Aran Sei

” லஞ்சப் பணத்தை கைப்பற்றுவது மட்டுமே குற்றத்தை நிரூபிக்க போதாது ” – உச்சநீதிமன்றம்

Image Credit : livelaw.in

ரு அரசு அதிகாரியிடமிருந்து ரூபாய் நோட்டுகளை கைப்பற்றுவது மட்டுமே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது குற்றத்துக்கான நிரூபணம் ஆகாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் லஞ்சம் என்று தெரிந்தே பணத்தை வாங்கினார் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி, எம்ஆர் ஷா அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. ஊழல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று உறுதி செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து இந்த அமர்வு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு தொடர்பான விபரங்களை லைவ் லா தளம் வெளியிட்டுள்ளது.

மதுரை நகராட்சி மன்றத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என் விஜயகுமார். அவர் கோபால் என்பவரிடம் இருந்து ரூ 500 பணத்தையும் ஒரு செல்போனையும் கேட்டதாக, 2003-ம் ஆண்டில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாநகராட்சியின் 8-வது வார்டில் துப்புரவு பணிக்கான ஒப்பந்தத்தை கோபால் மேற்பார்வையாளராக வேலை செய்த நிறுவனம் எடுத்திருந்தது. அந்நிறுவனத்துடனான பணி ஒப்பந்தத்தை மார்ச் 2003-ஐத் தாண்டி நீட்டிப்பதற்கான அறிக்கையை அனுப்புவதற்கு இந்த லஞ்சத்தை விஜய்குமார் கேட்டுப் பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

கோபாலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும் விஜயகுமாரின் அலுவலகத்துக்குச் சென்ற போது அவர் ரூ 500 பணத்தையும் செல்போனையும் கேட்டதைத் தொடர்ந்து, தான் அவற்றை அவரிடம் கொடுத்ததாக கோபால் சாட்சி அளித்திருந்தார். அந்தப் பணம் பொறி வைத்து பிடிப்பதற்காக இராசயனம் தடவப்பட்டிருந்தது.

கோபால் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் விஜயகுமார் அவரை பலமுறை மோசமாக நடத்தியுள்ளதாக, கோபால் குறுக்கு விசாரணையில் கூறியிருந்ததை சுட்டிக் காட்டிய நீதிமன்றம், விஜயகுமார் மீது கோபாலுக்கு கோபம் இருந்தது என்பதை இது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.

மாலை 5.45 மணிக்கு ஊழல் ஒழிப்புத் துறையின் பொறி வைக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான இரசாயன சோதனை மாலை 7 மணிக்குத்தான் செய்யப்பட்டது என்றும் இந்த சோதனைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் உடனடியாக பதிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், சாட்சியங்களின் வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளின் காரணமாக, சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த ஊழல் வழக்கில், 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சிறப்பு விசாரணை நீதிமன்றம் விஜயகுமாரை குற்றமற்றவர் என்று விடுவித்திருந்தது. அரசு இதை எதிர்த்து செய்த மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி, விஜயகுமாரின் குற்றத்தை உறுதி செய்திருந்தது. அவருக்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 5,000 அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு மீதான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர், லஞ்சப் பணத்தையும் ஒரு செல்போனையும் கேட்டு வாங்கியது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படவில்லை என்றும் எனவே அவரது குற்றத்தை உறுதி செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து பணத்தைக் கைப்பற்றுவது மட்டுமே அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதில்லை. லஞ்சம் என்று அறிந்தே, தன் சுய விருப்பத்துடன் அவர் பணத்தை பெற்றுக் கொண்டார் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்று அது கூறியுள்ளது.

குற்றவியல் வழக்குகளில், நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்ற அனுமானம், விசாரணை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட பிறகு இரண்டு மடங்கு வலுவாகி விடுகிறது என்றும் கூறியுள்ள உச்சநீதிமன்றம், எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு “சாத்தியமான கருத்து” என்ற வகையில் உயர்நீதிமன்றம் அதனை மாற்றியிருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்