Aran Sei

கொரோனா கடவுள் அளித்த வரம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Credits: The Print

கொரோனா தொற்று ஏற்பட்டது கடவுள் அளித்த வரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் மற்றும் மனைவி மெலினா ட்ரம்ப்-க்கு அக்டோபர் 1-ம் தேதி கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. உடனடியாக இரண்டு பேரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

ஆனால், ட்ரம்ப்-க்குக் காய்ச்சல் அதிகரித்ததால் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகையிலிருந்து மருத்துவமனைக்குச் சென்றார். நான்கு தினங்கள் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் இருந்த ட்ரம்ப், திங்கட்கிழமை மாலை ஹெலிகாப்டரில் மருத்துவமனையிலிருந்து மீண்டும் வெள்ளை மாளிகை வந்தடைந்தார்.

ட்விட்டரில் காணொலி ஒன்றை வெளியிட்டு, ”கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், நான் கொரோனாவை எதிர்கொண்டு குணமாகி இருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததைப் போன்ற உற்சாகமாக உணர்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

மருத்துவமனையிலிருந்து வந்ததும் ட்ரம்ப் வெள்ளை மாளிகை பால்கனியில் நின்றபடி, அணிந்திருந்த முகக்கவசத்தைக் கழற்றிவிட்டுக் கையசைத்ததை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் உட்பட பலர் விமர்சித்து இருந்தனர்.

இதனிடையே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆறாம் நாள் அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகை அலுவலகம் சென்றுள்ளார்.

இன்று ட்ரம்ப் வெளியிட்டுள்ள காணொலியில், “அமெரிக்காவில் நாடு முழுவதும் சிறந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பணி மகத்தானது.” என்று பாராட்டிப் பேசினார்.

”கடந்த சில மாதங்களாக ஆராய்ச்சியாளர்களும் மருத்துவ ஆய்வகங்களும் அசாத்தியமான முறையில் செயல்பட்டு வந்துள்ளார்கள். விரைவில் மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கும்.” என்றார்.

மேலும், ”ஜான்சன் அண்ட் ஜான்சன், மோடெர்னா, ஃபைசர் உள்ளிட்ட பல மருந்து நிறுவனங்கள் தடுப்பு மருந்து உற்பத்தியின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. தேர்தல் முடியும்போது நம்மிடம் தடுப்பு மருந்து இருக்கும்.” என்று உறுதியளித்துள்ளார்.

 

மேலும் அவர், “எனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது கடவுள் அளித்த வரம். எனக்கு அளிக்கப்பட்ட மருந்து மிக நன்றாகச் செயல்பட்டு, நான் உடனடியாகக் குணமாகி இருக்கிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.

”மருத்துவமனைக்குச் செல்லும்போது உடல்நலம் குன்றி இருந்தேன். ஆனால் 24 மணிநேரத்தில் நான் குணமாகிவிட்டேன். நாட்டின் அதிபருக்குக் கிடைத்த சிகிச்சையே நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

”இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவிவருவது சீனாவின் குற்றம். உலக நாடுகளுக்கு விளைவித்துள்ள சேதாரத்துக்குச் சீனா தகுந்த விலை கொடுக்க வேண்டி வரும்.” என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

“அமெரிக்காவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள், டிரம்ப் தனக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட பிறகு நடந்து கொண்டது அக்கறையைக் காட்டவில்லை, அலட்சியத்தைக் காட்டுகிறது” என்று கருதுவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது

இதனிடையே துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான நேரடி விவாதம் நேற்று நடந்தது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் பென்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Credits: The Wire

நிகழ்வில் பேசிய கமலா ஹாரிஸ், ”கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை, சுகாதாரத்துறை வல்லுநர்கள், மருத்துவர்கள் பரிந்துரைத்தால் நான் முதல் ஆளாக எடுத்துக்கொள்வேன். ஆனால், டொனால்டு ட்ரம்ப் கூறினால், எடுத்துக்கொள்ளமாட்டேன்.” என்று கூறியிருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்