முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு நடத்த கோரி பயிற்சி மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, டெல்லி காவல்துறையினர் மிருகத்தனமான தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ள, டெல்லியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களின் சங்கங்கள் தங்களுடைய மருத்துவ சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவோம் என்று எச்சரித்துள்ளன.
கடந்த ஒரு மாதமாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு, தங்களுடைய உறுப்பினர்கள் 4,000 பேர் கொரோனா தடுப்பு இரவு நேர ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் விதமாக, நேற்று(டிசம்பர் 27) நள்ளிரவு சரோஜினி நகர் காவல் நிலையத்தில், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியதாக கூறியுள்ளது.
முன்னதாக சுகாதார அமைச்சகத்தின் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய மருத்துவ சங்கத்தின் கூட்டமைப்பானது அதனுடன் தொடர்புடைய அனைத்து பயிற்சி மருத்துவர்கள் சங்கங்ளுக்கும், இந்தியா முழுவதும் உள்ள பிற மருத்துவர் சங்கங்களுக்கும் நாளை(டிசம்பர் 29) முதல் தொடங்கும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் சங்கமும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, 24 மணி நேரத்திற்குள் அரசிடமிருந்து இருந்து உரிய பதில் வரவில்லை என்றால், நாளை முதல் அனைத்து அவசரகால சேவைகளும் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது.
Thousands of doctors being detained at Sarojini Nagar Police Station!@rashtrapatibhvn @VPSecretariat @FordaIndia @IMAIndiaOrg @delhimediasso @ArvindKejriwal @SatyendarJain @INCIndia @AshishOnGround @AshishOnGround @IndiaToday @TheQuint @thewire_in @ndtv @ndtvindia @abplivenews pic.twitter.com/wPM4NDfbkX
— RDA_UCMS & GTBH (@RdaUcms) December 27, 2021
காவல்துறையினரின் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பல பெண் மருத்துவர்கள், மருத்துவத்துறையின் சகோதரத்துவ கூட்டுணர்வுக்கு இது ஒரு கருப்பு நாள் என்றும் பேரணியின்போது தாங்கள் முரட்டுத்தனமாக கையாளப்பட்டோம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இப்போராட்டத்தினால், சப்தர்ஜங், ஆர்எம்எல் மற்றும் லேடி ஹார்டிஞ்ச் ஆகிய மூன்று முக்கிய அரசு மருத்துவமனைகள் பாதிப்புக்குள்ளானது என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு நடத்தப்படாமல் இருப்பதால்தான், இந்த பாதிப்பு உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் அதிக வேலைப்பளுவுக்கு ஆளாவதாகவும், 66 விழுக்காடு பணியிடங்கள்தான் நிரப்பப்பட்டு செயல்படுவதாகவும் கூறியுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், புதிய மருத்துவர்களை உடனே பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மருத்துவ சேர்க்கை இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், ஓராண்டாக பணியமர்த்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் மணீஷ் நிகாம் கூறுகையில், திங்களன்று (டிசம்பர் 27) பெரிய மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அடையாளமாக தங்கள் ஆய்வக கோட்டை நிர்வாகத்திடம் திருப்பியளித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாங்கள் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு பேரணியாக செல்ல முயன்றோம். ஆனால், நாங்கள் பேரணியைத் தொடங்கியவுடன், காவலர்கள் எங்களைத் தடுத்துவிட்டனர். பலவந்தமாக நடந்துக்கொண்ட காவலர்களுடனான தகராறில் இளம் மருத்துவர்கள் சிலர் காயமடைந்தனர்” என்று கூறியுள்ளார்.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.