Aran Sei

கர்நாடக மேலவையில் பாஜகவிற்கு பலமில்லை – நிறைவேறுமா பசுவதை தடுப்புச் சட்டம்?

credits : pti

ர்நாடக சட்டசபையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பசுவதை தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளிநடப்பு செய்த நிலையில், கூட்டத்தொடரைப் புறக்கணிப்போம் என சித்தாரமையா தலைமையிலான எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுஹான் தாக்கல் செய்த இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தேசிய விலங்காகப் `பசு’ வை அறிவிக்கக் கோரி ‘பாத யாத்திரை’

பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதாவின் 2020 கீழ் பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஐம்பதாயிரம் முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் பசுவதை மற்றும் கால்நடைப் பாதுகாப்பு மசோதா 2020, சட்டமன்றத்தில் நேற்று (10-12-20) நிறைவேற்றப்பட்டாலும், இன்று சட்ட மேலவையில் மசோதாவை விவாதத்திற்கு முன்வைக்க பாஜக அரசு எந்த விருப்பமும் காட்டவில்லை என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

credits : the hindu
credits : the hindu

இந்த மசோதா இன்றைய நிகழ்ச்சி நிரலில் இருந்ததால், எதிர்க்கட்சியின் மேலவை தலைவர் பிரதாப்சந்திர ஷெட்டி ஆளும் கட்சியிடம் மசோதாவை விவாதத்திற்கு முன்வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். மசோதாவின் விவாதத்தை வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளலாம் என்று அவைத் தலைவர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி கூறியுள்ளார்.

மசோதா சட்டமன்றத்தில் முன்மொழியப்படும் போதே சட்ட மேலவையில் பாஜகவிற்குப் பெரும்பான்மை இல்லை. எனவே தோல்வியை உணர்ந்த பாஜக சட்ட மேலவையில் மசோதாவைக் கொண்டு வரத் தயக்கம் காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டசபையில் இந்த மசோதாவை அவசர அவசரமாகத் தாக்கல் செய்து நிறைவேற்றிய ஆளுங்கட்சி இன்று அதை மேலவையில் முன்வைக்க மறுப்பது ஆச்சரியமாக இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது பசுவதை தடுப்புச் சட்டம்

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்கக்கூடும் என்பதை பாஜக உணர்ந்துள்ளது எனக் கூறிய அவர் “நாங்கள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்க்கத் தயாராக இருக்கிறோம், இந்த மசோதா ஒரு விரிவான ஆய்வுக்காகக் கூட்டுத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கோரஇருக்கிறோம்” எனவும் எஸ்.ஆர்.பாட்டீல் கூறியுள்ளார்.

சட்ட மேலவையின் உணவு இடைவேளை வரை இந்த மசோதாவை மேலவையில் முன்வைக்கத் தயாராக இருந்த பாஜக, மசோதாவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சி காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றிணைந்திருப்பதை உணர்ந்த பின்னர் தங்கள் திட்டத்தை மாற்றிக்கொண்டுள்ளனர் எனத் தகவல்கள் கிடைத்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவாளர்களைச் சந்தித்து இந்த மசோதாவிற்கு எதிரான ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடகச் சட்ட மேலவையில் பசுவதைத் தடுப்புச் சட்ட மசோதாவிற்கு எதிராக 36 பேரும், பசுவதை தடுப்புச் சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 30 பேர் மட்டுமே உள்ளனர். இதனால்தான் பாஜக பின் வாங்கியுள்ளது என காங்கிரஸ் உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.

மாட்டிறைச்சியே சிந்து சமவெளி மக்களின் விருப்ப உணவு – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

2017 ஆம் ஆண்டு மே மாதம், மாட்டிறைச்சி விற்பதற்குத் தேசிய அளவில் தடை விதித்தது மத்திய அரசு. மாட்டிறைச்சி உட்கொள்பவர்கள் அதிகம் இந்தியாவில் இருப்பதனால், மத்திய அரசின் இந்தத் தடைக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. இன்று, இந்தியாவில் பதினொன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லாத போதிலும், பல மாநிலங்களில் பசு, காளை, எருது ஆகியவற்றின் இறைச்சியை விற்க/உண்ண தடை இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில், பசுவதைக்கு எதிரான சட்டங்களும், பசுக்காவல் அமைப்புகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்