கல்வீச்சு நடத்தப்பட்டதற்குப் பின்பே காணொலி எடுக்கப்பட்டதால் பல கற்கள் சாலையில் இருப்பதைக் காணொலியில் காணலாம்.

டெல்லியின் சமூக அமைப்புகள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் , சிந்தனையாளர்கள் இதைத் தேசியக் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இளம் சமூகச் செயற்பாட்டாளர்களைக் களையெடுக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளதைப் பற்றி உங்கள் பதில்?

இந்தப் பிரச்சினையில் நான் ஏற்கனவே ஒரு முறை பதிலளித்தேன். எல்லா வழக்குகளையும் போலவே நாங்கள் திறந்த மனதுடன் விசாரணையைத் தொடங்கினோம். சி.சி.டி.வி காட்சிகள், வாட்ஸ்அப் சாட்டுகள், செல்லுலார் இணைப்பு, மீட்டெடுக்கப்பட்ட மொபைல் போன் தரவு, புவி இருப்பிடம், டி.என்.ஏ பகுப்பாய்வு, வாகனத் தரவுகள், முகப் புனரமைப்பு போன்ற அறிவியல் ஆதாரங்கள் மற்றும் விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில்தான் விசாரணை நடத்தப்பட்டது. இந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒரு குழுவின் நபர்களை நோக்கியே கைநீட்டுகிறது. இதில் காவல்துறை அதன் கடமையைச் செய்யும். விஞ்ஞான ஆதாரங்களைத் தவிர, வடகிழக்கு டெல்லிக் கலவரத்தில் பங்கு வகிக்கும் அல்லது உண்மையைக் கண்டறிய தகவல்களைத் தெரிவித்த பெரும்பான்மையான நபர்களை டெல்லிக் காவல்துறை ஆய்வு செய்துள்ளது. இது நபர்களின் மதம் மற்றும் கட்சி தொடர்பைப் பொருட்படுத்தாமல் கேள்வி எழுப்பியுள்ளது. 1,616 நபர்களை அவர்களின் சாதி, மதம், தொழில் அல்லது தொடர்புகளை பொருட்படுத்தாமல் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இரு சமூகங்களிடையேயும் சமமாக இருக்கிறார்கள். மேலும் இந்தச் சமூகம் / குழு “இளம் சமூகச் செயற்பாட்டளர்” வகைக்குப் பொருந்தாது என்று நான் நம்புகிறேன். நீங்கள் அவர்களைப் பற்றியும் சமமாக அக்கறை கொள்ள வேண்டும்.

ஜனவரி 5 அன்று கம்பிகள் மற்றும் கட்டைகளுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கியுள்ளனர் முகமூடி அணிந்த நபர்கள். இதில் ஏன் இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை?

ஜனவரி மாதம் நடந்த ஜே.என்.யூ சம்பவங்கள் தொடர்பாக மூன்று வழக்குகளை டெல்லிக் காவல்துறை விசாரித்து வருகின்றனர். ஜே.என்.யுவில் போட்டியிடும் இரு  பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் பெயர்களும் எஃப்.ஐ.ஆர் ரில் இணைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கு விரைவில் இறுதி செய்யப்படும். இருப்பினும், இந்த வழக்குகளில் எந்த நபரும் கைது செய்யப்படவில்லை.

THE HINDU  இதழில் வெளிவந்த செய்தியின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்