Aran Sei

பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் உயிருடன் எரித்துக் கொலை: உ.பியில் மீண்டும் அநீதி

Credits Indian Express

உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஆதிக்கச் சாதியினரால் அடித்து உதைக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் அமெத்தி தொகுதியின் பதோயா கிராமத் தலைவர் சோட்கா தேவியின் கணவர் அர்ஜுன் கோரி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் நிலவிய போட்டியின் காரணமாக அவர் எரித்துக்கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினர் கூறுகிறார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று காய்கறி வாங்கி வருவதாகக் கடைக்குச் சென்ற அர்ஜுன் வீடு திரும்பவில்லை என்றும் பிறகு கிருஷ்ணகுமார் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக அவரது மகன் சுரேந்தர் கூறியுள்ளார் என்று தி வயர் குறிப்பிட்டுள்ளது.

அர்ஜுன் அந்தத் தொகுதியில் வலுவாகக் காலூன்றியிருந்தது பிடிக்காத அவருடைய எதிரிகள், தேர்தல் போட்டி காரணமாக அவரைக் கொன்றுள்ளதாகவும் சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

அர்ஜுனுடைய வாயில் துணியைத் திணித்து, அவரை அடித்து உதைத்த பிறகு தீ வைத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்களில் நான்கு பெயர்களைக் காயம்பட்ட நிலையில் அர்ஜுன் கூறியதாகவும் சுரேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன் இரவு சிகிச்சைக்காக அமெத்தி மருத்துவமனையில் அர்ஜுன் அனுமதிக்கப்பட்டிருந்தார். மறுநாள் காலை லக்னோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அர்ஜுன் உயிரிழந்தார் என்று காவல் கண்காணிப்பாளர் தினேஷ் சிங் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

குடும்பத்தினர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து நபர்களில் ஒருவர் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர் என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்