மூன்று விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தைத் தீர்த்து வைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் முயற்சிகளை எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் கண்டனம் செய்துள்ளது.
“அரசியலிலும் கொள்கையிலும் நடுவர் என்ற பாத்திரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும் போது அது தவறிழைக்கிறது.” என்று கூறியுள்ள எகனாமிக் டைம்ஸ் தலையங்கம், நீதிமன்றத்தின் வேலை, ” சட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது. எனவே, விவசாயம் தொடர்பான சட்டமியற்றும் மாநிலங்களின் உரிமையில் மத்திய அரசு சட்டமியற்றுவது தொடர்பாகவோ, விவசாயச் சட்டங்களின் கீழான வழக்குகளை நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது தொடர்பாகவோ நீதிமன்றம் விசாரிக்கலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த நவம்பர் இறுதி முதல், டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராடும் விவசாயிகளை போராட்டக் களத்திலிருந்து அகற்ற வேண்டும் எனக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன் மீதான விசாரணை நேற்று தொடர்ந்த போது, தலைமை நீதிபதி அரவிந்த் போப்டே தலைமையிலான அமர்வு, மத்திய அரசு விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைக்கா விட்டால், அவ்வாறு தாங்கள் உத்தரவிடப் போவதாக கூறியிருந்தது. மேலும், இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க ஒரு கமிட்டியை அமைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது.
“அடிப்படை சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் வெளிப்படையாக மீறும் “லவ் ஜிகாத்” சட்டங்கள் தொடர்பான அதன் மௌனத்துடன் ஒப்பிடும் போது, இவ்வாறு கொள்கை தொடர்பாக தீர்ப்பு வழங்குவதற்கான உச்சநீதிமன்றத்தின் துடிப்பு உறுத்தலாக உள்ளது.” என்று எகனாமிக் டைம்ஸ் தலையங்கம் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்
“இரண்டு வயது வந்த நபர்கள், சாதி மத வேறுபாட்டை பொருட்படுத்தாமல், காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, ஜனநாயக இந்தியா அவர்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் தண்டிக்கப்படும் போது நீதிமன்றம் ஏன் தலையிடவில்லை?” என்று அது கேள்வி எழுப்பியுள்ளது.
“விவசாயிகளின் போராட்டத்தைத் தீர்த்து வைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் முன்முயற்சிகள் உன்னதமான நோக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை.” என்றும், ” விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களையும் அவற்றுக்கு எதிரான வாதங்களையும் கேட்பதற்கு ஒரு குழுவை அமைத்து, குழு தனது முடிவுகளை வந்தடைவது வரை சட்டங்களை நிறுத்தி வைக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதன் மூலம் உச்சநீதிமன்றம் இதைச் செய்ய முயற்சிக்கலாம்.” என்று உச்சநீதிமன்றத்தின் முயற்சியை தொகுத்துக் கூறியுள்ளது.
இந்தியாவில் உணவுச் சந்தையை பிடிக்கத் துடிக்கும் மேற்கத்திய கார்ப்பரேட்டுகள் – உத்சா பட்நாயக்
ஆனால், “விவசாயத் துறையின் தற்போதைய நிலைமைகளுக்கு பொருத்தமான கொள்கையை இந்த விவசாயச் சட்டங்கள் வெளிப்படுத்துகின்றனவா என்று தீர்மானிப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை.” என்று கூறியுள்ள எகனாமிக் டைம்ஸ், “விவசாயிகள் தமது வீடுகளிலிருந்தும், குடும்பங்களிலிருந்து வெகு தொலைவில் போராடுவது குறித்து நீதிபதிகள் தனிநபர்களாக அனுதாபம் கொள்வது வரவேறகத்தக்கது. ஆனால், நீதித்துறை தீர்ப்பு வழங்குபவர்கள் என்ற வகையில் விவசாயிகளை போராட்டத்தை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பச் செய்வது உச்சநீதிமன்றத்தின் வேலை இல்லை – அது அரசியலின் வேலை.” என்று உறுதிபட தெரிவித்துள்ளது.
ஜனவரி 26 பேரணி – லட்சம் டிராக்டர்களை அணிதிரட்டும் விவசாயிகள் சங்கங்கள்
“அரசாங்கம் திறமையாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா அல்லது மோசடியான நோக்கத்துடன் நடந்து கொள்கிறதா என்பதை தீர்மானிப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை.” என்று சுட்டிக்க்காட்டியுள்ள இந்தத் தலையங்கம், “அரசியல் என்பது மக்களும் அரசாங்கமும் தொடர்பு கொள்ளும் களமாகும். சில நேரங்களில், தலைவர்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். அப்போது, அவர்களது பொறுப்பை சுட்டிக்காட்டுவது மக்களின் கடமை. அவ்வாறு செய்யும் போது எந்தச் சட்டங்களும் மீறாத வரையில் அதைச் செய்வதுதான் சரியானது.” என்று விளக்கியுள்ளது
விவசாயச் சட்டங்கள் தொடர்பான மோதலைத் தீர்த்து வைப்பதற்கு என்ன உத்தியை பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம். அதன் மீது மக்கள் தமது தீர்ப்பை வழங்குவார்கள். இதுதான் ஜனநாயகத்தில் அரசியல் நிகழ்முறையின் பகுதியாகும்.” என்று அரசியல் நடைமுறை தொடர்பாக எகனாமிக் டைம்ஸ் கூடுதலாக விளக்கம் அளித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.