Aran Sei

நிலவுடைமை வழக்கின் காரணமாக உயிரிழந்த தலித் தம்பதியினர் – கேரளாவில் துயரம்

Image Credit : Indian Express

“நீங்கள் எல்லோரும் சேர்ந்து என் அப்பாவைக் கொன்று விட்டீர்கள்…. நீங்கள் எல்லோரும் சேர்ந்து என் பெற்றோரைக் கொன்று விட்டீர்கள்…. இப்போ அவங்களை புதைக்கக் கூட கூடாது என்று சொல்கிறீர்களா?” என வீடியோவில் பேசும் 23 வயதான ராகுல் ராஜின் கோபமும் துயரமும் கேரளாவையே உலுக்கியிருக்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருவனந்தபுரம் அத்தியனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ராகுல் ராஜின் தந்தை பொங்கில் ராஜன், மோசமான தீக்காயங்களுடன் போராடி திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது அம்மா அம்பிலி, மனநிலை சரியில்லாதவரும் சிறிது நேரம் கழித்து இறந்து விட்டார்.

இருவரும் டிசம்பர் 22-ம் தேதி, தங்களை தமது 3 சென்ட் நிலத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்கும் போலீசின் முயற்சியை எதிர்க்கும் போது தவறுதலாக தீ வைத்துக் கொண்டு விட்டனர். அந்த நிலத்தில் அவர்கள் தமது சிறு வீட்டைக் கட்டியிருந்தனர்.

வீடியோவில், தனது பெற்றோரை நிலத்தில் புதைக்க முடியாமல் தடுப்பதாக குற்றம் சாட்டும் ராகுல் ராஜ் கோபமாக மண்வெட்டியை நிலத்தில் குத்தி நிறுத்துகிறார். ஒரு போலீஸ் அதிகாரி அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். சுற்றி நிற்கும் ஒரு சிலர் அமைதியாக பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.

ராகுல், ரஞ்சித் என்ற இரண்டு மகன்களுடன் வாழ்வதற்காக தலித் காலனியில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட குடிசை ஒன்றை பொங்கில் ராஜனும் அம்பிலியும் கட்டியிருந்தனர். வசந்தா என்ற பெண் இந்த குடிசையை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். தான் இந்த நிலத்தை 16 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாகவும், அது தனக்குச் சொந்தம் என்றும் அவர் வாதிட்டார்.

நீதிமன்ற தீர்ப்பு வசந்தாவுக்கு சாதகமாக வந்த பிறகு, ராஜன் நிலத்தை விட்டு வெளியேறும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது, அதற்கு ராஜன் மறுத்து விட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் ஒரு வழக்கறிஞர்கள் குழுவை அமைத்தது, அந்தக் குழுவின் பரிந்துரையின்படி ராஜன் குடும்பத்தை வெளியேற்றும்படி மீண்டும் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி போலீஸ் டிசம்பர் 22-ம் தேதி அந்தக் குடும்பத்தின் வீட்டுக்கு வந்திருக்கிறது. அதற்குள் ராஜன், அம்பிலி தம்பதியினர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை வாங்கியிருந்தனர். ஆனால், அந்த உத்தரவின் நகல் அவர்களது கைக்கு வரவில்லை.

இறப்பதற்கு முன்பு அளித்த வாக்குமூலத்தில் ராஜன், “எனது குடும்பத்துக்கு வாழ்வதற்கு ஒரு கூரை கூட இல்லாமல் போய் விடுமே என்ற எண்ணம் என்னை கடுமையாக பாதித்தது. இதனால் மிகவும் கோபமாக இருந்த நான், என் மனைவியையும் அழைத்துக் கொண்டு, அவரை நெருக்கமாக அணைத்துக் கொண்டு எங்கள் இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டேன். அதன் மூலம் போலீஸ் எங்களை வெளியேற்றும் முயற்சியை கைவிட்டு விடும் என்று நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.

“போலீசை தடுப்பதற்குத்தான் நான் லைட்டரை பற்ற வைத்தேன். எனது உயிரை எடுத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவே இல்லை. ஆனால், எரிந்து கொண்டிருந்த லைட்டரை ஒரு போலீஸ் அதிகாரி தட்டி விட்டார். அது எங்கள் மீது விழுந்து எங்கள் மீது தீ பற்றிக் கொண்டது” என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த தம்பதியினரின் மூத்த மகன் ராகுல் ராஜ், “நாங்கள் சாப்பிட தயாராகிக் கொண்டிருந்தோம். சாப்பிட்டு முடிப்பது வரை, அரை மணி நேரம் தரும்படி அப்பா போலீசிடம் மன்றாடினார். நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விட்டதாகவும், அதன் நகலை கொண்டு வர வேண்டியதுதான் வேலை என்றும் அவர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் அதற்கு காது கொடுக்கவில்லை”

“பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூச்சலிட்டார். அதன் பிறகுதான் அப்பா அம்மாவை வெளியே அழைத்துக் கொண்டு போனார்” என்கிறார் ராகுல் ராஜ்.

ராஜன் திங்கள்கிழமை, தீக்காயங்களால் இறந்து விட்ட பிறகு, அவர் எந்த மூன்று சென்ட் நிலத்துக்காக போராடி உயிரிழந்தாரோ அங்குதான் அவரது உடலை புதைக்க வேண்டும் என்று அவரது மகன்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், நிலத்தின் மீதான உரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் யாரும் குழி தோண்ட முன்வரவில்லை.

எனவே, ராகுல் தானே புதைகுழி தோண்ட ஆரம்பித்தார், அதை போலீஸ் தடுத்திருக்கிறது. இருப்பினும், இறுதியில் ராஜனது உடல் அவரது விருப்பப்படியே அந்த நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த தலித் குடும்பத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வசந்தா இதை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. “16 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நிலத்தை வாங்கினேன். காலனி மக்கள் எனக்கு எதிராக உள்ளார்கள். நான் தனியாக போராடி வருகிறேன். நான் நிலத்தை விட மாட்டேன். அது எனக்குச் சொந்தமானது என்று நிரூபிப்பேன்” என்று அவர் கூறியுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்