Aran Sei

ஒரு பெண் தனது விருப்பத்தோடு எடுத்த முடிவில் யாரும் தலையிட முடியாது – கல்கத்தா உயர் நீதிமன்றம்

18 வயதை கடந்த பெண் தனது விருப்பப்படி திருமணம் செய்துகொண்டு வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு மாற முடிவு செய்தால் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

19 வயது இந்துப் பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞரை மணந்துகொண்டு மதம் மாறியுள்ளார். அப்பெண்ணின் தந்தை கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

அப்பெண்ணின் தந்தை தனது மகளை கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அந்தப் பெண் மாவட்ட நீதிபதிக்கு முன் அளித்த வாக்குமூலத்தில், தனது விருப்பத்துடன் தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தனது குடும்பத்தினருடன் திரும்பிச் செல்ல விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பெண் இறுதியாகத் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக மாவட்ட நீதிபதியைச் சந்திக்கவிருந்தார். இதை அடுத்து, தனது மகள் சாட்சியமளிக்க தயங்குவதாக அப்பெண்ணின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நீதிபதியைச் சந்திப்பதற்கு முன்பு, தனது மகள் மீதான அழுத்தம் குறித்த அவரது அச்சங்களைத் தீர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தந்தையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, டிசம்பர் 23 அன்று அந்தப் பெண்ணுக்கும், உயர்நீதிமன்றத்தின் கூடுதல் பொது வழக்கறிஞருக்கும் இடையில் ஒரு சந்திப்பை நடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அப்போது, “ஒரு வயதுவந்தவர் தனது விருப்பப்படி திருமணம் செய்துகொண்டு, தனது தந்தை வீட்டிற்கு திரும்பக் கூடாது என்று முடிவு செய்தால், இந்த விஷயத்தில் எந்தக் குறுக்கீடும் இருக்க முடியாது” என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில், சர்ச்சைக்குரிய மதமற்று தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள வேளையில், கொல்கத்தாவில் இந்த வழக்கு நடந்து வருகிறது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்