Aran Sei

72 புகார்கள் மீது குற்ற நடவடிக்கை: சிவிசி ஆண்டறிக்கை

Image Credits: India Legal

2019-ம் ஆண்டில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) 35,649 புகார்களை பெற்றது, அவற்றில் 34,813 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் உள்ள 72 புகார்கள் மீது குற்றவியல் வழக்கு நடவடிக்கையை தொடங்க, ஊழல் தடுப்பு அமைப்பான சிவிசி பரிந்துரை செய்தது என்பது அதன் ஆண்டு அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.

சிவிசியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் சிபிஐ கடந்த ஆண்டில்  608 வழக்குகளையும் 102 ஆரம்ப கட்ட விசாரணைகளையும் பதிவு செய்தது. இது 2018-ம் ஆண்டில் பதிவான 765 வழக்குகள்,  134 ஆரம்ப கட்ட விசாரணைகள் என்பதுடன் ஒப்பிடும் போது குறைவு.

சென்ற ஆண்டு சிபிஐ 1,012 வழக்குகளின் விசாரணையை இறுதி செய்தது. 1,239 வழக்குகளில் விசாரணையும் புலனாய்வும் நிலுவையில் இருந்தது. 2018-ம் ஆண்டின் இறுதியில் 1,541 வழக்குகளில் விசாரணை நிலுவையில் இருந்தது.

2019-ம் ஆண்டு இறுதியில் 744 வழக்குகளில் ஒரு ஆண்டுக்கு மேலாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இது 2018-ன் 898-ன் ஒப்பிடும் போது குறைவாகும்.

தண்டனை விகிதம்

சிபிஐ நடத்திய வழக்குகளில் தண்டனை விகிதம் சற்று மேம்பட்டது,  2018-ல் 467 வழக்குகளில் தண்டை வழங்கப்பட்டது, 186 வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். தண்டனை வழங்கும் விகிதம் 2018-ல் 68% ஆக இருந்து 2019-ல் 69.19% ஆக உயர்ந்துள்ளது.

ஏராளமான பதிவுகளை சரிபார்ப்பதற்கும், சாட்சிகளைக் கண்டுபிடிப்பதற்கும் ஏற்படும் கால விரயம் மட்டும் அல்லாமல், வேலைச் சுமை, போதிய ஆள்பலம் இல்லாதது, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில்களைப் பெறுவதில் தாமதம், ஆவணங்களின் சரிபார்ப்பு, தடயவியல் அறிக்கைகளைப் பெறுவதில் தாமதம், வழக்கு அனுமதி பெறுதல் மற்றும் துறைசார் ஆவணங்களை பெறுதல் ஆகியவற்றாலும் சிபிஐ விசாரணையை முடிப்பதில் கால தாமதம் ஏற்படுகின்றது என்று சிவிசி அறிக்கை தெரிவிக்கின்றது.

சி.வி.சி 3,157 வழக்குகளில் ஆலோசனை வழங்கியது. இதில் 493 வழக்குகளில் பெரிய அபராத நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஆலோசனையும், 193 வழக்குகளில் சிறிய அபராத நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஆலோசனையும், முதல் கட்ட ஆலோசனையாக வழங்கப்பட்டது. 110 வழக்குகளில் பெரிய அபராதம் மற்றும் 96 வழக்குகளில் சிறிய அபராதம் விதிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

சி.வி.சியின் ஆலோசனையின் படி, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் 76 அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கினர், 778 அரசு ஊழியர்களுக்கு பெரும் அபராதம் மற்றும் 503 அரசு ஊழியர்களுக்கு சிறிய அபராதம் விதித்தனர்.

மூத்த அதிகாரிகள்

வழக்கு தொடரப்பட்ட மூத்த அதிகாரிகளில், பொருளாதார விவகாரத் துறையின் ஒரு கூடுதல் செயலாளர் மற்றும் ஒரு இணைச் செயலாளர், சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையின் மற்றொரு இணைச் செயலாளர், ஒரு முன்னாள் இஸ்ரோ தலைவர் மற்றும் ஒரு திருவாங்கூர் உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோரும் அடங்குவர்.

வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டவர்களில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) ஒரு தலைமை ஆணையர், ஒரு ஆணையர், மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் ஒரு ஆணையர், ஊழிர்கள் மற்றும் பயிற்சித் துறையின் ஒரு ஆணையரும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

மகாராஷ்டிரா வங்கியின் ஒரு பொது மேலாளர், தேசிய தேர்வுகள் வாரியத்தின் ஒரு கூடுதல் இயக்குநரும் முன்னாள் அலுவலக தலைமை நிர்வாக அதிகாரியும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஒரு ரயில்வே அமைச்சக அதிகாரி, தொலைத் தொடர்புத் துறையின் இரண்டு பொது மேலாளர்கள், சிபிஐசியின் ஒரு தலைமை ஆணையர், ஒரு சிபிடிடி ஆணையர் மற்றும் ஒரு பிஎஃப் ஆணையர் ஆகியோரின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டது.

ஒரு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர், இரண்டு தலைமை பொறியாளர்கள் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் மற்றொரு அதிகாரி, ஒரு சிபிடிடி ஆணையர், பிரசார் பாரதியின் ஒரு துணை இயக்குநர் ஜெனரல், என்ஹெச்ஏஐயின் மூன்று அதிகாரிகள் மற்றும் கப்பல் அமைச்சகத்திலிருந்து ஒருவரின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக நடவடிக்கை

நிர்வாக நடவடிக்கை உட்பட தண்டனைகள் விதிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் துறைசார் எணிக்கை – ரயில்வே அமைச்சகம் (287), சிண்டிகேட் வங்கி (198), பஞ்சாப் நேஷனல் வங்கி (154), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (104), கனரா வங்கி (88), பாங்க் ஆப் பரோடா (67), தேசிய வெப்ப மின் கழகம் (64), இந்திய விமான நிலைய ஆணையம் (62), சிபிஐசி (58) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (53).

பொது நல வெளிப்படுத்தல் மற்றும் தகவல் தருபவர்களை காப்பாற்றும் தீர்வு என்ற அமைப்பின் கீழ், ஆணையத்திற்கு 899 புகார்கள் வந்தன. இவர்களில் 148 புகார்கள் தலைமை விஜிலென்ஸ் அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணை, சரிபார்ப்பு அல்லது கருத்துகளுக்காக அனுப்பப்பட்டன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்