Aran Sei

பாஜக ஆளும் மாநிலங்களின் பசு நல வரிகள் – மனித நலனின் நிலை என்ன?

சுக்களின் நலனுக்காக, பசு அமைச்சரவை ஒன்றை ஏற்படுத்தி, பசுக்களுக்கான நலவாழ்வு நிதி திரட்ட சிறப்பு வரி விதிக்கப் போவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ள நிலையில் மத்திய பிரதேசம் மனித வள மேம்பாட்டு குறியீட்டு எண்களில் இந்தியாவிலேயே மிகவும் மோசமான நிலையில் இருப்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா சுட்டிக் காட்டுகிறது.

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், உள்துறை, வருவாய்த் துறை, கால்நடை வளர்ப்பு, விவசாயத் துறை, உள்ளாட்சித் துறை, வனத்துறை ஆகியவற்றை இணைத்து, பசு நல அமைச்சகத்தை உருவாக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பசு நலனுக்காக ஒரு சிறப்பு கூடுதல் வரி விதிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

`பசுக்களைப் பாதுகாக்க கோமாதா வரி’ – மத்திய பிரதேச பாஜக அரசின் அடுத்த திட்டம்

இந்நிலையில், மத்திய பிரதேச மாநில பள்ளிகளில் 2.57% பள்ளிகளில் மட்டுமே செயல்படும் கணினிகள் உள்ளதாகவும், இந்திய அளவில் பார்க்கும் போது இது 20.3% என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. டெல்லியில் 87.5% ஆகவும், கேரளாவில் 72.4% ஆகவும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் 56% ஆகவும் உள்ளது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 28 கல்லூரிகள் என்ற சராசரியுடன் ஒப்பிடும் போது மத்திய பிரதேசத்தில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 24 கல்லூரிகள் மட்டுமே உள்ளன.

மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது, மேலும் குழந்தை பிறப்பில் தாய் இறக்கும் வீதத்தில் மூன்றாவது அதிக வீதத்தைக் கொண்டுள்ளது எனவும் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்த புள்ளி விபரங்கள் கல்வியிலும் மருத்துவத்திலும் அதிக பணம் செலவிட வேண்டியதன் அவசியத்தை காட்டுகின்றது என்று கருத்து தெரிவித்துள்ளது.

அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவில் முட்டைக்கு பதிலாக பால் வழங்கப் போவதாக சிவராஜ் சிங் சௌகான் அறிவித்திருப்பதும் துரதிர்ஷ்டவசமானது என்று அந்நாளிதழ் கூறுகிறது. அரசு, மக்களிடமிருந்து திரட்டும் வரிப்பணத்தை மனித வளத்தை பெருக்குவதற்கு பயன்படுத்த வேண்டுமே தவிர அதை புறக்கணித்து விட்டு பசு நலத்துக்காக வரி வசூலித்து செலவழிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இமாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசாங்கம் பிப்ரவரி 2019-ல் பசு சேவை ஆணையத்தை உருவாக்கியது. பசு நலனுக்கான நிதி திரட்டுவதற்காக மார்ச் 2018 முதல் மது விற்பனையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ 1 பசு வரி விதித்து, இதுநாள் வரை ரூ 8 கோடி திரட்டப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளதாக பிசினஸ் ஸ்டேண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்