Aran Sei

`இது கல்வியைப் பார்ப்பன மயமாக்கும் முயற்சி’ – ஜேஎன்யு ஆசிரியர் சங்கம்

Image Credits: News Click

வஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இட ஒதுக்கீட்டுச் சட்டங்களை மீறுவதை டெல்லி உயர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. சமூக அறிவியல் மற்றும் சர்வதேசக் கல்வி ஆகிய துறைகளில் இணைப் பேராசிரியரையும் பேராசிரியரையும் நியமிக்கும்போது இட ஒதுக்கீட்டுச் சட்டங்கள் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் உட்பட நான்கு பேராசிரியர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினர். 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இரண்டு விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதன் அடிப்படையிலான ஆள்சேர்ப்பு செயல்முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காலியிடங்களுக்கு விளம்பரம் செய்யும் போது, ​​பல்கலைக்கழகம் பணி-அடிப்படையிலான இட ஒதுக்கீடு விதிமுறைகளை மீறியுள்ளதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

நவம்பர் 17-ம் தேதி இந்த விவகாரத்தில் தனது தீர்ப்பை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங், இட ஒதுக்கீட்டுப் பட்டியல் முறையாகப் பராமரிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகத்துக்கு உள்ளது. அதனை அது செய்யத் தவறிவிட்டது என்று கூறியுள்ளார்.

ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் (ஜேஎன்யுடிஏ) தீர்ப்பின் நகலை வியாழன் அன்று பெற்றுள்ளது. அதில், “இட ஒதுக்கீடு வழங்கப்படாது அல்லது மாற்று இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதால் மட்டுமே மனுதாரர்களின் குற்றச்சாட்டைப் பொய்யென நிரூபிக்க முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி வயரிடம் பேசிய ஜேஎன்யுடிஏவின் செயலாளர் மௌசுமி பாசு உயர் நீதிமன்றத்தை நாடிய பேராசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இது நிறுவனத்தின் நேர்மையைக் குறித்த ஒரு கேள்வி. அரசியலமைப்பு விதிகள் குறித்து குறைந்தபட்ச அக்கறையோ பொறுப்புணர்வோ இல்லாமல், அதிகாரிகள் திடீரென்று சுமார் 30 பதவிகளை ஒரு பிரிவில் இருந்த மற்றொன்றுக்கு மாற்றினர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே அதைத் தடுக்க ஒரே வழியாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

“ஒதுக்கப்பட்ட வகை பதவிகளுக்கு நேர்காணல்கள் நடத்தப்படும் போதெல்லாம், ‘பதவிக்கு இவர்கள் பொருத்தமானவர்கள் இல்லை’ என்று கூறி அதிகாரிகள் அவர்களை நிராகரிப்பதை ஒரு நிர்வாகக் குழுவின் உறுப்பினராக நான் பல முறை பார்த்திருக்கிறேன். இவை அனைத்தும் இட ஒதிக்கீட்டிற்கு எதிரான அணுகுமுறையையும், கல்வி இடத்தை பார்ப்பன மயமாக்கும் முயற்சியையும் அப்பட்டமாகக் காட்டுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்