Aran Sei

டெல்லிக் கலவரம் – கைது செய்யப்பட்ட ரஹ்மானுக்கு உயர்நீதி மன்றம் ஜாமீன்

Image Credits: Arab News

ந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், வடகிழக்கு டெல்லியில் மதக் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையின் போது குற்றத்தை உறுதிப்படுத்த சிசிடிவி காட்சிகள், வீடியோ காட்சிகள் அல்லது புகைப்படம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாக  ‘தி இந்துவில்’ செய்தி வெளியாகி உள்ளது.

மார்ச் மாதம் 4-ம் தேதி, தயாள்பூர் காவல் நிலையத்தில், கலவரம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் கீழ் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.

முகமது ரஹ்மான், வேறு எந்த வழக்கிலும் தேவைப்படவில்லை என்றால், உறுதியளிப்புத் தொகையாக ரூ.25,000-ஐ பெற்றுக்கொண்டு அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் போது ​​முதன்மைச் சாட்சிகள் ரஹ்மானை குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுடன் கண்டதாகத் தெரிவித்தார்கள் என்று கூறிய சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜாமீன் மனுவை எதிர்த்துள்ளார் என்று ‘தி இந்து’ செய்தி குறிப்பிடுகிறது. ரஹ்மான் மேலும் நான்கு கலவர வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

“தற்போதைய வழக்கில் அரசுத் தரப்பின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள், வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படம் எதுவும் இல்லை என்பது மறுக்கப்படவில்லை,” என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சிகளாக அறிக்கைகளைப் பதிவுசெய்து ரஹ்மானை அடையாளம் காட்டிய இரண்டு காவலர்கள் “பிப்ரவரி 25 அன்று நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தினசரி டயரி பதிவு செய்யாதது ஏன்” என்று நீதிபதி சுரேஷ்குமார் கேள்வி எழுப்பினார். மேலும், “தற்போதைய முதல் தகவல் அறிக்கை மார்ச் 4 அன்று பதிவு செய்யப்பட்டதுதான்,” என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மேலும், சம்பவம் நடந்த நாளில் இரண்டு காவலர்களும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுக்கவில்லை (அவசர உதவி எண்ணை அழைக்கவில்லை)என்றும் நீதிமன்றம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது என ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல்” செய்தி வெளியாகியுள்ளது.

ரஹ்மானை அறிந்ததாகக் கூறிய மற்ற சாட்சிகளும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் காவல்துறைக்கு எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. “மேற்சொன்னவற்றைப் பார்க்கும்போது, ​​ஏப்ரல் 20 முதல் நீதிமன்றக் காவலில் இருப்பதால் மனுதாரர் ஜாமீனுக்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வழக்கின் நீதிமன்ற விசாரணை கணிசமான காலம் எடுக்கும்,” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்