Aran Sei

சித்திக் கப்பனை உடனடியாக விடுதலை செய்க – சிபிஜே வலியுறுத்தல்

”சித்திக் கப்பனை சிறையில் அடைத்ததே தவறு, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு மையம்(சிபிஜே) வலியுறுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 5-ம் தேதி ஹத்ராஸ் சம்பவத்தைப் பற்றி தகவல் சேகரிக்கச் சென்ற இவர் ”பொது அமைதிக்கு குந்தகம்” ஏற்படுத்துவதாகக் கூறி உத்தர பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் ஒரு ”சர்வதேச சதி” திட்டத்தை அரங்கேற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் மற்றும் குழு வந்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது மதுரா காவல்துறை.

அவர்கள் மீது தேசதுரோகம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டங்களில் (UAPA)  வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி

சித்திக் கப்பனின் பிணை மனுவை அவசரமாக விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (கேயுடபிள்யூஜே) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சித்திக் தனது குடும்ப உறுப்பினர்களுடனும் வழக்கறிஞருடனும் தொடர்ந்து உரையாடுவதற்கு வீடியோ அழைப்புகளை (video calls) அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் விசாரனையை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் சித்திக் கப்பன் தாக்கல் செய்யும் ஜாமீன் மனுவை எதிர்க்க கூடாது என உத்தர பிரதேச அரசுக்குப் பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆசியாவில் சிபிஜே அமைப்பின் மூத்த ஆய்வாளாரான ஆலியா இஃப்திகார் ”சித்திக் கப்பனைச் சிறையில் அடைத்ததே தவறு அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

”சித்திக் கப்பனைச் சிறையில் அடைத்திருப்பதற்கு ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்த அவர், சித்திக்கை சட்டரீதியாகச் செயல்பட விடாமல் தடுப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் படி  அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல் என்று  கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு என்பது ஒரு லாப நோக்கற்ற, அரசு சாரா அமைப்பாகும், இது நியூயார்க்கில் அமைந்துள்ளது, உலகம் முழுவதும் உள்ள பல நிருபர்கள் இதில் இணைந்து செயல்படுகின்றனர். சிபிஜே பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அமைப்பாகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்