Aran Sei

விவசாயிகளின் குடியரசு தின பேரணியில் நடந்தது என்ன? – ஊடகங்களின் பிரச்சாரம் உண்மையா?

Image Credit : scroll.in

னவரி 26-ம் தேதி காலை 9 மணியளவில் டெல்லியின் வடக்கே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர்களின் முதல் அலை வெற்றிகரமாக ஓடியபோது, அதில் மிகவும் குறிப்பிடத்தக்க சின்னம் இந்திய மூவண்ணக் கொடியாகும். காவி நிற நிஷான் சாஹிப், சீக்கிய கல்சா பந்தின் கொடி, அத்துடன் பல்வேறு விவசாய சங்கங்களின் பலவகையான கொடிகள் இவை அனைத்தையும் விட மூவண்ணக் கொடி ஆதிக்கம் செலுத்தியது.

Image Credit : scroll.in
Image Credit : bbc.com

ஆனால், பிற்பகலுக்குள், தொலைக்காட்சி செய்திகளில், நிஷான் சாஹிப்பின் கொடி செங்கோட்டையின் உச்சியில் பறக்கும் ஒரே ஒரு காட்சி மட்டுமே மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. சில வர்ணனையாளர்கள் அந்தக் கொடியை தனி சீக்கிய தாயகத்தை கோரும் காலிஸ்தானி குழுக்களுடன் தவறாக இணைக்க அவசரப்பட்டனர். விவசாயிகள் போராட்டங்களுக்கு பின்னால் ஒரு சதித்திட்டம் உள்ளது என்ற அரசின் குற்றச்சாட்டுகளை அவர்களும் சொன்னார்கள்.

Image Credit : bbc.com
டெல்லி விவசாயிகள் பேரணியின் பாதைகள் – Image Credit : bbc.com

இந்தியாவின் குடியரசு தினத்தின் காலையில், ஜனாதிபதியும் பிரதமரும் வண்ணமயமான அணிவகுப்பை ராஜ்பாத்தில் பார்வையிட்ட போது, லட்சக்கணக்கான விவசாயிகள், வடக்கில் சிங்கு, பஞ்சாபிலிருந்து சீக்கிய விவசாயிகளின் போராட்ட மையம்; மேற்கில் திக்ரி, ஹரியானாவைச் சேர்ந்த ஜாட் விவசாயிகளின் போராட்ட மையம்; தென்கிழக்கில் காசிப்பூர், மேற்கு உத்தரபிரதேச, உத்தரகண்ட் மாநில விவசாயிகளின் போராட்ட மையம் ஆகிய மூன்று திசைகளிலிருந்து நகரத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்:

இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்
– ஷோயிப் டானியல்

இந்த மூன்று இடங்களிலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் சிறிய எண்ணிக்கையில் இருந்தனர். இந்தியாவின் மற்ற நகரங்களிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

“விவசாயிகள் பயங்கரவாதிகள் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு தேவையான உணவை நீங்களே பயிரிட்டுக் கொள்ளுங்கள்”. பெங்களூரு விவசாயிகள் போராட்டத்தில் ஒரு ஆதரவாளர்.
– அருண் தேவ் (@ArunDev1)

டெல்லிக்கு செல்லும் பாதை கோலாகலமாக வண்ணமயமாக இருந்தது. டிராக்டர்களிலும் லாரிகளிலும் விவசாயிகள் சவாரி செய்தனர், மற்றவர்கள் நடந்து சென்றனர்.

Image Credit : scroll.in
கொண்டாட்டங்களும், பாடலும், ஆடலும் – Image Credit : scroll.in

“கிசான் ஏக்தா, ஜிந்தாபாத்” (விவசாயிகள் வாழ்க), “மோடி சர்க்கார், ஹை ஹை.” மோடி அரசாங்கம் ஒழிக ஆகிய முழக்கங்கள் காற்றை நிரப்பின.

பாடலும் ஆடலும் நிரம்பி இருந்தது. டெல்லியின் வாசலில் 60 நாட்கள் முகாமிட்ட பின்னர், விவசாயிகள் இறுதியாக தலைநகருக்குள் நுழைகின்றனர் என்ற மகிழ்ச்சி உணர்வு இருந்தது.

டெல்லிக்கு செல்லும் டிராக்டர்களின் கடல் – சுப்ரியா சர்மா

“டெல்லி என்பது அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, அது எங்கள் தலைநகரமும் கூட” என்று பஞ்சாபின் பாட்டியாலாவைச் சேர்ந்த தர்மிந்தர் சிங் கூறினார். “அவர்கள் எங்களை இரண்டு மாதங்கள் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தார்கள். அது சரியில்லை. நாம் ஒரு ஜனநாயக நாடு. தலைநகரில் போராடுவது எங்கள் உரிமை. ”

உரையாடலைக் கேட்டுக் கொண்டு நின்ற பாட்டியாலாவைச் சேர்ந்த ராமன் கவுர் என்ற இளம் பெண் மேலும் கூறினார்: “குடியரசு தினத்தில் பங்கேற்பது எங்கள் உரிமை.”

பாரதிய கிசான் யூனியனின் உறுப்பினரான 74 வயதான நரிந்தர் சிங், நவம்பர் 26 அன்று டெல்லிக்குச் சென்ற முதல் விவசாயிகளில் ஒருவராக இருந்தார், ஆனால் நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. விவசாயிகள் தலைநகருக்குள் நுழைவது ஏன் முக்கியம் என்பதை விளக்கி, அவர் கூறினார்: “சட்டங்கள் டெல்லியில் நிறைவேற்றப்பட்டன. மோடி டெல்லியில் ஒழிந்திருக்கிறார். நாங்கள் அவருடைய இடத்திற்குள் நுழைய வேண்டும். ”

பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்த 74 வயதான நரிந்தர் சிங், விவசாயிகள் டெல்லியை அடைவது ஏன் முக்கியம் என்பதை விளக்குகிறார்

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் நிறைவேற்றிய மூன்று விவசாயச் சட்டங்களை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோருகிறார்கள், அந்தச் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் தயவில் அவர்களை கொண்டு விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அரசாங்கம், பல வாரங்கள் முட்டுக்கட்டைக்குப் பின்னர், டிசம்பர் நடுப்பகுதியில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்த பிறகு அரசாங்கம் குடியரசு தினத்திற்கு முன்னதாக போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர ஆர்வமாக இருந்தது.

ஆனால், குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுச்சந்துக்குள் வந்தன: அரசாங்கம் சட்டங்களை ஒன்றரை ஆண்டு இடைநிறுத்த முன்வந்தது. விவசாயிகள் இந்த வாய்ப்பை நிராகரித்தனர், சட்டங்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை, டிராக்டர்கள் முன்னேறிச் சென்றன, அவர்களை டெல்லி குடிமக்கள் மலர்களால் வரவேற்றனர்.

சில இடங்களில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன, பிற இடங்களில் பூக்கள் பொழியப்பட்டன.

சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது குடிமக்கள் மலர்களைப் பொழிந்த காட்சி இதுதான், இப்போது சாலை மலர்களால் மூடப்பட்டுள்ளது – சுகிர்தி திவேதி

எல்லோரும் விவசாயிகளை ஆதரிக்கவில்லை. வடக்கு டெல்லியில் ஒரு அரிசி கிடங்கில் வேலை செய்யும் சிலர் சிங்குவிலிருந்து வரும் டிராக்டர் பேரணியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். “இவர்கள் விவசாயிகள் அல்ல” என்று ஒரு நடுத்தர வயது மனிதர் நிராகரித்தார். பப்பு என்ற ஒற்றை பெயருடன் தன்னை அடையாளம் காட்டிய அவர், ராஜஸ்தானில் உள்ள சிகாரில் இருந்து ஒரு விவசாய குடும்பம் என்று கூறினார். ஆர்ப்பாட்டங்கள் பஞ்சாபில் “காலிஸ்தானியர்களாலும்” பிற மாநிலங்களில் அரசியல் எதிர்க்கட்சிகளாலும் தூண்டப்படுகின்றன. “மோடி யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்,” என்று அவர் கூறினார்.

Image Credit : bbc.com
தடுப்பரண்களை தகர்த்த விவசாயிகள் – Image Credit : bbc.com

டிராக்டர் பேரணிகளுக்கு டெல்லி காவல்துறை மூன்று வழித்தடங்களை நிர்ணயித்திருந்தது, அதை விவசாயிகளுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா ஏற்றுக்கொண்டது. அதிகார பூர்வ குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் பேரணிகளைத் தொடங்க மோர்ச்சா ஒப்புக்கொண்டது. ஆனால் போராடும் பல விவசாயிகள் குறுக்கப்பட்ட பாதையையும் நேரங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சீக்கிரமாக தொடங்க முடிவு செய்தனர், அவர்கள் போலீஸ் தடுப்புகளை உடைக்க முடிவு செய்தனர்.

கம்பூர் கிராமத்தின் குழந்தைகள் அணிவகுத்து வந்த விவசாயிகளை “கிசான் ஏக்தா” முழக்கங்களுடன் வாழ்த்தினர்.

திக்ரியிலும், காலை 9.40 மணிக்கு அணிவகுப்பு இதேபோன்ற கொண்டாட்டங்களுடன் தொடங்கியது. டிராக்டர்கள் டெல்லியில் உள்ள கிராமப்புற பகுதியான முண்ட்காவை அடைந்தபோது, வயதான பெண்களும் குழந்தைகளும் உட்பட பல பகுதி மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து விவசாயிகளை நோக்கி கை காட்டினார்கள். அல்லது தண்ணீர், பிஸ்கட், பிற சிற்றுண்டிகளை விநியோகித்தார்கள். சில குழந்தைகள் “ஜெய் ஜவான்! ஜெய் கிசான்! ”, “கிசான் ஏக்தா, ஜிந்தாபாத்!” என்று முழக்கமிட்டனர்.

Image Credit : scroll.in
டிராக்டர் அணிவகுப்பு – Image Credit : scroll.in

டெல்லியில் ஓட்டுநராக பணிபுரியும் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் இருந்து குடியேறிய 34 வயதான ராம் குமார், “இது முதல்முறையாக நடக்கிறது, இதுபோன்ற எதையும் நான் இதுவரை பார்த்ததில்லை” என்றார். போராட்டம் நீண்ட காலமாக தொடர்கிறது என்று கூறிய அவர் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் கூறினார். “அரசாங்கம் அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை, அவர்கள் குளிரில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் குளிரில் உட்கார்ந்திருப்பீர்களா? ” அவர் கேட்டார்.

விவசாயிகள் அணிவகுப்பை நோக்கி கை அசைக்கும் முண்ட்கா குடியிருப்பாளர்கள். – விஜய்தா லால்வானி

முண்ட்காவில் ஐந்து ஏக்கரில் கோதுமையும் ஜோவரும் பயிரிடும் 50 வயதான ராஜேந்திர ராணா, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் குரலை டெல்லிக்கு எடுத்துச் செல்வது முக்கியம் என்றார். “குழந்தை அழவில்லை என்றால், அதற்கு ஏதாவது தேவை என்று அம்மாவுக்கு எப்படித் தெரியும்?” அவர் சொன்னார்.

டிராக்டர்கள் முன்னேறிச் செல்லும்போது, மதியம் 12.10 மணியளவில், நஜாப்கர் அருகில் திரும்பும் போது போலீஸ் தடுப்புகள் அவர்களை எதிர் கொண்டன. சில விவசாயிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் செல்ல முயற்சிப்பதாக ஒரு போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். விரைவில், குழப்பம் ஏற்பட்டது: டிராக்டர்களின் டயர்களில் போலீஸ் காற்றை இறக்கி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மகாராஜா சூரஜ்மல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் ஒலி கையெறி குண்டுகளையும் போலீஸ் வீசியது.

Image Credit : bbc.com
கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீஸ் – Image Credit : bbc.com

அந்தப் பகுதியில் புகை மூழ்கியதால், சில விவசாயிகள் முகத்தை தண்ணீரில் கழுவி, கண்களைத் துடைத்து வாயுவின் விளைவுகளைத் தணித்தனர். பத்து முதல் 20 கண்ணீர்ப்புகைக் குண்டுகளை காவல்துறையினர் வீசியதாக பஞ்சாபைச் சேர்ந்த தல்ஜீத் சிங் என்ற விவசாயி கூறினார்.

புகை தெரிகிறதா? – விஜய்தா லால்வானி

இதற்கிடையில், மதிய அளவில் உத்தரபிரதேசத்துடனான டெல்லியின் காசிப்பூர் எல்லையிலிருந்து போராட்டக்காரர்கள் மத்திய டெல்லியினுள் புகுந்து, நேராக ‘ஐ.டி.ஓ’ பகுதிக்குச் சென்று, வருமான வரி அலுவலகத்தைச் சுற்றிய பகுதியை அடைந்தனர். இந்த இடம் ராஜ்பாத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

காசிப்பூர் போராட்டக் களம் ஆரம்பத்தில் இருந்தே சிங்கு எல்லையிலும் திக்ரி எல்லையிலும் நடந்த போராட்டங்களிலிருந்து சற்று வித்தியாசமானது. சிங்கு, திக்ரி போராட்டங்களை பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயசங்கங்கள் வழிநடத்துகின்றன, காசிப்பூர் போராட்டக் களத்தை முதன்மையாக “உத்தரகண்ட், உத்தரபிரதேசம், டெல்லி கிராமப்புறம் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள்” நிர்வகித்தனர்.

போராடும் விவசாயிகள் நண்பகலுக்கு முன்னர் இரண்டு போலிஸ் தடுப்புகளை உடைத்ததாக ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது. அதன் பிறகு “ஆயிரக்கணக்கான டிராக்டர்களும் டிரெய்லர்களும்” காசிப்பூர் சோதனைச் சாவடிக்கு அப்பாலும் அக்ஷார்தாம் கோயிலுக்கு அருகிலுள்ள நொய்டா இணைப்பு சாலைக்கு அப்பாலும் நகர்ந்தன.

காவல்துறையினருடன் ஒப்புக் கொள்ளப்பட்ட போராட்ட திட்டத்தின்படி, போராட்டக்காரர்கள் முதல் சோதனைச் சாவடியிலிருந்து திரும்பிச் சென்று விட வேண்டும். ஆனால், முந்தைய நாளில் விவசாயிகளுடன் ஏற்றுக் கொண்ட வழிகளில் போலீஸ் தடுப்புகளை வைப்பது பற்றியும் போராடும் விவசாயிகள் மீது தடியடி நடத்துவது பற்றியும் வந்த தகவல்களுக்குப் பிறகு, இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. போராட்டக்காரர்கள் ஐ.டி.ஓவை நோக்கிச் சென்றனர்.

காசிப்பூரிலிருந்து வரும் போராடும் விவசாயிகள் ஐ.டி.ஓவில் நிறுத்தப்பட்டனர். டெல்லி காவல்துறை கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு நடத்துகிறது. @Basantrajsonu அறிக்கை. – நியூஸ்லாண்டரி

விவசாயிகளை ஒரு பெரிய முச்சந்தியில் தடுத்து நிறுத்த போலீசார் முயற்சிப்பதை ஐ.டி.ஓ பகுதியில் இருந்து வெளியான வீடியோக்களும் அறிக்கைகளும் காட்டின. உதாரணமாக, ஒரு வீடியோ, டெல்லி போக்குவரத்து கழக பேருந்தை ஒரு தடுப்பாக காவல்துறையினர் வைத்திருப்பதைக் காட்டியது, விவசாயியின் டிராக்டர்கள் அதை ஒதுக்கி நகர்த்தி விட்டன.

விவசாயிகள் டிராக்டர் பேரணி காசிப்பூர் எல்லையிலிருந்து ஐ.டி.ஓ, சாராய் காலே கான் அருகே சென்றடைகிறது. (ANI புகைப்படங்கள்) – இந்துஸ்தான் டைம்ஸ்

ஐ.டி.ஓ சந்திப்பில், கண்ணீர்ப்புகை குண்டுகளும் லத்திகளும் பயன்படுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் டெல்லியினுள் முன்னேறிச் செல்வதைத் தடுக்க போலீசார் தீவிரமாக முயன்றனர், அவர்களைத் திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

போராட்டக்காரர்களில் ஒருவரான உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான விவசாயி ஐ.டி.ஓ.வில் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த இடத்திலுள்ள விவசாயிகள் கூறினர். ஆனால், அவரது டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி இறந்துவிட்டதாக போலீசார் கூறினர்.

நேரில் கண்ட ஒரு சாட்சியத்தின்படி உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான விவசாய போராட்டக்காரரான நவ்னீத் சிங், இன்று பிற்பகல் ஐ.டி.ஓவில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆந்திர கல்வி சங்கத்திற்கு வெளியே தீன் தயாள் உபாத்யயா மார்க்கில் துப்பாக்கிச் சூடு நடந்தது, என்று அவர் கூறினார்.
– கேரவன்

ஐ.டி.ஓவில் போலீசாருடன் மோதிய அரை மணி நேரத்திற்குப் பிறகு, விவசாயிகளுக்கு ஒரு பாதை கிடைத்து செங்கோட்டையை நோக்கி டிராக்டர்களில் செல்லத் தொடங்கினர் என்று நியூஸ்லாண்ட்ரி தெரிவித்துள்ளது.

30 நிமிடங்களுக்கும் மேலாக போலீசாருடன் மோதிய பின்னர், காசிப்பூரிலிருந்து போராட்டக்காரர்கள் இப்போது செங்கோட்டையை நோக்கி செல்கின்றனர். @Basantrajsonu – நியூஸ்லாண்டரி

ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்படும் சுதந்திர இந்தியாவின் அடையாளமான செங்கோட்டைக்கு முன்னால் உள்ள பெரிய மைதானம் போராட்டக்காரர்களால் விரைவில் நிரம்பியது. ஒரு குழு விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்தனர் ஒரு சிலர் ஒரு கொடிக் கம்பத்தின் மீது ஏறி, குருத்வாராக்களில் பறக்கும் சீக்கியக் கொடியான நிஷன் சாஹிப்பை ஏற்றினர்.

செங்கோட்டை – சந்தீப் சிங்

சில சமூக ஊடக கணக்குகளும் தொலைக்காட்சி சேனல்களும் தெரிவித்தபடி, எதிர்ப்பாளர்கள் இந்தியக் கொடியை அகற்றவோ அல்லது அதை அவமதிக்கவோ இல்லை, ஆனால், குறைந்தது இரண்டு பேர் தங்களது கொடியை ஏற்றினர்.

கொடியை ஏற்றியபின் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் செங்கோட்டைக்குள் இருந்தனர். அடுத்து என்ன செய்வது என்பது பற்றிய தெளிவான யோசனை அவர்களிடம் இல்லை போலீசார் பின்னர் உள்ளே சென்று, அந்த பகுதியை மீண்டும் கைப்பற்ற முயன்றனர். இதன் விளைவாக போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன, விவசாய சங்கத் தலைவர்கள் இளைஞர்களிடம் கோட்டையை காலி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

செங்கோட்டை வளாகத்திலிருந்து மிகவும் தொந்தரவு செய்யும் காட்சிகளில் ஒன்று – முகமது கசாலி

செங்கோட்டை உள்ளே. இன்று செங்கோட்டையில் நடந்ததை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் ஒரு சிலரின் செயல்பாடு காரணமாக விவசாயிகளின் போராட்டத்துக்கான ஆதரவை நாம் திரும்பப் பெறப் போவதில்லை. லட்சக்கணக்கான மனங்கள் இணைந்திருக்கும் போது, நமது கருத்துக்களும் இன்னும் வலுவாக இணைந்துள்ளன – radical

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, “எங்கள் வழிமுறையை மீறிய இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, மேலும், “சம்யுக்த கிசான் மோர்ச்சா இன்று திட்டமிடப்பட்ட பல விவசாயிகள் அணிவகுப்புகள் தொடர்பான நிகழ்வுகள் பற்றிய ஒரு முழுமையான அறிக்கையை விரைவில் வெளியிடும்.” என்று அது கூறியது.

Image Credit : scroll.in
போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் விவசாயிகள் – Image Credit : scroll.in

கடந்த சில மாதங்களாக சம்யுக்த கிசான் மோர்ச்சாவிலிருந்து வேறுபட்ட பாதையை பின்பற்றிய நடிகர் தீப் சித்துவை சில தலைவர்கள் குறை கூறத் தொடங்கியிருந்தாலும், செங்கோட்டை போராட்டத்தை வழிநடத்திச் சென்றவர்கள் தொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா யாரையும் பெயர் சொல்லி குறிப்பிடவில்லை.

“தீப் சித்துவும் அவரது குழுவினரும் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றினர். அவர்கள் முதல் நாளிலிருந்து இயக்கத்தில் சிக்கலை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். நாங்கள் அறிவித்த அணிவகுப்பு வழியைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்” என்று பாரதிய கிசான் யூனியன் (தகவுண்டா) தலைவர் பூட்டா சிங் புர்ஜ்கில் @ThePrintIndia விடம் கூறுகிறார்
– சிட்லீன் கே சேத்தி

செங்கோட்டையில் என்ன நடந்தது என்பது குறித்த சூடான விவாதங்களுக்கு வெகு தொலைவில், பல விவசாயிகள் தொடர்ந்து அமைதியாக அணிவகுத்துச் சென்றனர். எல்லை போராட்டக் களங்களுக்கு அருகே இணைய இணைப்பு தடை செய்யப்பட்டிருந்ததால் பெரும்பாலானவர்களுக்கு மோதல்கள் பற்றி தெரியாது.

மதியம் 1 மணியளவில், லூதியானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நரிந்தர் கவுர் என்ற 65 வயது பெண், சிங்குவிலிருந்து தனது குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தார், நகரத்தை அடைய இன்னும் சில கிலோ மீட்டர் தூரம் இருந்தது.

“ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா?” அவர் ஒரு நிருபரிடம் கேட்டார். நரிந்தர் கவுர் தனது குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுடன் சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். விவசாயச் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று அவர் கூறினார்.

(scroll.in தளத்தில் வெளியான செய்தி அறிக்கையின் மொழியாக்கம்)

****

விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து மோடி அரசின் செல்ல ஊடகங்கள் (கோதிமீடியா) இந்திய மக்களுக்கு தவறான தகவல்களை தருகின்றன. என்று tractor2twitr ட்வீட் செய்துள்ளது.

#GodiMediaStopMisleading என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி கோதிமீடியாவுக்கு பதில் கொடுப்போம் என்றும் அது கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்