Aran Sei

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் : ஜாமியா மாணவருக்குப் பிணை மறுப்பு

Image Credits: National Herald

டகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர், ஆசிப் இக்பால் தன்ஹாவின் பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எதிராகக் கடந்த பிப்ரவரி மாதம் பெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறைச் சம்பவங்களைத் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆசிப் இக்பால் கைது செய்யப்பட்டார்.

கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், ஆசிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முதன்மையான உண்மை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று கூறி இந்தப் பிணை தள்ளுபடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த வகுப்புவாத கவரத்தில் கிட்டத்தட்ட 53 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர்.

டெல்லி கலவரம் குறித்து, மே மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியுடன் கலந்துகொண்ட பேசிய ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்ஹையா குமார், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்துப் போராடிய சமூக செயற்பாட்டாளர்களை டெல்லி காவல்துறை ஏன் கைது செய்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, “சிஏஏவுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரசுக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனும் செய்தியை அனுப்பும் நோக்கோடு இவை நடைபெறுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்