Aran Sei

விசாரணையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவில்லையெனில் ”கட்டாய ஜாமீன்” – உச்ச நீதிமன்றம்

Credits : the hindu

குற்றம்சாட்டப்பட்டவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் விசாரணையை முடிக்கவில்லையென்றால் அவருக்கு இயல்புநிலை ஜாமீன் அல்லது கட்டாய ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் போதை மருந்து மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர் , 180 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விசாரணை நீதிமன்றம் அவருக்கு இயல்புநிலை ஜாமீன் வழங்கியுள்ளது.

அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவர் மீது கூடுதல் புகார் அளிக்கப்பட்டதால், அவரது ஜாமீன் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் ”குற்றம்சாட்டப்பட்டவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் விசாரணையை முடிக்கவில்லையென்றால் அவருக்கு இயல்புநிலை ஜாமீன் அல்லது கட்டாய ஜாமீன் வழங்க வேண்டும்”  என்ற நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் யு.யு.லலித், சந்தானகவுடர், வினித் சரண்) “ஒரு குற்றவாளி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் தருணத்திலிருந்து இயல்புநிலை ஜாமீனுக்கான தனது உரிமையைப் பயன்படுத்தலாம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

”இங்கிலாந்தில், தேசத் துரோகம் போன்ற கடுமையான குற்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்டவர் மீது விசாரணையைத் தொடங்கும் வரை காலவரையின்றி சிறையில் அடைக்க முடியாது” என்பதை அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

விசாரணை நிறுவனம் விசாரணையைச் சரியான நேரத்தில் முடிக்கத் தவறினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 167 (2) இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர் இயல்பாகவே ஜாமீனை பெறுவதற்கு “மறுக்கமுடியாத உரிமை” இருப்பதாக நீதிபதி சந்தானகவுடர் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு (சிஆர்பிசி) 167 இன் கீழ்,

  • குற்றம்சாட்டப்பட்டவர் மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைச் செய்திருந்தால் அதிகபட்சம் 90 நாட்கள் காவலில் வைக்கப்படலாம் எனவும்,
  • ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு விசாரணையில் வேறு ஏதேனும் குற்றத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் 60 நாட்கள் வரை காவலில் வைக்கப்படலாம் எனவும்,
  • போதை மருந்து மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டம் போன்ற சில சிறப்புச் சட்டங்களில், 180 நாட்கள் வரை காவலில் வைக்கப்படலாம் என சிஆர்பிசியின் கீழ் கூறப்பட்டுள்ளதை நீதிபதி சந்தானகவுடர் மேற்கோள் காட்டியுள்ளார் .

”சிஆர்பிசி கொடுத்துள்ள இந்தக் காலகெடு விசாரணையை முடிக்க போதுமான அவகாசத்தைக் கொடுப்பதாகக் கூறியுள்ள அவர் , குற்றவாளியாக இருந்தாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள அடிப்படை உரிமையான ”தனி மனித சுதந்திரத்தை” பாதுகாக்க வேண்டும் என நீதிபதின் சந்தானகவுடா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

”விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காரணமாக வைத்து ஒரு குற்றம்சாட்டப்பட்டவரைக் கால வரையின்றி சிறையில் அடைத்து வைக்கக் கூடாது என்பதற்காகவே இது போன்ற வரையறைகளை நீதித்துறை வைத்துள்ளதாக” நீதிபதி எம் .சந்தானகவுடர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்

  • ஒரு வழக்கை விசாரிக்கும் விசாரணை நிறுவனம், அந்த வழக்கை போதுமான ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும், அவ்வாறு செய்ய முடியாத தருணத்தில் அந்தக் குற்றவாளியைச் சிறை காவலில் வைத்திருக்க முடியாது.
  • ஒரு விசாரணையை விரைந்து முடிக்க விசாரணை அதிகாரிகளுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தும் எனவும் அதனால் தடுப்பு காவல் தவறாகப் பயன்படுத்தப்படாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

”இதன் மூல்ச்ம் குற்றத்தைப் பற்றிய முழு தகவல்களையும் நீதிமன்றம் அறிய முடியும் என தெரிவித்துள்ளார். அதாவது ஒரு குற்றம் பதிவு செய்யப்பட்ட  தேதியிலிருந்து எந்தவொரு தாமதமும் இன்றி குற்றத்தைப் பற்றி நீதிமன்றம் அறிந்து கொள்வதை உறுதி செய்கிறது எனவும், இதனால் பெரும்பாண்மையான சமூகம் ஏற்கனவே நம்பிக்கையை இழந்துள்ள குற்றவியல் நீதி அமைப்புக்கு இது மேலும் அவப்பெயரை ஏற்படுத்தாது” என்று நீதிபதி சந்தானகவுடர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு, குறிப்பாகச் சமூகத்தின் ஏழை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு, இயல்புநிலை ஜாமீனுக்கு விண்ணப்பிப்பதற்கான சட்டரீதியான உரிமைகளை நீதிபதிகள் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவருக்குக் கிடைக்க இருக்கும் இயல்பு நிலை ஜாமீனை அரசுக்கு ஆதரவாக ஒத்தி வைத்தால் அது சட்டவிரோதம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதி வினீத் சரண், பிரிவு 167 (2) மூன்று தெளிவான நோக்கங்களைக் கொண்டுள்ளது – நியாயமான விசாரணை, விரைவான விசாரணை மற்றும் சமூகத்தின் ஏழை பிரிவினரைப் பாதுகாக்க ஒரு முற்போக்கான நடைமுறையை அமைப்பது என தெரிவித்துள்ளார்.

மேலும் ”குற்றம் சாட்டப்பட்டவர் இயல்புநிலை ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தாலும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலும், இயல்புநிலை ஜாமீனில் விடுவிப்பதற்கான உரிமை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

”தொடர்ச்சியாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வது  அல்லது நீதிமன்றத்தின் முன் அரசு தரப்பு நேரத்தை நீட்டிக்க கோருவது அல்லது ஜாமீன் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், ​​இடைப்பட்ட காலத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டாலும்” கூட குற்றம்சாட்டப்பட்டவருக்கு இயல்புநிலை ஜாமீன் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

( தி இந்து வில் வெளியான செய்தியின் மொழியாக்கம் )

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்