Aran Sei

`உமர் காலித்துக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு’ – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Image Credits: Bar And Bench

ஜேஎன்யூ முன்னாள் மாணவரும் செயற்பாட்டாளருமான உமர் காலித் மற்றும் ஜேஎன்யூ பிஎச்டி மாணவர் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் காவலை டெல்லி நீதிமன்றம் நவம்பர் மாதம் 20-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எதிராகக் கடந்த பிப்ரவரி மாதம் பெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறைச் சம்பவங்களைத் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் கடந்த மாதம் 13-ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படுவதற்கு முன் ஒரு காணொலி அறிக்கையை வெளியிட்ட உமர் காலித் “நீங்கள் இந்தக் காணொலியைப் பார்க்கிறீர்கள் என்றால், நான் கைது செய்யப்பட்டுள்ளேன் என்று அர்த்தம். இந்தக் காணொலியின் மூலம் உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். டெல்லிக் கலவரம் தொடர்பான விசாரணையில் காவல்துறை கலவரத்தைத் தூண்டியவர்களைக் கைது செய்யவில்லை. அவர்களை விசாரிக்கக் கூட அழைக்கவில்லை. மறுபுறம், அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பவர்கள், குறிப்பாக சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை எதிர்த்துப் போராடுபவர்கள் மீது ஆதாரமும் இல்லாமல் வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.

கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத்துக்கு முன் காணொலி உரையாடுதளம் வழியாக நேற்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, டெல்லிக் காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அமித் பிரசாத், இவர்களுக்கு 30 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கோரி ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார்.

விசாரணையின் போது பேசிய உமர் காலித், “எனக்குப் பாதுகாப்பு தேவை. ஆனால் பாதுகாப்பு என்பது என்னால் வெளியேறவே முடியாத பாதுகாப்பு அல்ல. இது ஒரு தண்டனை போன்றது. எனக்கு ஏன் இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாகவும், எப்போதுமே சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு காரணமாக, உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உமர் காலித் கூறினார் என ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

உமர் காலித்தின் வாதத்தை விசாரித்த நீதிமன்றம் இறுதியில் திஹார் சிறைக் கண்காணிப்பாளரிடம் காலித்தை மற்ற கைதிகளுக்கு இணையாக நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, டெல்லி நீதிமன்றம் இவர்களின் நீதிமன்றக் காவலை 2020 நவம்பர் 20 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்