Aran Sei

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு – மதவாதத்தை ஒழிக்க அறைகூவல்

Image Credits: Sunday Guardian

 “அரசியலிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் மதத்தைப் பிரிக்காவிட்டால், மதச்சார்பின்மையை பாதுகாக்கவோ, காப்பாற்றவோ அல்லது சரியான அர்த்தத்தில் செயல்படுத்தவோ முடியாது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

இந்த ஆண்டு அக்டோபர் 17 கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். இது அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் தாஷ்கண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பிரிவு உருவான நூறு ஆண்டுகளை குறிக்கிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100 வது ஆண்டைக் குறிக்கும் சிபிஎம்-ன் மாநில அளவிலான கொண்டாட்டங்களை காணொளி மாநாடு மூலம் தொடக்கி வைக்கும் போது சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

“ஆர்எஸ்எஸ் போன்ற சக்திகள் நாட்டின் வரலாறு, கலாச்சாரம், கல்வி கொள்கையை மாற்றுவதன் மூலம்  ‘இந்தியாவை கடந்த காலத்தின் இருளில் கொண்டு செல்ல’ விரும்புகின்றன, அதன் பன்முக தன்மையான கலாச்சார அடையாளத்திற்கு பதிலாக  இந்தியாவுக்கு ஒரு  ‘ஒற்றை இந்து அடையாளத்தை’ வழங்க முயற்சிக்கின்றன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“மதச்சார்பின்மை என்பது மதத்தை அரசியலிலிருந்தும் அரசிலிருந்தும் பிரிப்பதாகும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனது மத  நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு, மீறமுடியாத அந்த உரிமையைப் பாதுகாப்பது சட்டம் மற்றும் அரசின் கடமையாகும், கம்யூனிஸ்டுகள் அதைப் பாதுகாக்க எப்போதும் ஆதரவளிப்பார்கள்”என்று யெச்சூரி கூறியுள்ளார்.

“அரசுக்கோ அரசாங்கத்துக்கோ எந்த மதமும் இல்லை. தனி நபர்களின் மதத்திற்கான அனைத்து உரிமைகளும், அவர்களின் மத நடைமுறைகளுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் நம்பிக்கையும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

“எவ்வாறாயினும், நம் அரசியலமைப்பில் மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களுக்கும் சமம் எனும் பொருளைக் கொண்டுள்ளது. எல்லா மதங்களுக்கும் சமத்துவம் என்று நீங்கள் கூறும் தருணம், பெரும்பான்மையான மக்கள் குழுசேர்ந்திருக்கும் மதம் மற்றவர்களை விட அதிக நன்மையைக் கொண்டிருப்பது இயல்பானது. அது உள்ளார்ந்த ஆபத்துக்களைக் கொண்டுள்ளது, அதை தான் நாம் இன்று காண்கிறோம். ஆகையால், அரசியலிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் மதத்தைப் பிரிக்காவிட்டால், மதச்சார்பின்மையை பாதுகாக்கவோ, காப்பாற்றவோ அல்லது சரியான அர்த்தத்தில் செயல்படுதவோ முடியாது”என்று சிபிஎம்-ன் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

” ‘என் கடவுள் உங்கள் கடவுளை விடச் சிறந்தவர்’ எனும் தர்க்கம் தான் வகுப்புவாத துருவமுனைப்பு மற்றும் வகுப்புவாத மோதல்களுக்கு அடிப்படையானது” என்று அவர் கூறினார்.

“இந்தியா அதன் கடந்த கால இருளுக்குள் செல்வதிலிருந்து தடுக்கும் போரில் இணையவும். சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவந்து சோசலிசத்தை நோக்கி நகர்வதன் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தைப் பிரகாசத்திற்கு கொண்டு செல்லவும்”என்று கூறி அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்