Aran Sei

” மோடி அரசை சட்டங்களை ரத்து செய்ய வைப்போம் ” – விவசாயிகள் மேலும் உறுதி

“என்ன ஆனாலும் சரி, வெற்றி பெறுவதற்கு உறுதியாக உள்ளோம்” என்று சிங்கு எல்லையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாய தலைவர்கள் கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா) விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால், “சட்டங்களை ரத்து செய்ய மாட்டோம் என்று அரசு கூறுகிறது. ஆனால், அவர்களை ரத்து செய்ய வைப்போம்” என்று கூறியுள்ளார்.

சிங்கு எல்லையில் ஊடகவியாலளர்களிடம் பேசும் விவசாய சங்கத் தலைவர்கள் – Image Credit : Indian Express

மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால் டெல்லி – நோய்டா சாலையை சில்லா பகுதியில் தடுத்து நிறுத்தப் போவதாக விவசாயத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். டெல்லி – நோய்டா சாலை புதன் கிழமை காலை 11 மணிக்கு மூடப்பட்டு விடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் மோடியின் பேச்சும், விவசாயிகளின் கண்டனமும்

டெல்லி அருகில் திரண்டு போராடி வரும் விவசாயிகள் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் இணையவழி கூட்டத்தில் பேசிய அவர், “அரசியல் செய்யும், பொய்களை பரப்பும், விவசாயிகளை பயன்படுத்தி அரசை தாக்கும் நபர்களை முற்போக்கான விவசாயிகள் தோற்கடிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

பாரதிய கிசான் யூனியன் (திகாயத்) குழுவின் பொதுச் செயலாளர் யுத்வீர் சிங் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“நாங்கள் மோடிக்கு வாக்களித்தோம், ஆனால் அவர் இப்போது நாங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கவோ, எங்களுடன் பேசவோ தயாராக இல்லை. அவருக்கு வாக்களித்து தவறு செய்து விட்டோம் என்று எல்லா விவசாயிகளும் உணர்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Image Credit : Indian Express

விவசாய சட்டங்களுக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறும் விவசாய அமைச்சர்

விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாரதிய கிசான் யூனியன் (கிசான்) பிரிவைச் சந்தித்து, அவர்கள் விவசாய சட்டங்களின் பலன்களை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

தாங்கள் உத்தர பிரதேசத்தின் மாவட்ட அளவில் நடத்தி வரும் போராட்டங்களை இப்போதைக்கு முடித்துக் கொள்வதாக பாரதிய கிசான் யூனியன் (கிசான்) பிரிவு தெரிவித்துள்ளதாக, பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த பிரிவு, டெல்லியின் பல்வேறு எல்லைகளில் போராடி வரும் 40 விவசாயிகள் குழுக்களில் இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் வேண்டும் என்று கோருபவர்களின் நம்பிக்கைகளை குலைக்கும் விதமாக, “குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு நிர்வாக முடிவு, அது அப்படியே தொடரும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

டெல்லியின் ஜிடி கர்னால் சாலையில் போராடும் விவசாயிகள் – Image Credit : The Hindu

போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு அஞ்சலி

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் 20 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். தமது உயிரை தியாகம் செய்த விவசாயிகளுக்கு டிசம்பர் 20-ம் தேதி அஞ்சலி செலுத்துமாறு விவசாய தலைவர்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

செவ்வாய்க் கிழமை அன்று டெல்லி – அம்பாலா நெடுஞ்சாலையில் உள்ள ஹரியானாவின் கர்னாலில் அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோதியதில் டிராக்டரில் போராட்டத்தில் கலந்து கொண்டு சென்று கொண்டிருந்த இரண்டு விவசாயிகள் கொல்லப்பட்டனர், ஒருவருக்கு காயம் ஏற்பட்டது என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்