Aran Sei

எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது குற்ற வழக்குகள் – உச்ச நீதிமன்றத்தில் தகவல்

ச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறிப்பு ஒன்றில், குற்றவியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின்படி 22 மாநிலங்களைச் சேர்ந்த 2,556 எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இம்மாநிலங்களின் முன்னாள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களைச் சேர்த்தால் எண்ணிக்கை 4,442 ஆக உயர்கிறது.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் மீதுள்ள குற்றவியல் வழக்குகளை விரைவாக தீர்த்து வைக்கக்கோரி அஷ்வனி குமார் ஹன்சாரியா என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவும் (amicus curiae) மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா இந்தக் குறிப்பினை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசியல் குற்றமயமாதலுக்கு எதிரான குரல்களும் வலுத்து வருகின்றன.

நடப்பு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதுள்ள 174 வழக்குகள் சிறை தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகள் என செவ்வாய் அன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை தொடர்பான செய்திகளை முழுமையாக திரட்டி வெளியிடும் இணையதளமான Livelaw-வில் வெளியாகியுள்ள கட்டரையில், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிரான பிற வழக்குகள், ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பணச்சலவை தடுப்புச்சட்டம் 2002, ஆயுதச்சட்டம் 1959, பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தலைத் தடுத்தல் சட்டம் 1984, இந்திய தண்டனைச்சட்டத்தின் 500-வது பிரிவின் கீழ் அவதூறு பரப்புவது, இந்திய தண்டனைச்சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் மோசடி, இந்திய தண்டனைச்சட்டத்தின் 188-வது பிரிவில் கீழ்ப்படியாமை மற்றும் உத்தரவு பின்பற்றாதது ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக அளவிலான வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டம் 188-வது பிரிவின் கீழ், அரசு ஊழியர் பிறப்பித்த ஒழுங்குமுறை அல்லது உத்தரவுக்கு கீழ்படியாததற்காக தொடரப்பட்டுள்ளன எனவும் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலம் உத்தரபிரதேசம்

உத்தர பிரதேச மாநிலத்தில் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நடப்பு மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நிலுவையில் உள்ள 1217 வழக்குகளில் 446 வழக்குகள் நடப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் பாராளுமன்றத்தின் 35 நடப்பு உறுப்பினர்கள், 81 முன்னாள் உறுப்பினர்கள் மீது ஆயுள் தண்டனை வழங்கும்படியான கொடிய குற்றங்களுக்காக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தைத் தொடர்ந்து பீகாரில் 531 நடப்பு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 73 வழக்குகள் ஆயுள் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக தொடரப்பட்டவை. (நடப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது 30 வழக்குகள், முன்னாள் உறுப்பினர்கள் மீது 43 வழக்குகள்)
கேரளா (333 வழக்குகள்), ஒடிசா (331), மகாராஷ்டிரா (330), தமிழ்நாடு (324) ஆகியவை நடப்பு மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதுள்ள குற்றவியல் வழக்கு எண்ணிக்கை வரிசையில் முதல் ஐந்து மாநிலங்கள்.

இந்த வழக்குகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பல வழக்குகள் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீன் இல்லாத பிடியாணைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சமர்ப்பிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில், “ஆயுள் தண்டனை விதிக்கக்கூடியவை உட்பட பல வழக்குகளில் குற்றச்சாட்டுகள் கூட பதிவு செய்யப்படவில்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்குகள் இல்லாததாலும், உச்சநீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய குறிப்பான சிக்கல்கள் எதுவும் இல்லாததாலும் சில மாநிலங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்படவில்லை என விஜய் ஹன்சாரியா கூறியுள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட குறிப்பில், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதுள்ள வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது உட்பட சில பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு நீதிமன்றங்கள் வழக்குகளின் தீவிரம் கருதி, ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனைக்குரிய வழக்குகளை முதலாவதாகவும், அடுத்ததாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றவியல் வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்திற்கு உதவும் விஜய் ஹன்சாரியா கூறியுள்ளார்.

மேலும், நடப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ”தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அல்லாமல் ஒத்திவைப்பு வழங்கப்படக் கூடாது. குற்றவாளியை உரிய தேதியில் குறிப்பிட்ட நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்துவதும், நீதிமன்றம் அளிக்கும் ஜாமீன் இல்லாத பிடிப்பாணையை செயல்படுத்துவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பொறுப்பு” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம் என குறிப்பில் கூறப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் செல்வாக்கினால் சாட்சிகள் அழுத்தத்துக்கு உள்ளாகலாம் என்பதையும் நீதிமன்ற நண்பர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாநிலங்களோ அல்லது பாராளுமன்றமோ சட்டம் இயற்றுவது வரை, உச்சநீதி மன்றத்தின் ”சாட்சிகள் பாதுகாப்பு வரைவுத் திட்டம் 2018” எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய அந்தந்த உயர்நீதி மன்றங்கள் ”எம்.பி / எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்” என்ற தலைப்பில் தாமாக முன்வந்து (suo motu) வழக்கு பதிவு செய்து, வழக்குகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தின் போது, குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய முடியாது என உச்சநீதி மன்றம் கூறியது. மாறாக, அந்த உறுப்பினர்களை தகுதியிழப்புச் செய்வதை பரிசீலிக்கும்படி பாராளுமன்றத்திடம் அறிவுறுத்தியதோடு, நாடே அதன் முடிவுக்கு ஆர்வமாகக் காத்திருப்பதாகவும் உச்சநீதி மன்றம் கூறியிருந்தது.

(தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

https://thewire.in/law/sitting-mlas-mps-criminal-cases-data-supreme-court-criminalisation-politics

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்